சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு கதாபாத்திரத்தில் பார்த்திபனும் தோன்றி நடித்து படத்தை இயக்கியுள்ளார். சிறப்புத் தோற்றத்தில் சிம்ரன் வருகிறார்.
கதையை ஒரு வரியில் சொல்வதென்றால், கையாலாகாத கணவன் ஒருவன் தன் மனைவிக்கு மாமா வேலை பார்க்கும் கதை. இப்படித்தான் நினைக்கத் தோன்றும். இப்படி நினைக்க வைப்பதையே வித்தியாசமான கதைக்களம் என பார்த்திபன் நினைத்துள்ளார் .
ராஜ் என்கிற பார்த்திபன் ஒரு டிரைவர். டிராவல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலையும் செய்து வருகிறார்.படு கஞ்சன்.
விபத்தொன்றில் சிக்கியதால் காலில் ஊனம் . அதனால் காலை சற்று விந்தி, விந்திதான் நடப்பார்.
கெவின் என்னும் சாந்தனு லண்டனில் இருந்து சென்னை வருகிறார். சென்னையில் ஒரு பெரிய இடத்தை விலைக்கு வாங்கும் முயற்சியில் வருகிறார். இங்கே சில நாட்கள் தங்க தனக்கு குடும்பப் பாங்கான இடம் வேண்டும் என்று விரும்புகிறார் அவர்.. அதற்குத் தகுந்தாற்போல் ஒரு வீடு இருப்பதாகச் சொல்லி ஒருபெரிய பங்களாவுக்கு அவரை அழைத்துச் செல்கிறார் பார்த்திபன்.
வீடு பிடித்துப் போகவே அங்கேயே தங்குகிறார் சாந்தனு . அதே வீட்டில் வேலை பார்க்கும் பார்வதி நாயரை பார்த்தவுடன் சாந்தனுவுக்குப் பிடிக்கிறது. பார்வதி மீது மோகம் கொள்ளும் அளவுக்கு பார்வதியின் நடவடிக்கைகளும் அமைய, மெய்யாலுமே சாந்தனுவுக்கு பார்வதி மீது ஒரு இது வருகிறது..
இந்த நேரத்தில்தான் பார்வதி தன் மனைவி என்கிறார் பார்த்திபன். சாந்தனுவுக்கு அதிர்ச்சி.ஆனாலும் சமாளித்துக் கொள்கிறார். இருந்தாலும் பார்வதி மீதான மோகம் சாந்தனுவுக்குள் கூடிக் கொண்டே போகிறது.
பார்த்திபன் ஒரு விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட உடல் பாதிப்பால் அவரால் இனிமேல் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாத நிலை. இதையும் சாந்தனுவிடம் சொல்கிறார் குடிகார பார்த்திபன்.
அவ்வப்போது பார்வதிக்கு பதற்றமாகிற போதெல்லாம் மயக்கமாகி வலிப்பு வருகிறது. பிரச்சினைக்கான காரணம் பார்வதிக்கு பாலியல் தேவை ‘எதுவும்’ கிடைக்காததுதான் என்று தெரிகிறது. அதனால் சாந்தனுவுக்கு பார்வதி மீது பரிதாபம் ஏற்படுகிறது.
ஒரு நாள் பார்வதியை சாந்தனு கட்டிப் பிடிக்க.. பார்வதி கோபப்பட தொடர்ந்து திடீரென்று பார்வதிக்கு வலிப்பு நோய் வந்துவிட.. அந்த நேரத்தில் சாந்தனு பார்வதிக்கு உதவி செய்ய பிறகு அவர்களிடையே உடல் கலப்பு வரையிலும் போய்விடுகிறது. இதனை பார்த்திபனுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள் இருவரும். சாந்தனுவும் அந்த வீட்டில் இருந்து வெளியேறி ஓட்டலுக்கு போகிறார்.மனதில் குற்றவுணர்வு.
பார்வதி திசைமாறினாரா ? விஷயம் பார்த்திபனுக்குத் தெரியுமா? சாந்தனு ,தான் நினைத்தபடியே பார்வதியை அழைத்துச் சென்றாரா..?இறுதியில் என்ன ஆனது..?எ ன்று எதிர்பார்த்தால் திடுக் திருப்பம் . அது என்ன? முடிவை கோடிட்ட இடங்களாக விட்டு விடுகிறோம் பார்த்து விட்டு நிரப்புக .
இந்தப் படத்தின் சில நிமிட கிளைமாக்ஸ் காட்சிக்காக இந்தப் படத்தின் முழுக் கதையையும் சொல்லிவிட முடியவில்லை. ஆனால் படத்தின் கதை சொல்லக் கூடாத கதை மட்டுமல்ல.. தொடக் கூடாத கதையும் கூடத்தான். முதல் பாதிப் படம் ஏதோ கிளு கிளு பாணியில் செல்கிறது.
வரம்பு மீறிய உறவு பற்றிய முகம் சுழிக்க வைக்கக்கூடிய ஒரு கதைதான். ஆனால் காட்சிகளில் ஆபாசமில்லை.
திரைக்கதையின் போக்கில் போகப் போக இளமைக்கொடி பறக்கிறது.சில நேரங்களில ஒவ்வொரு வசனத்திலும் ஒரு பார்த்திப முத்திரை.
பார்வதி மீதான சாந்தனுவின் மோகம் மெல்ல மெல்ல காமமாக மாறுகின்றவிதமும், அது காதலாக உருமாறும் விதத்திலும் பார்த்திபனின் முத்திரை தெரிகிறது .
முறைகேடான காதலை நியாயப்படுத்த முனைந்திருக்கிறார் பார்த்திபன். சொன்ன வித்ததில் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
சாந்தனுவை அழகாக அழுத்தமாக நடிக்க வைத்திருக்கிறார்.இது எதிர்மறை நிழல் விழும் பாத்திரம் தான் என்றாலும் துணிவாக நடித்துள்ள சாந்தனுவுக்குப் பாராட்டு. பார்வதி நாயரும் நடிப்பு தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார்
தம்பி ராமையாவும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். ‘மறதி’ என்னும் நோயை தனக்குள் வைத்துக் கொண்டு பல மறதிகளால் வாழ்க்கையைத் தொலைத்து, மிகை நடிப்பில் சில நேரம் நம்மையும் தொலைத்து விடுகிறார் .
மிகக் குறைந்த அளவிலான பாத்திரங்களைக் கொண்டு கதை பின்னி தன்னுடைய பாணியிலேயே அனைவரையும் உலவ விட்டு கதையை நகர்த்திச் சென்றுள்ளார். கொஞ்சம் பிசகினாலும் அபத்தமாகி ஆபாசமாகிவிடுகிற கதைதான். முடிவு அந்த ஏழு நாட்கள் பாணியில் செல்லுமோ என எதிர் பார்த்தால் கடைசியில் படத்தை முடித்திருக்கிற விதம் நாடகம் என்றாலும் அப்பாடா கலாச்சாரம் பிழைத்தது எனச் சொல்ல வைக்கிறது.’
கோடிட்ட இடங்களை நிரப்புக ‘ காம ரசம் பூசிய காதல் கதை என்றாலும் இளமை கலந்த புதுமை முயற்சிதான்.