யோகி பாபு கதைநாயகனாக நடித்திருக்கும் படம் ’கூர்கா’ . இதில் சார்லி, ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன்,மனோபாலா, ராஜ்பரத், எலிசா எர்கார்ட் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ திரைப்படத்தை இயக்கியவர். ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 300 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு யோகி பாபுவின் எந்தப் படமும் இப்படி அதிகமான திரையரங்குகளில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் விநியோகம் செய்துள்ளது.
கூர்கா படம் எப்படி இருக்கிறது ? இதன் கதை என்ன?
கூர்கா சமூகத்தில் பிறந்தவன் பகதூர் பாபு. போலீஸாக விரும்புகிறான். பலமுறை முயற்சி செய்தும், அவனால் அதற்கான தகுதியைப் பெற முடியவில்லை.உடல் ஒத்துழைக்காததால், காவல்துறையில் சேர முடியாமல், சக்திமான் செக்யூரிட்டி சர்வீஸில் பணியில் சேருகிறான் பகதூர் பாபு .அதோடு அமெரிக்க தூதரக அலுவலர் எலிசா மீது காதலும் பிறக்கிறது.
அவன் செக்யூரிட்டியாகப் பணி புரியும் மெட்ராஸ் மால் எனும் பேரங்காடியை, ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கும்பல் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது. சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் காவல்துறையினரின் குடும்பத்தினர் என்பதால், அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது போலீஸ். சிக்கிய பிணைக்கைதிகளை கூர்கா இனத்து பகதூர் பாபு எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதுதான் படத்தின் கதை.
இது சமகால அரசியலையும், சினிமா பிரபலங்களையும் காட்சிகளில் பிரதிபலித்து ,
சிரிக்கவைக்கும் நோக்கில் கேலி கிண்டல் செய்யும் வகையில் உருவாகியுள்ள படம் எனலாம்,
நடிகர் சிவகுமார் செல்ஃபி எடுத்தவரின் செல்போனைத் தட்டி விட்டது தொடங்கி , நித்யானந்தா, டி.வி சேனல்கள் ஆகியவை வரை சமகாலச்சம்பவங்கள் மீதான தனது பார்வையை ‘கூர்கா’ படம் மூலம் காட்சிகளாக வெளிப்படுத்தியிருக்கிறார் சாம் ஆண்டன். இவை மூலம் சிரிக்கவும் வைக்கிறார்.
யோகிபாபுதான் கதை நாயகன் பகதூர் பாபு. முடிந்த வரை சுமைதாங்கி நிறுத்துகிறார் படத்தை.பல ரசம் காட்ட வாய்ப்புள்ள பாத்திரம்.
உசேன் போல்டாக நடித்திருக்கும் சார்லி, தான் ஏன் செக்யூரிட்டியாகப் பணிபுரிகிறேன் எனச் சொல்லும் போது அவரது பின்னணியிலுள்ள உண்மை மனதைக் கனக்கச் செய்கிறது.
ஆர்டிஎக்ஸ்அலெக்ஸாக வரும் ஆனந்த்ராஜைப் பார்த்தவுடனே மக்கள் சிரிக்கத் தொடங்கிவிடுகின்றனர். மொட்டை மாடியில் வைத்து, யோகிபாபுவுடன் இணைந்து ஆனந்த்ராஜ் வெடிகுண்டை வலுவிழக்கச் செய்யும் காட்சி செம காமெடி. படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக, அண்டர்டேக்கர் என்ற பெயருடைய நாய் நடித்துள்ளது. அதே போல், பகதூர் பாபுவாகிய யோகிபாபுவின் தாத்தா உபயோகித்த பழைய மாடல் நோக்கியா போனும் கூட.

படத்தின் முதற்பாதி அவ்வளவாகப் பரபரக்கவில்லை . ரவி மரியாவின் சத்தமான போலீஸ் ட்ரெயினிங்கும், அதில் யோகிபாபு ஓபி அடிப்பதும், கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டே இருப்பதுமென படம் தொடங்குகிறது. மெட்ராஸ் மாலுக்கு யோகிபாபு வந்து சேர்ந்ததுமே படம் பரபரப்பாகிறது.பார்வையாளர்களை ஈர்க்கிறது விறுவிறுப்பில்.
படத்தின் இரண்டாம் பாதி மெல்ல வேகமெடுத்து முழு நகைச்சுவை விருந்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது. யோகிபாபுவின் ஒன்லைனர்ஸ் போலவே, ஹெச்.ராஜாவைக் கலாய்க்கும் மயில்சாமியின் ‘வைலன்ட்’ வீரமணி பாத்திரம், நித்தியானந்தாவைக் கலாய்க்கும் நமோ நாராயணின் சந்தியானந்தா பாத்திரம் எனப் படத்தில் பல கலகலப்புகள் உள்ளன.பொதுமக்களைச் சுடவும் இந்த அரசாங்கம் தயங்காது என்பதைக் காவல்துறை அதிகாரி ரவிமரியாவின் மஞ்சள் உடையணிந்த தூத்துக்குடி பாய்ஸ் மூலம் பதிந்திருப்பது சிறப்பு.
பின்னணி இசை ஓகே ரகம், பாடல்கள் மிதமான ரகம். காமெடி கலகலப்பில் பெரிதாகஅதற்கான அவசியமும் இல்லை .தன் கேமராமூலம் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் கிருஷ்ணன் வசந்த். 

படத்தில் சிரித்து மகிழ ஏராளமானவை வைத்துள்ளார் இயக்குநர். படம் முடிந்து யோசித்தால், ஏன் சிரித்தோம் என சரியாக எதுவும் நினைவில் இருக்காது. ஆனாலும், படம் பார்க்கும் பொழுது பார்வையாளர்கள் பல இடங்களில் கலகலப்பாகச் சிரிப்பார்கள். அதுதான் இயக்குநரின் வெற்றி.
இது ஒரு பொழுதுபோக்குப்படம். மொத்தத்தில் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரிக்க விரும்புவோர், தாராளமாக ‘கூர்கா’வைப் பார்க்கலாம். படம் பார்ப்பவர்கள் 100% சிரிக்காம வரமாட்டார்கள்.