ஏகன், பிரிகிடா சகா, சத்யா தேவி, யோகி பாபு, ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவகுமார் , நவீன், ரியாஸ்,பவா செல்லதுரை நடிப்பில் சீனு ராமசாமி இயக்கி இருக்கும் படம்.
வாழ்க்கை என்பது நம்மை ருசி பார்க்க உண்மையில் கூர்முனை கத்தியோடு காத்துக் கொண்டிருக்கும் .நாம் எதிர்பாராத வகையில் சம்பவங்களை அது கொடுக்கும்.
இப்படித்தான் வாழ்க்கை நமக்கு வழங்க இருக்கும் எதிர்பாராத அந்தக் குரூரத்தைப் பற்றிக் கூறிவிட்டுத்தான் படத்தைத் தொடங்குகிறார்கள்.
சிறுவன் செல்லதுரைக்கு ஒரு தங்கை.தங்கை மீது பாசமாக இருக்கிறான். அவனது அம்மா தனது கணவரை,அதாவது செல்லதுரையின் அப்பாவை விட்டு விட்டு வேறொருவர் உடன் சென்று விடுகிறாள். இதனால் ஆவேசப்பட்டு வெறுத்துப் போன செல்லதுரையின் அப்பா,பிள்ளைகளை விட்டுவிட்டுச் சென்று விடுகிறார்.பிள்ளைகள் இருவரும் பாட்டியின் நிழலில் வளர்கிறார்கள். ஒரு கட்டத்தில் பாட்டியும் இறந்து விடுகிறார்.அதன் பிறகு அவர்களை ஆதரிக்க ஒரு நேசக்கரம் நீள்கிறது. அது அந்த ஊரில் கோழிப் பண்ணை வைத்திருக்கும் பெரியசாமி.அவர் கைவிடப்பட்ட அந்தப் பிள்ளைகளுக்குப் பெரியப்பா ஸ்தானத்தை எடுத்துக் கொள்கிறார். பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறார்.செல்லத்துரை அவரிடம் வேலைக்குச் சேர்ந்து , தானும் உயர்ந்து தங்கையையும் காப்பாற்றி வருகிறான். இந்நிலையில் வளர்ந்து விட்ட செல்லதுரைக்கு ஒரு காதல் வருகிறது. தங்கைக்கும் ஒரு காதல். தங்கையின் காதலை நினைக்கும் போது அவனுக்கு அம்மா ஞாபகம் வந்து மனதில் கறுப்பு நிழல் படிகிறது. தங்கை மீது வெறுப்பும் கோபமும் கொண்டு சீறுகிறான்.இப்படிச் செல்கிற கதையில் சிறுவன் செல்லதுரை வளரும் வரையிலான அவனது போராட்டங்கள், அவனது கனவுகள் ,சமூகம் அவனைப் பார்க்கும் பார்வை,அவன் சமூகத்தை எதிர்கொள்ளும் விதம் போன்றவற்றை ஒரு கிராமியப் பின்னணியில் கதையாக விரித்து காட்சிகள் ஆக்கி வழங்கியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
இந்தப் படத்திற்கு இயல்பான கதாபாத்திரங்கள் , நடிகர்கள் என்று தேர்வுகள் எல்லாம் பிரமாதம் தான்.
ஏகன் அந்தச் செல்லதுரை கதாபாத்திரத்திற்கு அசலாகப் பொருந்தி இருக்கிறார் .தங்கையாக நடித்து இருக்கும் சத்யா தேவி கறுப்புதான் என்றாலும் கவனம் பெறுகிறார் நடிப்பில்.காமெடி பாதி, செண்டிமெண்ட் மீதி என்று கவர்கிறார் யோகிபாபு . வழக்கமான மிகை நடிப்பைத் தவிர்த்து பார்வையாளர்களைக் கவர்கிறார்.மிலிட்டரிகாரராக வரும் ரியாஸ், சேட்டனாக வரும் நவீன், நூலகராக வரும் ஆகியோர் பவா செல்லத்துரை தங்கள் கதாபாத்திரங்களில் கரைந்து கவனிக்க வைக்கிறார்கள்.
அசோக் ராஜின் ஒளிப்பதிவு, என் ஆர் ரகுநந்தன் இசை சரவண அபிராமனின் கலை இயக்கம் எல்லாமே குறை சொல்ல ஒன்றும் இல்லை.வைரமுத்து , கங்கை அமரன், பா. விஜய், ஏகாதசி ஆகியோரிடம் இருந்து சிறப்பான வரிகளைப் பெற்று பயன் பயன்படுத்தி உள்ளார்.
கிராமத்து வெள்ளந்தி மனிதர்களை அவர்களின் சுபாவத்தை , அனைவரையும் உறவாக பார்க்கும் அந்த மனநிலை ஆகியவற்றை அழகாக காட்டியுள்ளார். சில இடங்களில் நறுக்கெனத் தெறிக்கும் நல்ல வசனங்களும் உள்ளன.
ஆனாலும் வாழ்வியலை மிகத் துல்லியமாகத் தனது படங்களில் பிரதிபலிக்கும் சீனு ராமசாமி, இதில் அதனைத் தவற விட்ட உணர்வைத் தந்து விடுகிறது ,காட்சிகளில் நம்பகம் குறைந்த திரைக்கதை.
மீண்டும் ஒரு கல்யாணத்தின் மூலம் பிறந்த சிறுமியுடன் திரும்பி வரும் தந்தையிடம் மகன் செல்லதுரை நடந்து கொள்வது நாடகத்தனமாக உள்ளது.நம்பகம் குறைந்து விடுகிறது.
சீனு ராமசாமியின் படங்களுக்கென்று சில தர முத்திரைகள் உண்டு.அந்த நிறைவை இந்தப் படத்தில் உணர முடியவில்லை. மொத்தத்தில் ஒரு போதாமை உணர்வைக்கொடுத்து விடுகிறது. எனவே மாற்றுக் குறைந்த பொன்போல இந்தப் படம் மாறிவிட்டது .எனவே கோழிப் பண்ணை செல்லதுரை படம் மழையில் நனைந்த கோழி போல் களை குறைந்ததாகவே தோன்றுகிறது.