வடிவுக்கரசி, திலீபன் ,சிங்கம் புலி ,கஜராஜா, ஆனந்த்நாக் , அபர்ணா ,மாஸ்டர் கன்ஷியாம்,பேபி சான்ட்ரியா நடித்துள்ளனர் .விஜயகுமாரன் இயக்கியுள்ளார். செல்லையா பாண்டியன் இசையமைத்துள்ளார்.விஜயாமேரி யுனிவர்சல் மீடியா சார்பில் டி. விஜயாமேரி தயாரித்துள்ளார்.
கேரள தமிழக எல்லைப் பகுதியில் ஓர் கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறாள்.இந்தக் கொலை வழக்கு விசாரணையில் காவல்துறை அதிகாரி திலீபன் இறங் குகிறார் .அப்போது அவருக்கு ஒரு துப்பு கிடைக்கிறது.அதை வைத்து விசாரணையை துரிதப்படுத்துகிறார்.இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம், ஆனந்த்நாக் தனது மனைவி இரண்டு குழந்தைகளோடு லண்டனில் இருந்து தமிழகத்தில் இருக்கும் தன் பூர்வீக வீட்டில் குடியேறுகிறார். அந்த வீட்டின் புனரமைப்பு வேலைகளில் தீவிரமாக இருக்கிறார்.அப்போது அந்த வீட்டு வாசலில் ஒரு க்ராணி -மூதாட்டி மயங்கி விழுகிறார். அவருக்கு உதவும் நோக்கில் அவரை வீட்டுக்குள் அழைத்து வந்து, படுக்க வைக்கிறார். அந்த ஊர்த்தலைவர் அந்த மூதாட்டியைப் பார்த்துவிட்டு ஒரு மூதாட்டியைப் பற்றிய பயங்கரமான கதையொன்றைச் சொல்கிறார்.முதலில் ஊர்த் தலைவரின் சொன்னதை கண்டு கொள்ளாமல் விடுகிறார் ஆனந்த்நாக் . பிறகு அந்த மூதாட்டி தான் தனது வீட்டின் முந்தைய உரிமையாளர் என்று தெரிகிறது.அதுமட்டுமில்லாமல் அவரைப் பற்றி கேள்விப்படும் தகவல் அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது.ஆனந்த் நாக்கை பயமும் பதற்றமும் பற்றிக் கொள்கின்றன.ஏனென்றால் அந்தக் க்ராணிக்கு குழந்தைககளைக் கொன்று அவர்களின் இதயத்தைப் பறிக்க நினைக்கும் திட்டம் உள்ளது.விசாரணை அதிகாரியான திலீபனும் மூதாட்டி பற்றிக் கேள்விப்பட்டு ஆனந்த் நாக் வீட்டுக்கு வருகிறார்.அதற்குப் பிறகு நடக்கும் பரபரப்பான பயங்கரமான சம்பவங்களைக் கொண்டு உச்சகட்டத்தை நோக்கிச் செல்லும் படம் தான் ‘க்ராணி’.
பாட்டி கதை சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம். அதே பாட்டி கொலை செய்து,அதுவும் சிறுவர்களாகப் பார்த்து கொலை செய்வதைப் பார்த்து இருக்கிறீர்களா? அப்படி ஒரு கதை தான் இது.அப்படி ஒரு கதையை எடுத்துக்கொண்டு படமாக்கி இருக்கிறார் இயக்குநர் விஜய குமாரன்.

முதல் மரியாதை படத்தில் சிவாஜியின் மனைவியாக வந்த அந்த வடிவுக்கரசியா இப்படி என்று நம்ப முடியாத அளவிற்கு பயங்கரமான தோற்றத்தில் ஒச்சாயி கிழவி யாக வருகிறார் வடிவுக்கரசி.அச்சமூட்டும் ஒப்பனை கொண்ட தோற்றத்தில் நடித்திருக்கும் வடிவுக்கரசு ஆரம்பத்தில் தள்ளாமை வெளிப்படுத்தினாலும் பிறகு அவர் செய்யும் வெறித்தனமான சம்பவங்கள் பார்வையாளர்களைப் பீதி கொண்டு அலற வைப்பவை.
எந்தப் பக்கம் சென்றாலும் சரிலென மின்னல் வெட்டென எதிரே வந்து நிற்பதும் தன் எதிரே நிற்பவரை விட பேருரு கொண்டு விஸ்வரூபம் எடுப்பதும் என்று படத்தின் இரண்டாம் பாதி முழுக்க வடிவுக்கரசியின் ஆட்டம் தான்.பேச்சுக்கு வேலை இல்லை என்று செயல்களாலேயே மிரட்டுகிறார்.
கொலை வழக்கை விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரியாக வரும் திலீபன், போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் சிங்கம்புலி, ஊர்த் தலைவராக வரும் கஜராஜ், வீட்டின் உரிமையாளராக வரும் ஆனந்த் நாக், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபர்ணா மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் மாஸ்டர் கன்ஷியாம், பேபி சாண்ட்ரியா என அனைவரும் தாங்கள் ஏற்ற பாத்திரங்களில் மிளிர்ந்துள்ளார்கள்.
இது பேய்க்கதை அல்ல மந்திர தந்திரங்கள் கற்பனை கலந்த திகில் கதை என்று கூறலாம். முதலில் கதை எங்கோ செல்வது போல் இருந்தாலும் அந்த வீட்டுக்கு பாட்டி வடிவுக்கரசி வந்த பிறகு கதை டாப் கியரில் பறக்கிறது.வடிவுக்கரசியின் முன் கதை வேறொரு வகையான விறுவிறுப்பான காட்சிகள்.
ஒரு பழைய வீட்டுக்குள் நடக்கும் பரபர திகில் சம்பவங்களைப் பரபரப்புகுறையாமல் படமாக்கி இருக்கிறது ஒளிப்பதிவாளர் ஏ.மணிகண்டனின் கேமரா.
இசையமைப்பாளர் டாக்டர்.செல்லையா பாண்டியனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையையும் காட்சிகளையும் கூடுதல் உயிர்ப்பாக்கியுள்ளன.குழப்பம் இல்லாமல் காட்சிகளை கோர்த்துள்ளார் படத்தொகுப்பாளர் எம்.எஸ்.கோபி.
குழந்தைகளுக்கு பொதுவாக சொல்லப்படும் மாயாஜாலக் கதைகளை வைத்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய குமாரன்.திருப்தியளிக்கும் ஒரு திகில் கதையை ஒரு மூதாட்டியை வைத்தே அவர் சாத்தியப்படுத்தி உள்ளார்.வயது எல்லை கடந்து ஆறிலிருந்து அறுபது வரை ரசிக்கும்படியாக இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் விஜய குமாரன்.
மொத்தத்தில், ‘க்ராணி’ திகிலூட்டும் பாட்டி.


