புராணங்களில் சத்தியவான் சாவித்திரி கதையைக் கேள்விப்பட்டிருப்போம் .எமனிடம் போய் இறந்து போன கணவனின் உயிரை மீட்டு வருவாள் சாவித்திரி.
‘கணவர் பெயர் ரண சிங்கம்’ படத்தில் வெளிநாட்டில் இறந்து போன தன் கணவனின் உடலை மீட்டு, தாயகம் கொண்டுவர மனைவி செய்யும் விடாத போராட்டம்தான் கதை. ஒரு எளிய கிராமத்துப் பெண்ணின் கண்ணீர் கசியும் கதை இது.
கருவேலமரங்கள் சூழ காய்ந்து போய்க் கிடக்கும் ராமநாதபுரத்தின் ஒரு சிற்றூரில் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவர் ரணசிங்கம். . அங்கே நிலவும் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டி அவ்வப்போது மக்களைத்திரட்டிப் போராடுகிறார் .இதனால் அரசு அதிகார வர்க்கத்தின் பகை வருகிறது.. ஒருகட்டத்தில் தன்னுடன் போராடிக் கொண்டிருந்த மக்கள் விலகி நிற்கவே, வருத்தப்படுகிறார். மனைவியின் விருப்பத்தில் துபாய் செல்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு ரணசிங்கம் ஒரு கலவரத்தில் சிக்கி துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக செய்தி வருகிறது. இது ரணசிங்கத்தின் குடும்பத்தை அதிர வைக்கிறது..
துபாயில் வேலை பார்ப்பதற்காகச் சென்ற ரணசிங்கத்தின் மீது சில வழக்குகள் உள்ளதால் அவர் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அவரின் மனைவி அரியநாச்சி தன் கணவனின் உடலை மீட்க எல்லோரிடமும் நடையாய் நடந்து, அலைகிறார்..
பல்வேறு அலைக்கழிப்புகளுக்குப் பிறகு தீர்க்கமான முடிவுடன் டெல்லி புறப்படுகிறார். கைக்குழந்தையுடன் கணவனின் உடலை மீட்கப் போராடும் அரியநாச்சி என்ன செய்கிறார், கணவனின் உடலை அவரால் மீட்க முடிந்ததா? இல்லையா ? என்பதை நோக்கிச்செல்கிறது திரைக்கதை.
ஒரு குணச்சித்ர நடிகரான பெரிய கருப்பத் தேவரின் மகன் விருமாண்டி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். முதல் படம் என்று நம்பமுடியாத அளவுக்கு உள்ளது..
வெளிநாட்டில் வேலை செய்யச் சென்றவர்கள் இறந்துவிட்டால் அவர்கள் உடலை மீட்பதில் என்ன மாதிரியான சட்டச் சிக்கல்கள் எழும் என்பதில் அவர் கொடுத்திருக்கும் விரிவான தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவை…
விஜய் சேதுபதிக்கு ‘சீதக்காதி’ படத்துக்குப் பிறகு இன்னொரு பரிசோதனை முயற்சி. பாத்திரத்தில் மட்டுமல்ல உடலிலும் எடை கூடியுள்ளார். எடை குறைத்தல் பயன் தரும். அவரின் பங்களிப்பு பாராட்டும் படி உள்ளது.. ஊரில் நீரோட்டம் பார்ப்பது, மக்களைத் திரட்டிப் போராடுவது, உரிமைக் குரல் கொடுப்பது , அரியநாச்சியான ஐஸ்வர்யா ராஜேஷ் மீதான அன்பை வெளிப்படுத்துவது, என ரணசிங்கம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி அழகாகப் பொருந்துகிறார்.
அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் அளவான அழகான நடிப்பை வழங்கியுள்ளார். ‘காக்காமுட்டை’, ‘கனா’ படங்களுக்கும் ஒருபடி மேலேபோய்பரிபூரணமான நடிப்பை கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். விஜய் சேதுபதியுடனான காதல், குடும்பப் பிடிப்பு, மனவுறுதி,தனியொரு பெண்ணாகப் போராடுவது என அவர் நடிப்பில் மேம்பட்டுள்ளார்..
