’சங்கத்தமிழன்’விமர்சனம்

விஜய் சேதுபதி, ரிஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி, நாஸர் நடிப்பில் , விவேக் மெர்வின் இசையில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்.விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் இப்படம் எப்படி என்பதை பார்ப்போம்.

முதன்முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. நாயகன், வில்லன் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர் அவர். அதோடு, கதாபாத்திரத்திற்கு கதாபாத்திரம் வேறுபாடு காட்டவும் அவர் தவறுவதில்லை. அந்தவகையில் இப்படத்தில் நிச்சயம் தனது இரண்டு கதாபாத்திரத்திலும் நம்மை ரசிக்க வைப்பார் என நம்பி உள்ளே நுழைகிறோம். . சரி படம் எப்படி? முதலில் கதை எப்படி?


தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தாமிர உருக்கு ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு காரணமாக இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. சென்னையில் சினிமாவில் நடிக்கும் ஆசையில் தன் நண்பர் சூரியுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறார் நாயகன் முருகன் (விஜய் சேதுபதி). அந்த தாமிர உருக்கு ஆலை உரிமையாளரின் மகள் (ராஷி கண்ணா) முருகனைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

முருகனை அழைத்துப் பேசும் தொழிலதிபர், தன் தாமிர ஆலைக்கு எதிர்ப்பு நிலவும் ஊருக்கு முருகனை அனுப்பி, அந்த ஊரைச் சேர்ந்த சங்கத் தமிழனைப் (அவரும் விஜய் சேதுபதிதான்) போல நடித்து, ஊர் மக்களை தனக்கு ஆதரவாகத் திருப்பும்படி சொல்கிறார். பிறகு என்ன ஆகிறது என்பது மீதிக் கதை என்று இந்தக் கதைச் சுருக்கத்தை முடித்துவிடலாம்.


மேலே உள்ள கதையைப் படித்தால் சற்று குழப்பமாக இருக்கலாம். ஆனால், படம் இதைவிட குழப்பமாக இருக்கும். துவக்கத்திலிருந்தே எந்த திசையில் செல்வது என்ற பிரச்சனையிலேயே தட்டுத்தடுமாறி நகர்கிறது படம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஒரு பாத்திரத்தில் நடிக்கிறாரா, இரண்டு பாத்திரங்களில் நடிக்கிறாரா என்ற குழப்பம் இயக்குநருக்கே இருக்கும் போலிருக்கிறது.

விஜய் சேதுபதி படத்தில் முதல்முதலில் அறிமுகமாவதுபோல, ஏகப்பட்ட தடவை ‘ஸ்லோமோஷனில்’ பயங்கரமான பின்னணி இசையுடன் திரையில் நுழைகிறார். எதற்காக இத்தனை தடவை?

முதலில் விஜய் சேதுபதியைப் பார்க்கும் வில்லன் “அவன் முருகன் இல்லைடா, (சங்கத்)தமிழன்” என்கிறார். ஆனால், அடுத்த காட்சியிலேயே “யாருடா அவன்?” என்கிறார். பிறகு தேனி மாவட்டத்திற்கு வரும் முருகன், சங்கத்தமிழனாக நடிக்க ஆரம்பிக்கிறார். பிறகு, அவர்தான் உண்மையான சங்கத் தமிழன் என்று சொல்லி படத்தை முடித்துவிடுகிறார்கள்.

இவ்வளவு குழப்பமான கதையில் ஒவ்வொரு நடிகர்களும் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார்கள்.

படத்தில் லோக்கலாக இறங்கி அடித்திருக்கிறார், விஜய் சேதுபதி. முருகனாகவும், சங்கத்தமிழனாகவும் வரும் அவர், ராக்ஷி கன்னாவுடன் ரொமான்ஸ் செய்யும்போதும், நிவேதா பெத்துராஜின் முடிவால் கலங்கும்போதும் இயல்பாக நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். அதே சமயம், தன் உடல் எடையை சற்று கவனித்து இருக்கலாம்.

நிவேதா பெத்துராஜ் சிறிது நேரமே வந்து, அனுதாபத்தை அள்ளிக்கொள்கிறார். ராக்ஷி கன்னாவுக்கு அதிக வேலையில்லை. பாடல்களுக்கு ஆடுவதோடு சரி. ஹீரோ என்று சொல்லி, அடிக்கடி விஜய் சேதுபதியிடம் மொக்கை வாங்கி காமெடி செய்துள்ள சூரி, தொட்டி ஜெயா சிம்பு மாதிரியும் வருகிறார்.
நல்லது செய்ய போராடும் நாசர், வழக்கமான வில்லன்கள் அசுதோஷ் ராணா, ரவி கிஷன் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், ஸ்ரீமன், மைம் கோபி, துளசி, ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் கேமரா, தேனி மற்றும் குற்றாலத்தின் அழகை மேலும் அழகாக காட்டி இருக்கிறது.

இது பல வருடம் பார்த்து பழகி போன கதை.

விவசாயம், கம்பெனி மூடுதல், மரம் நடுதல் போன்ற நல்ல விஷயங்கள் கூட சினிமாவில் காட்டி காட்டி அதுவே சில இடங்களில் படத்திற்கு மைனஸ் ஆகிவிடுகின்றது, அதை விட கத்தி படத்தை விஜய் சேதுபதி வெர்ஷனில் பார்த்த உணர்வு.

வில்லன் கதாபாத்திரம் பிறமொழி நடிகர் என்பதால் அவர்கள் வரும் காட்சி ஏதோ டப்பிங் படம் பார்ப்பது போல் உள்ளது. அதிலும் இரண்டாம் பாதி சோர்வூட்டும் படி உள்ளது.

படத்தின் ஒளிப்பதிவு கலர்புல், இசை விவேக் மெர்வின் சிறப்பாக செய்துள்ளனர். திரைக்கதை இந்தப் படத்தில் மோசமான ஒரு விஷயம் எனலாம்.

ஆறுதலானவை? விஜய் சேதுபதி பல மாஸ் காட்சிகளில் முடிந்த அளவு நன்றாக நடித்து கொடுத்துள்ளார். விஜய் சேதுபதி சூரி காம்போ சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகிறது என்பதே ஆறுதல். இனி விஜய் சேதுபதி கதைத்தேர்வில் மேலும் கவனம் செலுத்தவேண்டும்.கிராமத்து பின்னணியில் சமூக கருத்தும் கொண்ட விஜய் சேதுபதியை தரம் உயர்த்தியுள்ள ஒரு மசாலாப்படமாக இதை ஜாலியாகப் பார்த்து வரலாம்.