ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா , ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ,ஆமீர் கான், ரெபா மோனிகா ஜான் ,கண்ணா ரவி, மோனிஷா பிளஸ்ஸி, காளி வெங்கட், சார்லி, ஐயப்பா பி சர்மா, ரச்சிதாராம்,லொள்ளு சபா மாறன், திலீபன், தமிழ், ரிஷிகாந்த்,பூஜா ஹெக்டே நடித்துள்ளனர்.
கதை வசனம் எழுதி லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு க்ரிஷ் கங்காதரன், இசை அனிருத், எடிட்டிங் பிலோமின் ராஜ்,சண்டைப் பயிற்சி அன்பறிவ், தயாரிப்பு சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் .
ரஜினியின் ஐம்பதாவது திரையுலக ஆண்டையொட்டி வந்திருக்கும் படம் ‘கூலி’.
படத்தின் கதையைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்படிச் செல்லலாம்.சென்னையில் ஆண்களுக்கான விடுதி தேவராஜ் மேன்சன் என்ற பெயரில் நடத்தி வருகிறார் ரஜினி.தன்னுடைய நண்பன் ராஜசேகர் அதாவது சத்யராஜ் இறந்து விட்டதாக செய்தி வருகிறது. துக்கம் விசாரிக்க விசாகப்பட்டினம் வருகிறார்.அங்கே சென்ற அவருக்குச் சந்தேகம் எழுகிறது.சத்யராஜ் இயற்கையில் மரணமடையவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற உண்மை தெரிகிறது. அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பொருள்களை ஏற்றுவது இறக்குவது என்கிற வேலைகள் நடுவில் சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன.
கொலையாளிகளைத் தேடி ரஜினி செல்லச் செல்ல மர்ம முடிச்சுகள் விழுகின்றன,அப்புறம் ரஜினி என்ன செய்வார் என்பது உங்களுக்கே தெரியும் அல்லவா?ஒவ்வொன்றாக அவிழ்த்து உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு ரஜினி எடுக்கும் ஆக்ஷன் அவதாரம் தான் 157.59 நிமிடங்கள் கொண்ட ‘கூலி’ படத்தின் திரைக்கதை செல்லும் பாதை.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தொடங்குகிறது படத்தின் கதை.படத்தின் ஆரம்பத்திலேயே கொடூரமான கொலைகளை அரங்கேற்றுகிறார்கள். துறைமுகத்தை தனது கைக்குள் வைத்திருக்கிறார் சைமன் என்கிற நாகார்ஜுனா .அவரது தளபதி தயாளாகக் கோலோச்சுகிறார் செளபின் ஷாஹிர். வாட்ச் கடத்துகிறார்கள் என்றால் சட்டவிரோத பொருளைக் கடத்துகிறார்கள்.அது என்ன பொருள் என்பது அதிர்ச்சி ஊட்டும் ரகம்.
சத்யராஜுக்கும் கடத்தல் கும்பலுக்கும் என்ன வகையிலான தொடர்பு? சத்யராஜ் கொல்லப்பட வேண்டிய காரணம் என்ன? திரை மறைவில் இருக்கும் நிஜமான வில்லன் யார்? ரஜினிக்கும் சத்யராஜுக்குமான உறவு எப்படிப்பட்டது? 30 வருடங்களுக்கு முந்தைய ரஜினியின் வாழ்க்கை எப்படி இருந்தது ?அப்போது அவர் என்னென்ன செய்தார்?இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறது படம்.பவர் ஹவுஸ் என்றால் என்ன? கூலி நம்பர் 5821 என்றால் என்ன?
இவை படத்தில் எப்படி இடம் பெறுகின்றன? என எழும் கேள்விகளுக்குப் பதில்களும் உண்டு.
படம் ஆரம்பித்த 15 நிமிடங்களுக்கு பிறகு தான் ரஜினிமுகம் காட்டப்படுகிறது.லாஜிக் பற்றிக் கவலைப்படாமல் நம்பகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வைக்கப்படும் காட்சிகளில் ரஜினி நடித்தால் மட்டும் தான் ஏற்றுக் கொள்வார்கள்.அப்படித்தான் இதிலும் வைத்துள்ளார்கள்.படத்தின் பார்வையாளர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் ரஜினி ரசிகர்கள்தான் என்பதைக் குறி வைத்துப் படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் நிறைய தோற்ற மாற்றங்களுடன் தற்போதைய வயதை மறக்க வைக்கும் இளமைத் தோற்றத்தில் வருகிறார் ரஜினி. அதற்கான ஒப்பனையுடன் தொழில்நுட்ப பணிகளையும் சிறப்பாகச் செய்துள்ளனர்.நரைத்த தாடி உடன் வரும் போதும் ரசிக்க வைக்கிறார்.
ஆர்ப்பாட்டம் இல்லாமல் வில்லத்தனம் செய்யும் நாகார்ஜுனா இளமைத் துள்ளல் என்று தோற்றத்திலும் அநாயாசமான உடல் மொழியிலும் எதிர்மறை மனம் கொண்ட பாத்திரமாக இருந்தாலும் ஈர்க்கிறார்.
