சுந்தர் சி, வடிவேலு, கேத்தரின் தெரசா, வாணி போஜன், முனிஷ்காந்த், பக்ஸ், காளை , ,ஹரிஷ் பெராடி, மைம் கோபி, அருள்தாஸ், சந்தான பாரதி, விச்சு மாஸ்டர் பிரபாகர் ,மதுசூதன் ராவ், ரிஷி , விமல் நடித்துள்ளனர் .சுந்தர் சி இயக்கியுள்ளார்.இசை சி. சத்தியா, தயாரிப்பு ஆவ்னி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட், பென்ஸ் புரொடக்சன்ஸ்.
மைம் கோபி, அருள் தாஸ் இருவரும் சகோதரர்கள். ஊர்ப் பெரியவர்கள் என்கிற போர்வையில் பல்வேறு சட்ட விரோத குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அப்படி ஒரு குற்றம் பள்ளியில் நடந்த போது பள்ளி ஆசிரியை கேத்தரின் தெரசா போலீஸ் புகார் கொடுக்கிறார்.அதனால் அவரைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள்.குற்றங்களை கண்டுபிடிக்க ரகசிய போலீஸ் அங்கே வருகிறது.பள்ளியில் ஒரு ஆசிரியர் போல் அழைந்து கண்காணிக்கிறது.
அதன்படி, உடற்பயிற்சி ஆசிரியராக பள்ளியில் புதிதாக வேலைக்கு சேரும் சுந்தர்.சி, தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு வில்லன் கோஷ்டியை நையப்புடைக்கிறார்.அவரை ஒரு போலீஸ் என்று கேத்தரின் நினைக்கிறார். ஆனால் அது உண்மை அல்ல என்று தெரிய வருகிறது. அப்படி என்றால் சுந்தர்.சி யார்?, அவர் எதற்காக வில்லன் கோஷ்டியை அடித்து துவம்சம் செய்ய நினைக்கிறார்? என்பதை ,காமெடி கலகலப்பாக எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலமாகவும் சொல்வதே ‘கேங்கர்ஸ்’.
கதையின் நாயகனாக மீண்டும் வந்திருக்கிறார் சுந்தர் சி. துணைக்கு வடிவேலுவை சேர்த்துக் கொண்டு தங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி என்று நிரூபித்திருக்கிறார்.
கதாநாயகனுக்குரிய ரொமான்ஸ் காட்சிகளைத் தவிர்த்து ஆக்சன் காட்சிகளில் அலப்பறை செய்துள்ளார் சுந்தர் சி.உடற்கல்வி ஆசிரியராக நடித்துள்ள வடிவேலு டைமிங் வசனங்களில் சிரிக்க வைக்கிறார்.யாரையும் ‘அடிச்சதில்ல’ என்று பட்டியல் போடும் அந்த நீளமான வசனம் கைத்தட்டல் பெறும்.
நாயகியாக நடித்திருக்கும் கேத்தரின் தெரசா, கொஞ்சம் நடிப்பு, கொஞ்சம் காதல், ஒரு பாட்டு என்று படம் முழுவதும் வருபவர், அடி வாங்கும் காட்சிகளிலும் அசராமல் நடித்திருக்கிறார்.கவர்ச்சி ஏரியாவையும் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்.
சுந்தர் சி யின் கர்ப்பிணி மனைவியாக வந்து இறந்து போகும் வாணி போஜன், குறைந்த காட்சிகளில் வந்தாலும் அனுதாபத்தை அள்ளுகிறார்.
வில்லன் குழுவில் இருக்கும் மைம் கோபி, அருள்தாஸ், ஹரிஷ் பெராடி, காளை மற்றும் நாயகன் குழுவில் இருக்கும் பக்ஸ், முனீஷ்காந்த், சந்தான பாரதி, விச்சு அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த இரண்டு கேங்கர்களும் காமெடி கேங்கர்ஸாக பார்வையாளர்களைக் கவர்ந்து சிரிக்க வைக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சத்யாவின் இசையில் பாடல்களிலும் பின்னணி இசையிலும் கமர்சியல் கொடி பறக்கிறது.
ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ண மூர்த்தி படம் முழுவதையும் வண்ணமயமாக்கி காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி.
வெங்கட் ராகவனின் திரைக்கதை, வசனம் காமெடி காட்சிகளுக்குப் பலம்.
திரைக்கதை பல திருப்பங்கள் மூலம் படத்தைச் சுவாரஸ்யமாக்கிச் செல்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சுந்தர்.சி, தனது வழக்கமான பாணியில் கதையை நகர்த்திச் சென்றாலும், காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார். பார்வையாளர்களின் யூகங்களை உடைத்து புதிய ரூட்டில் திரைக்கதையை பயணப்பட வைத்து படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்கிறார்.அது வெற்றியை நோக்கி இழுத்துச் செல்லும்.
இரண்டரை மணி நேரம் கடந்து போவது தெரியாமல் ஒரு வணிகப்படத்திற்கான முழு வேகம் படத்தில் உள்ளது.
வடிவேலு என்ற காமெடி யானைக்கு சரியான தீனி போட்டிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
மொத்தத்தில், ‘கேங்கர்ஸ்’ லாஜிக் பார்க்காமல் பார்த்தால் சிரிக்காத உம்மணாம் மூஞ்சிகளையும் புன்னகை மன்னன்களாக்கிச் சிரிக்க வைக்கும்.