‘கேம் ஆஃப் லோன்ஸ்’ திரைப்பட விமர்சனம்

அபிநய் கிங்கர், நிவாஸ் ஆதித்தன், எஸ்தர் நரோனா, ஆத்விக் ஜலந்தர் நடித்துள்ளனர்.அபிஷேக் லெஸ்லி இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவு சபரி, படத்தொகுப்பு பிரதீப் ஜெனிபர் ,கலை சஜன் ,இசை ஜோ காஸ்டா . என் ஜீவானந்தம் தயாரித்துள்ளார்.

மனித வர்க்கத்துக்குள் சூது என்பது எப்படி நுழைந்தது என்கிற முன்னுரையோடு படம் தொடங்குகிறது.டேனியல், ஜேனட் என தம்பதிகள் .அவர்களுக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் சாமுவேல் இருக்கிறான். டேனியல் வேலை இழந்து தற்போது வீட்டில் இருக்கிறான். வேலைக்குப் போய்க்கொண்டு குடும்ப வேலைகளையும் கவனித்துக் கொண்டு சிரமப்படுகிறாள் ஜேனட் . தன் நிலையை எண்ணி அலுத்துக் கொள்கிறாள் .தான் தவறாக அவனை திருமணம் செய்து கொண்டு விட்டதாக அவள் புலம்புகிறாள். அன்றும் காலை வழக்கம் போல் ஜேனட் வேலைக்குச் செல்கிறாள். சென்ற சிறிது நேரத்தில் திடீரென இருவர் வீட்டுக்குள் நுழைகிறார்கள். அவர்கள் கடன் வசூலிக்கும் ரெக்கவரி ஏஜென்ட் என்கிறார்கள். அவர்கள் டேனியலை மயக்கம் வரச் செய்து பிறகு அவனிடம் கடனைக் கேட்கிறார்கள். லோன் ஆப் மூலம் கடன் பெற்று 68 லட்சத்து 47 ஆயிரத்து 333 ரூபாய் கடன் இருப்பதாகக் கூறி கட்டச் சொல்கிறார்கள். அவனிடம் திருப்பி செலுத்தும் சக்தியும் இல்லை .வழியும் இல்லை. அந்த வீட்டில் அத்து மீறி நுழைந்த அவர்கள் இருவரும் காபி போட்டு சாப்பிடுகிறார்கள். சீட்டு ஆடுகிறார்கள்.மது அருந்துகிறார்கள். அவனையும் குடிக்க வைக்கிறார்கள்.டேனியல் பீதியிலும் குழப்பத்திலும் கோபத்திலும் இருக்கிறான் .ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்து கொண்டால் அனைத்து கடன்களும் தள்ளுபடி ஆகிவிடும் வேறு வழியே இல்லை என்று அவர்கள் நிர்ப்பந்திக்கிறார்கள். இருந்து சிரமப்பட்டு கொண்டு வாழ்வதை விட இறந்து குடும்பத்திற்கு ஒரு நல்ல வழி காட்டலாம் என்று அவர்கள் அவனை உளவியல் ரீதியாக மாற்றுகிறார்கள்.ஒரு கட்டத்தில் மனம் பிறழ்ந்து அவனும் எட்டாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொள்ளத் தயாராகிறான் . அந்தக் தருணத்தில் அங்கே ஒரு எதிர்பாராத திருப்பம் நிகழ்கிறது .அது என்ன என்பதுதான் ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ படத்தின் கதை.திரைப்படங்களில் நடித்துப் பெரிய வெளிச்சம் கிடைக்காத நிவாஸ் ஆதித்தன் கதையின் நாயகனாக டேனியல் பாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களிடம் அனுதாபத்தை அள்ளுகிறார். அலட்டிக் கொள்ளாமலே தனது மன உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார்.

