‘காதல் போயின் சாதல்’ என்பது அந்தக் காலம் .’காதல் போயின் இன்னொரு காதல்’ என்பது இந்தக் காலம். அந்த வகையில் உருவாகியிருக்கிறது.இப்படத்தில் மூன்று காதல்கள் சொல்லப்படுகின்றன.வெல்லப் படுவது எந்த காதல்?
குடிபோதையில் போலீசில் சிக்கிக் கொள்ளும் அசோக் செல்வன் தனது தோல்விக் காதல் கதைகளை கூறுவதாகப் படம் தொடங்குகிறது.
பள்ளிக்காலத்திலேயே நாயகன் அசோக் செல்வனுக்குக் காதல் வருகிறது. அதுவும் சக மாணவி கார்த்திகா முரளிதரன் மீது ஒருதலைக் காதல்.ஆனால் ”நேரம் கூடிவந்த வேளை நெஞ்சை மூடி வைத்து விடுவதால் “,அது தோல்வியில் முடிகிறது.அடுத்து கல்லூரிப் பருவத்தில் ரியாவுடன் காதல்.ஆரம்பம் என்னவோ ஆரவாரம் தான் ஆனால் பிறகு அந்தக் காதல் ஜோதி அணைந்து விடுகிறது.ஆனாலும் இந்த நாயகன் விடவில்லை மூன்றாவதாக இன்னொன்று.மேகா ஆகாஷை காதலிக்கிறார். இந்தக்காதல் வெற்றி பெற்றதா? தோல்வியடைந்ததா? என்பதை கலகலப்பாகச் சொல்வது தான் ‘சபா நாயகன்’ படத்தின் கதை.
மூன்று வெவ்வேறு சூழல்களில் மூன்று வெவ்வேறு பருவங்களில் காதல் கதைகளில் நடித்துள்ள அசோக் செல்வனுக்கு நடிப்புக்கான தருணங்கள் மிகுதி. அதை அழகாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் கூட. தனது காதல் தோல்வியின் வரலாற்றை அவர் கூறும் போது கலகலப்பு கொடிகட்டுகிறது.கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ் என மூன்று நாயகிகள், மூவரும் தோற்றம் நடிப்பு எனக் கவர்கிறார்கள்.ஆனால், மூவரில் கார்த்திகா முரளிதரனுக்கு தான் அதிக முக்கியத்துவம். அவரும் தனது பணியைச் சிறப்பாக செய்து முதலிடம் பிடித்து விடுகிறார். படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மட்டும் வந்தாலும் மேகா ஆகாஷின் வருகை படத்திற்குப் பலம்.சாந்தினி சில காதல் காட்சிகள், ஒரு பாடல் என வருகிறார்.அசோக் செல்வனின் நண்பர்களாக வரும் அருண், ஜெயசீலன், ஸ்ரீராம், அனீஷ் ஆகியோர் யூடியூப் வீடியோவில் நடிக்கும் பாணியில் நடித்திருப்பதால்,சலிப்பூட்டுகின்றன.
ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகியோரின் ஒளிப்பதிவு மூன்று காலகட்டங்களையும்வேறு நிறங்களில் மாறுபட்டுக் காட்டியுள்ளன.காட்சிகளை வண்ணமயமாகவும் மாற்றியுள்ளனர்.
லியோன் ஜேம்ஸின் இசையில் பாடல்கள் எங்கேயோ கேட்ட இசையாக இருந்தாலும் இளைஞர்களுக்குப் பிடிக்கும்.இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் சி.எஸ்.கார்த்திகேயன்,இக்கால இளைஞர்களுக்கு ஏற்றபடி படத்தைக் கொடுத்திருக்கிறார்.
தோல்விகள் எதையும் மண்டையில் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் டேக் இட் ஈஸ் ஈசியாக கொள்வது இக்கால இளைஞர்களின் போக்கு. அதே போல் காதலையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.இக்கால இளைஞர்களுக்கு ஏற்ற இப்படம் ,அவர்களால் வரவேற்கப்படும்.