தமிழ்ச்சினிமா நாயகர்களின் மூன்று கடமைகளில் ஒன்று ரவுடியாக நடிப்பது. அவ்வகையில் விக்ரம் பிரபு முதல் முறையாக ரவுடியாக நடித்துள்ள படம்தான் ‘சத்ரியன்’.
திருச்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா சரத் லோகிதஸ்வா. அவரது வளர்ச்சி பிடிக்காத அமைச்சரான ’மெட்ராஸ்’ நந்தகுமார், மற்றொரு ரவுடியான அருள்தாஸை வைத்து அவரை கொலை செய்துவிடுகிறார்.
லோகிதஸ்வாவின் குழுவில் அவருக்கு அடுத்தபடியாக இருந்த விஜய் முருகன், லோகிதஸ்வாவின் இடத்திற்கு வர, அவருக்கு நம்பிக்கைக்குரியவராக விக்ரம் பிரபு இருக்கிறார். லோகிதஸ்வா இறந்தாலும், அவரது ஆட்கள் மீண்டும் தலைதூக்க கூடாது என்பதற்காக விக்ரம் பிரபுவைக் கொலை செய்ய அருள்தாஸ் கோஷ்ட்டி திட்டமிட, அருள்தாஸ் கோஷ்டியை பழிவாங்க விஜய் முருகன் அணி காத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், லோகி தஸ்வேதாவின் மகளான மஞ்சிமா மோகன் கல்லூரிக்கு செல்லும் வழியில் சிலர் தொல்லை செய்வதால், அவருக்கு பாதுகாப்பாக விக்ரம் பிரபுவை விஜய் முருகன் அனுப்பி வைக்கிறார். பிறகென்ன? விக்ரம் பிரபு மீது மஞ்சிமா மோகன் காதல் கொள்வதோடு, அவரை திருத்தவும் முயற்சிக்கிறார்.
முதலில் மஞ்சிமாவின் காதலை நிராகரிக்கும் விக்ரம் பிரபு, பிறகு ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அவரது காதலுக்கு விஜய் முருகனும், மஞ்சி குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவிக்க, அனைவரது எதிர்ப்பையும் மீறுகிறார் விக்ரம் பிரபு. இதனால் அவரைத் தீர்த்துக்கட்ட விஜய் முருகன் முடிவு செய்ய, மறுபுறம் அருள் தாஸும் விக்ரம் பிரபுவை கொலை செய்ய தேதி குறிக்கிறார்.
கத்தியை தூக்கி எறிந்துவிட்டு காதலியை கரம் பிடிக்க நினைக்கும் விக்ரம் பிரபு, தனது உயிருக்கு எமனாக இரண்டு பக்கத்தில் உள்ள கத்திகளிடம் இருந்து தப்பித்தாரா இல்லையா, என்பது தான் க்ளைமாக்ஸ்.
தமிழ் சினிமாவில் வந்த ரவுடிக்கதை படங்களிலேயே சற்றுத் தரமான படம் என்று இந்தப் படத்தைக் சொல்லலாம். நாகரிகமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
ஊரே நடுங்கும் ரவுடி வேடம் என்றாலும் விக்ரம் பிரபுவின் நடிப்பிலும், தோற்றத்திலும் அவ்வளவு மென்மை. பார்க்க கல்லூரி மாணவராக இருப்பவரை ரவுடி என்று சொன்னால், நம்பமாட்டோம்தான். இருந்தாலும் ஆக்ஷன் காட்சிகளில் கத்தி வீசும் விதத்தில், நானும் ரவுடி தான் என்று நிரூபிப்பவர், நம்ப வைக்கிறார்.காதல் காட்சிகளில் அளவாக அழகாக நடித்திருக்கிறார்.
மஞ்சிமா மோகனை பார்த்து ரசிக்க நிறைய உள்ளன. நடிப்பு அப்புறம்தான். இருந்தாலும் உடல் எடையில் சற்று கவனம் செலுத்தினால் நல்லது,
சரத் லோகிதஸ்வேதா, அருள்தாஸ், விஜய் முருகன் ஆகியோர் எப்போதும் போல, தங்களது தோற்றத்திலும், நடிப்பிலும் ரவுடி கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். போலீசாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், அமைச்சராக நடித்துள்ள நந்தகுமார், மஞ்சுமா மோகனின் அம்மாவாக நடித்துள்ள தாரா என்று அனைவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ரவுடிசம் படம் என்றாலே வெட்டு, குத்து காட்சிகளைக் காட்டிலும் நடிகர்கள் கத்தும் காட்சிகள் தான் அதிகமாக இருக்கும். ஆனால், அவற்றை தவிர்த்து ரசிகர்களுக்கு தலைவலியை கொடுக்காத வகையில் காட்சிகளை ரொம்ப மென்மையாகக் கையாண்டிருக்கும் இயக்குநர் எஸ்.ஆர்.பிராபகர், கத்தியால் வெட்டுவது, துப்பாக்கியால் சுடுவது போன்ற சிவப்பு காட்சிகளை வைத்திருந்தாலும், அவற்றின் வன்முறையை மறைமுகமாக கையாண்டிருக்கும் விதத்திற்கு சபாஷ் சொல்லலாம்.
நாயகன் நாயகி இருவரிடம் இருக்கும் தீவிரமான காதலை இயக்குநர் வெளிக்காட்டும் இடங்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. விஜய் முருகன் எது சொன்னாலும் செய்யும் விக்ரம் பிரபு, காதல் விவகாரத்தில் அவரையே ஆப் செய்வது, தான் காதலிப்பதை விக்ரம் பிரபுவிடம் தைரியமாக சொல்லும் மஞ்சிமா மோகன், அதே காதலுக்காக தனது அம்மாவையும், அண்ணனையும் எதிர்கொள்ளும் விதம், காதலிக்கும் அத்தனை பெண்களுக்கும் டானிக்.
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு, எம்.வெங்கட்டின் எடிட்டிங், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்துமே கச்சிதமாக அமைந்துள்ளன.பாடல்களில் மைனா ரெண்டு சரியான மெலடி.வரிகள் வைரமுத்து.
ரவுடி, அவருக்கு வரும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சினை, என்று நாம் பல படம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் ஒரு படமாக இருக்க கூடாது என்பதற்காக இயக்குநர் ரொம்ப யோசித்திருக்கிறார். இது என் பாணி ரவுடி படம் என்று இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் கூறியுள்ளார்.
பார்ப்பவர்களுக்கு வன்முறைக்கு எதிராக மென்மையான பாடத்தை நாயகி மூலம் இயக்குநர் எடுத்துள்ள விதம் பாராட்டுக்குரியது.