விஜய் ஆண்டனி, ‘காதல் ஓவியம்’ கண்ணன், வாகை சந்திரசேகர், செல்முருகன், திருப்தி ரவீந்திரா, கிரிஷ் ஹாசன், ஷோபா விஸ்வநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.எழுதி இயக்கியிருக்கிறார் அருண் பிரபு.ஒளிப்பதிவு ஷெல்லி ஆர் காலிஸ்ட், படத்தொகுப்பு ரேமண்ட் டெரிக் ,தின்ஷா.இசை விஜய் ஆண்டனி, தயாரிப்பு விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்.
அதிகாரத்திற்கு எதிராக ஆளும் அதிகார வர்க்கத்தைக் கேள்வி கேட்கும் எத்தனையோ படங்கள் வந்துள்ளன .ஆனால் அனைத்திலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட காத்திரமான குரலாக வந்திருக்கும் படம் தான் ‘சக்தித் திருமகன்’.
ஓர் இடைத் தரகராக இருப்பவர் விஜய் ஆண்டனி. அவர் பெயர் கிட்டு. அனைத்து அதிகாரிகளின் தொடர்புகளையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டு வேண்டிய வேலைகளை லஞ்சம், கமிஷன் என்று வாங்கிக் கொண்டு சொன்னபடி முடித்துக் கொடுக்கிறார். அவரது தொடர்பில் முடியாத காரியமே இல்லை என்கிற அளவிற்கு இருக்கிறது.40 வேலையாட்கள் வைத்துக் கொண்டு இந்த காரியங்களைச் சாதித்து வருகிறார். சில உதவிகளும் செய்கிறார் .பிரபல தொழிலதிபர் மற்றும் அரசியல் ஆலோசகர் என்று இருக்கும் அபயங்கர் உடன் இருந்ததால் பல்வேறு தொடர்புகள் கிடைக்கின்றன. இப்படிப்பட்டவர் பல கோடி ரூபாய் கமிஷன் பணத்திற்காக மிகப்பெரிய டீலிங் ஒன்றைச் செய்கிறார். இதில் அபயங்கர் பாதிக்கப்படுகிறார். அதனால் அகில இந்திய அளவில் தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளின் பார்வை கிட்டு மீது விழுகிறது. முகம் தெரியாமலே இப்படி ஒருவர் இயங்குகிறாரா என்று அனைவரும் ஆச்சரியப்படும் அதே நேரத்தில் பொறாமையும் பகைமையும் கொள்கிறார்கள் .அனைத்து தரப்பிலிருந்தும் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி கிட்டுவைப் பிடிக்க வலை விரிக்கிறார்கள்.அதிலிருந்து அவர் மீண்டாரா? தன்னை பழிவாங்க நினைப்பவர்களை எதிர்த்து அவர் என்ன செய்கிறார்?அவரது புத்திசாலித்தனமான காய் நகர்த்தல்கள் என்னென்ன? என்பதை விளக்கம் வகையில் விறுவிறு படமாக உருவாகி இருக்கிறது இந்த ‘சக்தித் திருமகன்’.
சைலன்ட் ஹீரோ என்று பேசப்படும் விஜய் ஆண்டனிக்கு ஏற்றபடி உள்ள கதாபாத்திரம் இது. அலட்டிக் கொள்ளாமலேயே, பெரிய உடல் மொழி காட்டாமலேயே மாஸ்டர் மைண்ட் நாயகனாக அலட்டாமல் வந்து அளவான ஆக்சன், கொஞ்சம் காதல் ,அடக்கமான நடிப்பு என்று வழங்கி இருக்கிறார்.திருப்தி ரவீந்திரா விஜய் ஆண்டனிக்கு ஜோடி என்றாலும் கொஞ்சம் காதல் கொஞ்சம் கண்ணீர் என்று சில காட்சிகளில் தோன்றி பதிகிறார் .
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ள ’காதல் ஓவியம்’ கண்ணன் அந்த அரசியல் சாணக்கியத்தனம் அதாவது நரித்தனம் கொண்ட அபயங்கர் பாத்திரத்தில் வருகிறார். ஏற்ற உடல் மொழி சரளமான ஆங்கிலம் என அந்த பாத்திரத்திற்கு ஏற்ற வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறார்.
