விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக நடித்துள்ள ‘சகாப்தம்’ படம் பிப்ரவரியில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்றிரவு க்ரீன்பார்க் ஒட்டலில் நடைபெற்றது. திரையுலகிலிருந்து திரளான நட்சத்திரங்களும் இயக்குநர்களும் கலந்து கொண்டனர்.
திரையுலகமே திரண்ட இந்த விழாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்கிற பெயரில் குட்டி நடிகர் ஜெகன் செய்த அழும்புகளும் கத்துக்குட்டித்தனங்களும் அளவில்லாமல் இருந்தன.
தொகுப்பாளர் என்கிறவர்கள் ஒருவகையில் அன்றாடம் தொகுத்துவிட்டு அன்றைய தினச்சம்பளத்தை வாங்கிச் செல்லும் தொழிலாளர்கள்தான். அவர்களது வேலை முடிந்தால் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகத் தொகுப்பது இல்லையேல் நிகழ்ச்சி நிரலை வாசிப்பது.. இப்போதெல்லாம் அப்படி வருகிற அவர்களுக்கு குறைந்த பட்ச முன்தயாரிப்பு உணர்வு கூட இருப்பதில்லை. பேச வருகிறவர் தயாரிப்பாளரா இயக்குநரா என்கிற தெளிவும் அறிவும் கூட சிலருக்கு இருப்பதில்லை. ‘சகாப்தம்’ படத்தின் விழாவில் தொகுத்த குட்டி நடிகர் ஜெகன் கே.எஸ்.ரவிகுமாரின் பெயரையே தவறாக சொன்னார். அதைக்கேட்ட ரவிகுமாரே கோபப்பட்டு என் பெயரையே தப்பாகப் கூறுகிறாயே என்று கடிந்தார் ,திட்டினார்.
அசட்டுத்தனமாக ஜெகன் காமெடி என்று நினைத்து கூறியது எல்லாவற்றிலும் காம நெடி அடித்தது.
அதே போல் வருகிற நடிகர்கள் இயக்குநர்களைக்கூட அவர்களது தகுதி தராதரம் அறியாமல் ஜெகன் கமெண்ட் அடித்தார். வெட்கமின்றி வருகிறவர் போகிறவர்களிடமெல்லாம் வாய்ப்பு கேட்டு வழிந்தார். கைதட்ட ஆள் அழைத்து வந்திருப்பதாக பவர்ஸ்டாரை கேலி செய்தார்.இவருக்கு யார் இவ்வளவு உரிமை கொடுத்தது?
‘சகாப்தம்’ தொழில்நுட்பக் கலைஞர்களைக் கூட முறைப்படி அறிமுகப் படுத்தி அழைக்கவில்லை.விழாவுக்கு இவ்வளவு ஏற்பாடு செய்தவர்கள் படத்துக்கான பாடல்கள் வெளியீட்டுவிழாவில் பாடல்கள் எழுதிய எந்தக் கவிஞரையும் மேடையேற்றவில்லை. அவர்களைப் பற்றி யாருமே முறையாகப் பேசவும் இல்லை. ஒருவர் பற்றிக் குறிப்பிட்ட போது கூட தொகுப்பாளர் பார்த்தி பாஸ்கரை ‘பாரதிபாஸ்கர்’ என்றார்கள்.
தனக்கு வாய்ப்பு கொடுத்த ‘சகாப்தம்’பட இயக்குநரையே ‘உன்னை நான் படப்பிடிப்பிலேயே பார்க்கவில்லையே. எங்கே போனே ?’ என்று சகட்டு மேனிக்கு கிண்டலடித்து அவமானப் படுத்தினார்.
நடிகைகள் சம்பந்தப்பட்ட பேச்சின்போது அநியாயத்துக்கு இருபொருள் பேச்சு ,ஆபாச வாடை. ‘சூது கவ்வும்’ படத்தின் பெயரையே கூட இருந்த தமிழே சரியாகத் தெரியாத இன்னொரு தொகுப்பாளினியை எங்கே பெயரை தப்பில்லாமல் சொல்லு பார்க்கலாம் என்று ஆபாசமாக்கினார். இப்படி நிகழ்ச்சி முழுக்க ஜெகன் காட்டிய கத்துக்குட்டித் தனங்கள் அசட்டுத்தனங்கள் ஏராளம்.
விஜயகாந்த் பேச வந்தவுடன் எனக்கு கல்யாணமாகி இரண்டரை வருஷமாகுது. நாக்கு தள்ளுது.. உங்க அனுபவம் எப்படி கேட்டு அசிங்கப் படுத்தினார்.
டிவியில் வருகிறவர்கள் என்கிற தகுதியுடன் இப்படிப்பட்ட அரைவேக்காடுகளையும் அதிகப் பிரசங்கிகளையும் ஏன்தான் தொகுப்பாளர் வேலைக்கு கூப்பிடுகிறார்களோ?