‘கேப்டன்’ விமர்சனம்

நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கும் ஆளரவமற்ற வனாந்திர பகுதியில் மக்களைக் குடியமர்த்த அரசு முடிவு செய்கிறது.அந்த இடத்தை ஆய்வு செய்து மக்கள் குடியேறத் தகுதியானதா என்பதை ஆராய்ந்து அறிந்து தகுதிச்சான்றிதழ் வழங்குவதற்காக ராணுவத்தினர் சிலரை நியமிக்கிறது அரசு.ஆனால் எதிர்பாராத விதமாக ஆய்வு செய்யச் செல்லும் குழுவினர் ஒவ்வொருவராக மர்மமான முறையில் மரணமடைகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ஆர்யா தலைமையிலான ராணுவக் குழுவினர் மீண்டும் அந்த காட்டுப்பகுதிக்குள் நுழையமுயற்சி செய்கிறார்கள். சென்ற இடத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் முன்பு நடந்த மரணங்களின் பின்னணிகளையும் சொல்வதே கேப்டன் படத்தின் கதை.

ராணுவ வேடத்திற்கு பொருத்தமாக இருக்கிறார் ஆர்யா.

ஆர்யாவின் குழுவில் இருக்கும் ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் மற்றும் காவ்யா ஆகியோர் கொடுத்த வேலையைக் குறை சொல்வதற்கு இடம் இல்லாமல் செய்துள்ளார்கள்.

ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு குறைவான வேலைதான்.ஒரு பாடலும் உண்டு. முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் சிம்ரன் தோற்றத்தில் இளமையையும் நடிப்பில் வளமையையும் காட்டிக் கவனிக்க வைக்கிறார்.

எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். படம் முழுவதிலும் ஆக்‌ஷன் ஆக்சன் காட்சிகள் இருக்கும் உணர்வை தந்திருக்கிறது ஒளிப்பதிவு.

டி.இமானின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.

கொடூரமான விலங்கு அதை அழிக்கப் போராடும் ராணுவ வீரர்கள் என்று ஹாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற கருவை எடுத்துக் கொண்டு தொடங்குகிறது படம். இறுதியில் நம் நாட்டு பிரச்சினைகளான தொழிற்சாலைக் கழிவுகள், உயிர்களுக்கான பாதிப்பு, கனிம வளங்கள் சுரண்டல்,வனப்பகுதி அழிப்பு என்று பேசுகிறது.

படத்தின் வில்லனாக கொடூர விலங்கைச் சித்தரித்திருக்கும் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன், அந்த விலங்கு பின்னணியில் ஒரு கதை சொல்ல வேண்டும் என்றும் முயற்சி செய்துள்ளார்.திரைக்கதையிலும் முடிவிலும் மேலும் தெளிவுபடுத்தி இருந்தால் இப்படம் மேம்பட்டிருக்கும்.

வித்தியாசமான முயற்சி, குறைந்த பட்ஜெட்டில் ஹாலிவுட்டுக்கு நிகரான படம் என்று தனக்களிக்கப்பட்ட பட்ஜெட்டுக்கும் நடிகர்களையும் வைத்துக்கொண்டு தன்னால் முடிந்த உயரத்திற்குப் பூப்பறித்துள்ளார்.