விஜய் ஆண்டனியின் நெட்வொர்க்கிற்கு பெரும்பலமாக செல் முருகன் இருக்கிறார். விஜய் ஆண்டனிக்கு அரசியல் பாடம் எடுத்து அவரை ஆற்றுப்படுத்தும் பெரியவராக வாகை சந்திரசேகர் நடித்துள்ளார். மேலும் கிரண் குமார், ஷோபா விஸ்வநாத் போன்றோரும் நல்ல பாத்திரத்தில் வருகிறார்கள்.
ஒளிப்பதிவாளார் ஷெல்லி ஆர் காலிஸ்ட் தனது திறமையான ஒளிப்பதிவால் படத்திற்கு பெரிய கேன்வாஸ் உருவாக்கிக் கொடுத்துள்ளார். அவரது ஒளிப்பதிவின் வேகம் விறுவிறு திரைக்கதைக்கு ஏற்ற வகையில் பரபரப்பாகக் காட்சிகளை உருவாக்கி உள்ளன.
சற்றும் ஓயாமல் பரபரக்கிற கதைக்கு ஏற்ற வேகத்தில் ரேமண்ட் டெரிக் , தின்சா கூட்டணி படத் தொகுப்பில் பலம் காட்டி உள்ளார்கள்
விஜய் ஆண்டனியின் இசையும் படத்திற்குப் பெரும்பலமாக அமைந்துள்ளது. பின்னணி இசையில் பிரம்மாண்டத்தையும் உணர்ச்சிகளையும் ஆவேசத்தையும் என அனைத்தையும் கலந்து இணைந்து ஒலிக்க விட்டுள்ளார்.
இந்த அரசியலமைப்பில் ஒரு மீடியேட்டர் எந்தெந்த சந்து பொந்துகளிலும் நுழைந்து இப்படிப்பட்ட காரியங்களைச் சாதிக்க முடியும், எந்த எல்லை வரையும் சென்று அவர்கள் வெற்றி பெற முடியும் என்று அமைப்பில் உள்ள ஓட்டை உடைசல்களை எல்லாம் சுவாரஸ்யமாகக் காட்டி கதை ஆக்கி உள்ளார் இயக்குநர் அருண் பிரபு . 
இடைவேளை வரை ஒரு வேகத்தில் செல்கிற படம், இரண்டாவது பாதியில் டாப் கியரில் ஓட்டம் எடுக்கிறது.ஒரு படத்தில் ஏராளமான தகவல்கள் கொடுக்க வேண்டும் என்கின்ற தனது தவிப்பை இயக்குநர் இதில் நிறைவேற்றி இருக்கிறார். அப்பப்பா எத்தனையெத்தனை காட்சிகள்.சாதாரண ரசிகருக்கு இதனை உள்வாங்குவதில் சிரமம் ஏற்படலாம்.
இரண்டாம் பாதியில் வரும் சுவர் எழுத்தாளர் வாகை சந்திரசேகர் பாத்திரம் நல்லதொரு சித்திரம்.
இந்த உலகத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இயங்குவது அரசாங்கம் என்று நினைக்கிறோம். ஆனால் அதற்குப் பின்னே இயங்குபவர்களையும் பணம் சம்பாதிக்கும் ஆட்டத்தில் அவர்கள் நடத்தும் காய் நகர்த்தல்களையும் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது இந்தப் படம். பராசக்திக்குக் பிறகு இதில் வரும் நீண்ட கிளைமாக்ஸ் வசனம் பேசப்படும் .அந்த அளவிற்கு செறிவுடன் எழுதப்பட்டுள்ளது .படம் பார்க்கும் அனைவரும் தங்களை இணைத்துக் கொண்டு பார்க்கும் வகையில் சமகால பிரச்சினைகளை பிரதிபலிக்கிற இந்தப் படம் வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் பேசப்படும் ஒரு படமாக அமைந்துள்ளது.இந்தச் ’சக்தித் திருமகன்’வெல்வான் என்பதில் சந்தேகம் இல்லை


