கூழாங்கல் என்பது ஒரு காடுமுரடான பாறைத்துண்டு தான். அது நீரின் ஓட்டத்தினாலும் காற்றின் அசைவுகளாலும் உருண்டு தேய்ந்து வழ வழப்பான கூழாங்கல்லாக மாறுகிறது. சுருக்கமாகச் சொன்னால் பயணப்பட்ட பாறைத்துண்டுதான் கூழாங்கல்லாக மாறுகிறது.
அப்படி ஒரு பயணத்தைக் கதையாக அமைத்து படமாக எடுத்திருக்கிறார்கள் அதுதான் ‘கூழாங்கல்’.
ஒரு சாமானிய இந்திய பிரஜையின் வாழ்க்கையை ஒரு பயணத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறலாம்.
அறிமுக இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், இயக்குநர் விக்னேஷ் சிவன் , நயன்தாரா தயாரிப்பில் இந்த ‘கூழாங்கல்’ படம் உருவாகி உள்ளது. பல சர்வதேச விருதுகளை வென்றதோடு, ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இத்திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
இந்தப் படத்தின் கதை ஓர் அப்பா பிள்ளையின் ஒரு பயணத்தில் சொல்லப்படுகிறது.
தந்தை கோபத்தில் உச்சத்தில் இருக்கிறார்.அதை தணிப்பதற்காக மகன் ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்கிறான்.போகிற போக்கில் அவர்கள் சந்திக்கின்ற சம்பவங்கள் தான் படத்தின் கதை எனலாம்.
சில சிகரங்களை மட்டும் வைத்துக் கொண்டு நாடு முன்னேறி விட்டது என்று பெருமைப்படுவதில் அர்த்தம் இல்லை. சில பாதாளங்களும் உண்டு என்று காட்டுகிறது படம்.
தந்தை வேடத்தில் நடித்திருக்கும் கருத்துடையான், மண்ணின் மைந்தனாக மாறி இயல்பான நடிப்பால் கணபதியாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது உடல் மொழியே திரை மொழி பேசி உள்ளது. மகனாக வரும் சிறுவன் செல்லப்பாண்டி முதல் படம் போல் தோன்றாத வகையில் நடிப்பில் முத்திரை பதித்துள்ளார்.
இரண்டு கதாபாத்திரங்கள் அவர்களுடைய நடைப்பயணம் என்று வைத்துக்கொண்டு சமூகப் பிரச்சினைகள் பேசி நாட்டு நடப்பைப் பார்வையாளர்களுக்குக் கண்ணாடி போல் காட்டியிருக்கும் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் பாராட்டுக்குரியவர்.வசனங்கள் மூலம் நீட்டி முழக்காமல் காட்சிகள் மூலம் விளக்கியிருப்பது சிறப்பு.
’பசிவர அங்கே மாத்திரைகள் ,பட்டினியால் இங்கு யாத்திரைகள் ’என்று தோன்ற வைக்கும் வகையில் இந்தியாவின் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி உள்ளார்.
பெரும்பான்மை மக்கள் இன்னும் வறுமையில் தான் இருக்கிறார்கள் என்பதை எலிக்கறி சாப்பிடும் காட்சி மூலம் சொல்லும் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், குறைந்த அளவு ஊறும் அழுக்கு தண்ணீருக்கே அலையும் கூட்டத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினையின் வீரியம் காட்டியிருக்கிறார்.
இப்படிப் படம் முழுவதும் பல பிரச்சினைகளைப் பேசி இந்தியாவின் தற்போதைய நிலையை மிகத் தெளிவாகக் கூறி கல்வி அறிவையும் வலியுறுத்தியுள்ளார்.
ஒளிப்பதிவாளர்கள் விக்னேஷ் – ஜெய பார்த்திபன் ஆகியோரது உழைப்பு காட்சிகளில் தெரிகிறது.யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கச்சிதம்.
75 நிமிடங்கள் ஓடும் படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் தெரிவு செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ளதால் கவனம் பெறுகின்றன.
கலாபூர்வமாகவும் காட்சி அழுத்தங்களுக்காகவும் சில காட்சிகளை நீளமாக வைப்பதுண்டு .அப்படி இப்படத்தில் சில காட்சிகள் உண்டு. ஆனாலும் அவை ரசனை வெளிப்படுத்துவன.
திரைப்படம் என்பது காட்சிகளின் மொழி என்பதை உணர்ந்து எடுத்துள்ள இந்தப் படம் நல்ல சினிமா ரசிகர்களுக்கு விருந்து எனலாம்