நாகார்ஜுனின் தளபதியாக சௌபின் சாஹிர் மிக ஆர்ப்பாட்டமான நடிப்பில் வில்லத்தனம் செய்கிறார்.அவரது வில்லத்தனம் பல்வேறு பரிமாணங்கள் கொண்டதாக உள்ளது.
ரஜினி படத்தில் ஸ்ருதிஹாசன் என்பதே ஒரு சுவாரசியமான சேர்மானம்.அவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது நடிப்பைக் காட்டியுள்ளார்.ஸ்ருதிஹாசனிடம் சத்யராஜ் பற்றி ரஜினிபேசும் வசனங்கள் கமல் – ரஜினி நட்பை நினைத்து ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கும்.சத்யராஜ் தனது புஜ வலிமை காட்டும் படியான பாத்திரத்தில் வருகிறார். முதல் பாதியில் தலை காட்டுபவர் இரண்டாம் பாதியில் கதையை சற்றே ஆக்கிரமிக்கிறார்.
அமீர்கான், உபேந்திரா இருவரும் கௌரவ வேடத்தில் சில நிமிடங்கள் வருகிறார்கள்.இவர்களைத் தவிர காளி வெங்கட், கண்ணா ரவி, சார்லி, ரெபா மோனிகா ஜான் ,மோனிஷா பிளஸ்ஸி, , ஐயப்பா பி சர்மா, ரச்சிதாராம்,லொள்ளு சபா மாறன், திலீபன், தமிழ், ரிஷிகாந்த், பூஜா ஹெக்டே என பலரும் நடித்துள்ளனர்.
படத்தின் பெரும் பலம் இசையும் ஒளிப்பதிவும்.ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் துறைமுகம் சார்ந்த ஒவ்வொரு காட்சியிலும் ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் இடம் பெற்றுத் திரையை நிறைக்கிறார்கள்.துறைமுக காட்சிகள் ,சண்டைக் காட்சிகளில் அவர் காட்டியுள்ள கோணங்களும்,செய்துள்ள ஒளிஅமைப்புகளும், அவரது கேமரா பயணம் செய்துள்ள வேகமும் மிரளவைக்கின்றன.
வெட்டு குத்து ரத்தம் துப்பாக்கி என்று ஹை வோல்டேஜ் வன்முறைக் கதையில் அனிருத் பின்னணி இசை ஹை டெசிபலில் ஒலிக்கிறது.பாடல்களோ கமர்சியல் குத்துகள்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதல் பாதியில் முடிந்த அளவிற்குத் தான் சொல்ல வந்த கதையைச் சிறப்பாகக் கூறியுள்ளார்.அந்த செய்தொழில் நேர்த்தி இரண்டாவது பாதியில் குறைந்துள்ளது.குனிந்தால் நிமிர்ந்தால் சண்டைக் காட்சிகள் வருகின்றன.இரண்டாவது பாதியை சண்டைக் இயக்குநர்கள் அன்பறிவ் வசம் கொடுத்து விட்டார்களோ என்று தோன்றுகிற அளவுக்குச் சண்டைகள். 
வெறும் வன்முறை மட்டும்தான் கதையா? நண்பேண்டா ,அப்பா மகள் பாசம்,கூலிகளின் ஆபத்பாந்தவன் என்று செண்டிமெண்ட் சமாச்சாரங்களையும் தூவி உள்ளார்கள்.
மோனிகா பாடல் படமாக்கப்பட்டிருந்த விதம் ரகளை. தங்கமகன் படத்தில் வந்த இளையராஜாவின் ‘வா… வா… பக்கம் வா’ பாடலும் வருகிறது.
பிலோமின் ராஜ் படத்தொகுப்பும் பரபர கச்சிதம்.முன் கதையாக வரும் ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் காட்சியில் டீ ஏஜிங் மூலம் ரஜினியை இளமையாகக் காட்டியவிதம் ரஜினியின் ரசிகர்களை கவரும்.ரஜினி, சத்யராஜ், கூலிகள் சம்பந்தப்பட்ட முன் கதையைக் கூறும்போது,ரஜினி வாய் வழியே நிறைய பேசுகிறார்; காட்சிகள் வழியே குறைந்த அளவே காட்டியுள்ளார்கள்.
படம் முழுக்க குடி புகை வன்முறை என்று எவ்வளவோ காட்சிகள் இருந்தாலும்,இவ்வளவுக்கும் நடுவே ரஜினி ஒரு கருத்தை கூறியுள்ளார்.‘தெய்வம் நின்று கொல்லும்… குடி தினந்தோறும் கொல்லும்’ என்கிறார்.ரஜினி ரசிகர்கள் கவனிக்கவும்.
முழு நீள ரஜினிப் படமாக அமைந்திருப்பதால் கேள்விகளைப் புறம் தள்ளிவிட்டு இந்த வணிகப் படத்தை ரசிக்கலாம்.