விஜய் சேதுபதியின் தங்கையாக பவானிஸ்ரீ இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். இரண்டாவது படத்திலும் ரங்கராஜ் பாண்டே ஸ்கோர் செய்துள்ளார். வழக்கமான பந்தா எம்எல்ஏவாக நமோ நாராயணா வருகிறார். ‘பூ’ ராமுவும், வேலராமமூர்த்தியும் குணச்சித்திர சித்திரங்கள். அருண்ராஜா காமராஜ், சுப்பிரமணிய சிவா, முனீஸ்காந்த், அபிஷேக், டி.சிவா, இயக்குநர் மனோஜ்குமார் ஆகியோரும் பொருத்தமான நடிப்பில் மிளிர்கிறார்கள்.
ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ராமநாதபுரம் கிராமத்தின் வெம்மையையும், மண்ணின் சூழலையும் மக்கள் வாழ்வையும் கண்களுக்குள் கடத்துகிறது. ஜிப்ரான் இசையில் வைரமுத்துவின் பறவைகளா பாடல் வாழ்வாதாரம் தேடி வெளிநாடு செல்லும் மனிதர்களின் துயரக்குரல்.. புன்னகையே பாடல் கதையோட்டத்துடன் பொருந்தி நிற்கிறது. வைரமுத்துவின் வரிகளை மேலும் அர்த்தமுள்ளாதாக்கி காட்சிப்படுத்தியிருக்கலாம்.பின்னணி இசையில் ஜிப்ரானின் உழைப்பு தெரிகிறது.
”2000 பேருக்கு வேலை போட்டுக் கொடுத்துட்டு விவசாயம் பண்ற 50,000 பேரை தெருவுல நிப்பாட்டுனா எப்படி சார்”, ”ரேஷன் கார்டு நம்ம ஸ்டேட் எல்லையைத் தாண்டி தாங்காது.. ஆதார் கார்டு எங்கே செல்லும் செல்லாதுன்னே தெரியாது”, ”நம்ம ஊரு பொம்பளைங்க தண்ணிவண்டி தள்ளிக்கிட்டு இருக்காங்க, , ”அதிகாரத்தோட உச்சாணிக் கொம்புல இருக்குறவங்களுக்கு நாம அடிபட்ட வலியை கொஞ்சம் கூட குறையாம அப்படியே புரியவைக்கணும்” என்ற சண்முகம் முத்துசாமியின் வசனங்கள் படத்துக்குப் பலம் .சில இடங்களில் மிகை நடிப்பும் நாடகத்தனமும் உறுத்துகின்றன.
ஐஸ்வர்யா ராஜேஷ் பாத்திரத்தின் பாதையில் ’கணவன் உடலை மீட்க விடாது போராடும் மனைவியின் பயணத்தையும் அவள் மனவுறுதியையும் ’காட்டி இருந்தாலே கதையும் தொய்வின்றி இறுக்கப் பட்டிருக்கும். திரைக்கதை ஒரே நேர்கோட்டில் அமைத்திருந்தால் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கும். மூன்று மணி நேரம் கதைக்களத்துக்குத் தேவையில்லை. தேவையில்லாமல் பல காட்சிகள் உள்ளன. சில காட்சிகள் நீளமாக உள்ளன.
படத்தின் நீளம் மிகப்பெரிய பின்னடைவாகத் தெரிகிறது.. ஆங்காங்கே கத்திரி போட்டிருந்தால் கனகச்சிதமான உணர்ச்சிகரமான கதை சிறப்பாக எடுபட்டிருக்கும்.க பெ ரணசிங்கம் அழுத்தமான உண்மைகளைப் பேசும் படம் எனலாம்..