’குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரைப்பட விமர்சனம்

யோகி பாபு, செந்தில், சரவணன் ,மயில்சாமி, லிஸி ஆண்டனி, சுப்பு பஞ்சு, இமயவர்மன் ,அத்வைத் ஜெய் மஸ்தான், அஷ்மிதா சிங், சித்ரா லெட்சுமணன் நடித்துள்ளனர். என் சங்கர் தயாள் இயக்கியுள்ளார். இசை சாதகப் பறவைகள் சங்கர்.மீனாட்சி அம்மன் மூவிஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் அரசியல் பேசினால் ,எப்படி இருக்கும் என்கிற கற்பனையின் விரிவே இப்படம்.

அரசியல்வாதி யோகி பாபுவுக்குத் திருமணமாகிறது. ஒரு குழந்தையும் இருக்கிறது. வீட்டு வேலைக்கு வந்த வடமாநிலப் பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்கிறார். இதனால் அவருக்கும் ஒரு குழந்தை  பிறக்கிறது. அதனால் அந்தப் பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள்.
இரண்டு தாரத்துப் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள்.தன் தந்தையைப் போல் அரசியல்வாதியாகி வளர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.அதே கனவுடன் வளர்கிறார்கள்.
அவர்களுக்குள் ஒரு போட்டி நிலவுகிறது.

அவர்கள் கனவு நிறைவேறியதா இல்லையா? என்பதைத்
தமிழகத்தின் சமகால அரசியலையும் குடும்பத்தின் ஆதிக்கத்தையும் மையமாக்கி நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சித்திருக்கும் படம்தான் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’.

யோகி பாபு தான் கதையின் நாயகன் என்றாலும் படத்தில் ஆங்காங்கே சில காட்சிகளில் மட்டும் தலை காட்டி விட்டுச் சென்று விடுகிறார்.நட்சத்திர பலம் வேண்டி பல இடங்களில் அவரை ஒட்ட வைத்திருக்கிறார்கள். இது வெளிப்படையாகத் தெரிகிறது. யோகி பாபு வழக்கம் போல், உடல் கேலி செய்து சிரிக்க வைக்கிறார். அம்முயற்சியில் சில இடங்களில் மட்டும் வெற்றி பெறுகிறார்.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் இமய வர்மன் , அத்வைத் ஜெய் மஸ்தான் சினிமா கூச்சம் இல்லாமல்.இருவரும் தைரியமாக நடித்துள்ளனர்.
வயதை மீறிய காட்சிகளில் கூட அவர்கள் பயமின்றி நடித்து உள்ளனர்.

சிறுமி ஹரிகா பெடடா
ஜெயலலிதாவின் பாத்திரத்தை நினைவூட்டும் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தோற்றமும் நடிப்பும் படத்திற்குப் பலம் சேர்க்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் முகம் காட்டியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், அரசியல் கட்சித் தலைவராக வந்து அசத்தியுள்ளார்.சாதாரண வசனங்களில் கூட கலகலப்பூட்டி கைதட்டல் பெறுகிறார்.

சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது வேலையைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்குப் பலம்.

ஒளிப்பதிவாளர் ஜெ.லக்‌ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவிலும் குறை ஒன்றுமில்லை.

எழுதி இயக்கியிருக்கும் என்.சங்கர் தயாள், தமிழகப் போட்டி அரசியல் மற்றும் குடும்ப அரசியலை, சின்னஞ்சிறுவர்கள் மூலம் நகைச்சுவையாகச் சொல்ல முயன்றுள்ளார்.

இயக்குநரின் அரசியல் பகடிகள், கேலிகள் காட்சிகள் மூலம்  புரிந்தாலும், அதன் வெளிப்பாடாக வரவேண்டிய நகைச்சுவை தான் பெரிதாக எடுபடவில்லை.

சிறுவர்களிடம் வேலை வாங்கிய விதம் நன்று. பள்ளியில் ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தும் மாணவர் தலைவர் தேர்தல் மூலம் அவர்களுக்கிடையே ஏற்படும் போட்டி, அதில் நடக்கும் சதி, ஏமாற்றம்,அதன் விளைவுகள் ஆகியவற்றை நகைச்சுவையாகச் சொல்லி பார்வையாளர்களைச் சிரிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் என்.சங்கர் தயாள்.

மொத்தத்தில், ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ இருக்கும் குறைகளை மறந்து சிரிக்கலாம்.