‘கொட்டுக்காளி’ திரைப்பட விமர்சனம்

சூரி, அன்னா பென் நடிப்பில்,உருவாகி உள்ளது.பி. எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார் .இது பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்ற படம்.
இது பின்னணி இசையே இல்லாமல் உருவாகி உள்ள படம். ஈரானியப் படங்களைப் போல யதார்த்த ஒலிகளைக் கொண்டு படப்பிடிப்பு நடந்துள்ளது.

நெஞ்சழுத்தக்காரி, கள்ளி, கல்லுளி மங்கன் என்றெல்லாம் மன அழுத்தக்காரர்களைச் சொல்வார்கள். அப்படிப் பிடிவாதக்காரர்களைக் குறிக்கும் வட்டாரச் சொல் தான் கொட்டுக்காளி.

தென் மாவட்டத்தில் ஒரு கிராமம் .கல்லூரியில் படிக்கும் மீனா காதல் வயப்படுகிறார். அலைபாயும் மனதோடு நிலை குத்திய கண்ணோடும் இருக்கிறார்.காதல் வயப்பட்ட அந்தப்பெண்ணைப் பேய் பிடித்து விட்டதாக எண்ணி, பேயை விரட்டுவதற்காக ஒரு சாமியார் இருக்கும் ஊருக்கு அழைத்துக் கொண்டு ஆட்டோ, டூவீலர் என்று 10 பேர் கொண்ட கும்பல் கிளம்புகிறது.அந்தக் கும்பலில் முக்கியமானவர் சூரி. ஏனென்றால் அந்த பெண் அவரது முறைப்பெண்.அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு செல்லும் அந்த பயணமே படமாக உருவாகி இருக்கிறது. போகும் வழியில் அவர்கள் சந்திக்கிற எதார்த்தமான நகைச்சுவை காட்சிகளும் சம்பவங்களும் கதை மாந்தர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளும்  சச்சரவுகளும் சண்டைகளும் எதார்த்த கொடி பறப்பவை. 103 நிமிடங்கள் செல்லும் இந்தப் பயணத்தின் முடிவு என்ன என்பதைத்தான் படத்தின் கிளைமாக்ஸ் என்று நினைத்தால் பயண வழியில் நம்மை உடன் அழைத்துச் சென்று முடிவுரையை நம்மை எழுதிடச் சொல்லும் வகையில் படத்தை முடித்துள்ளார் இயக்குநர்.

முரட்டுத்தனமான பிடிவாதமான ஜாதி கெளரவத்தையும்  பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளையும் இந்தப் பயணத்தின் வழியே சொல்ல முயன்றுள்ளார் வினோத் ராஜ்.
படத்தில் பின்னணி இசை கிடையாது .மிரட்டும் வாத்திய ஓசைகள் கிடையாது. இருந்தாலும் போகப்போக அதைக் கடந்து போய் பின்னணி இசை எதிர்பார்க்காமலேயே படத்தை ரசிக்கத் தொடங்கி விடுகிறோம்.

அவர்கள் செல்லும் பாதையில் தென்படும் காட்சிகளும் கேமரா கோணங்களும் தனித்த அனுபவத்தைத் தருகின்றன.படத்தில இடம்பெறும் சேவல் கோழி கூட ஒரு பாத்திரத்தைப் போலவே நம்முடன் நெருக்கமாகிறது. இந்த இயல்புமாறாக ஓசைகளை துல்லியமாக பதிவு செய்த ஒலி வடிவமைப்பாளார்கள் சூரன் மற்றும் அழகிய கூத்தனையும் பாராட்டலாம்.

பொதுவாகப்  படங்களில் வாய் நிறைய பேசிக் கொண்டிருக்கும் நடிகர் சூரி இதில் அடக்கி வாசித்துள்ளார்.பாண்டி என்கிற பாத்திரத்தில் வரும் சூரி தொண்டை கட்டிக் கொண்ட குரலோடு படம் முழுக்க பயணிக்கிறார்.அதுவே அவரது பாத்திரத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது.அவரும் நல்ல நடிப்பை வழங்கி உள்ளார்.

கதையின் நாயகியாக அண்ணா பென் வருகிறார். காதல் வயப்பட்டதால் நிலைகுத்திய பார்வையோடு பேச்சே வராமல் மூச்சு கூட விடாதது போல் உறைநிலையில் உள்ளார்.கண்களை அசைக்காமல் இமைகள் கூட மூடாமல் சித்தப் பிரமை பிடித்தது போல் வசனம் எதுவும் பேசாமல் வரும் அவரது நடிப்பு வெளிப்பாடு சிறப்பு.

அன்னா பென், சூரி இருவரையும் தவிர திரையில் தோன்றுபவர்கள் பலரும் மண்ணின் மைந்தர்களே.அனைவரும் சரியான தேர்வு என தங்களது இயல்பான நடிப்பின் மூலம் உணர்த்துகிறார்கள்.

ஒரு வணிக சமரசமற்ற திரைப்படத்தை தந்ததற்கும்,இது போன்ற முயற்சிகளுக்குத் துணை நிற்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் பணி பாராட்டுக்குரியது.வணிக சமரசங்களோடு வரும் மசாலா ப படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு இது நிச்சயம் மாறுபட்ட அனுபவத்தைத் தரும் .