ஜேனட் பாத்திரத்தில் நடித்துள்ள எஸ்தர் கனவுகளுடன் வந்து ஏமாந்து போகும் மனைவிகளை நினைவூட்டுகிறார். சில காட்சிகளில் இருந்தாலும் அவரது திரைப் பங்களிப்பு படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது.
அந்த  ரெக்கவரி ஏஜென்ட் இருவரில் சீனியர் விஷ்வாக நடித்துள்ள அபிநய் கிங்கர் தனது பாத்திரத்தை உணர்ந்து அநாயாச நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். உளவியல் ரீதியாக நாயகனைத் துன்புறுத்துவதில் அவர் அந்த பாத்திரத்தை அப்படியே கண் முன்னே நிறுத்துகிறார். அவரது உதவியாளர் அசோக காக நடித்திருக்கும் ஆத்விக்கும் அமைதியாக இருந்தே மனதில் பதிகிறார்.

இந்த படத்தில் டேனியல், ஜேனட் இணை மற்றும் வெளியிலிருந்து வந்த இருவர் என மொத்தமாக நால்வர் தான் பிரதான பாத்திரங்களாக இருக்கிறார்கள். இந்த நான்கு பேரை வைத்து முழுப்படத்தையும் குறிப்பாக ஒரே வீட்டிலும் அதிலும் சில அறைகளிலேயே என்று இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான  கதைமாந்தர்களோ கதை நிகழ்விடங்களோ நமக்குத் தோன்றாதபடி கதையை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் அபிஷேக் லெஸ்லி. ஒரு திரைப்பட இயக்குநராக பட உருவாக்கத்தில் முத்திரை பதித்துள்ளார். பெரும்பாலும் டேனியல் மற்றும் அந்த இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் படத்தில் இடம்பெறுகின்றன. அவர்களது குணச்சித்திர வெளிப்பாடுகளும் முகபாவனைகளும் ரசிக்கும்படி உள்ளன.மற்ற எந்தக் குறைகளும்தெரியாத அளவிற்குப் படம் விறுவிறுப்பாகச் செல்கிறது.

படத்தில் ஆங்காங்கே உரையாடல்கள் இடையே விழுந்து தெறிக்கும் வசனங்களும் பளிச்சென்று உள்ளன. ‘நான் வெளியூர் எங்காவது தப்பித்து ஓடி விட்டால் ?’ என்று கேட்கிறான் டேனியல். ‘அப்போதும் அந்த கடன் துரத்தும்; உயிருள்ளவரை அந்த கடன் துரத்தும்’ என்கிறார்கள்.

‘மரணம் என்பது ஒரு விடுதலை ;வாழ்வதை விட இறப்பது சுகமானது’ என்று அவர்கள் அவனைச் சமரசம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட வசனங்கள் உள்ளன. கடன் வாங்கி அல்லாடுபவர்களுக்கும் கடன் வாங்க கண்ணை மூடிக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுபவர்களுக்கும் இந்தப் படம் ஒரு பாடம்.
ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படத்தில் பாடல்கள் தேவை இல்லை என்பதால் பாடல்களும் இல்லை.

இயக்குநரின் எண்ணத்தை  காட்சிப் பதிவாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் சபரி.கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை ஜோ காஸ்டின் பின்னணி இசை நன்றாகவே கடத்துகிறது.திரைக்கதையின் பாதை சரியாக இருந்ததால் மற்ற எல்லாக் குறைகளும் மறக்கப்படும் என்பதற்கு இந்தப் படமே ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. அந்த அளவிற்கு விறுவிறுப்பான உளவியலைப் பிரதிபலிக்கும் திரைக்கதையாக அமைத்துள்ளார்கள்.

கடன் ஆப், ஆன்லைன் சூதாட்டம் பற்றி எச்சரிக்கை மணி அடிக்கிற இந்தப் படம், ஒரு திரில்லர் ரகம் மட்டுமல்ல ,எளிதில் கிடைக்கிறது என்பதற்காகக் கடன் வாங்குபவர்கள், கடனைக் கடன் வாங்கிச் சமாளிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது .