தர்ஷன், லால், சுஜித், முனிஷ்காந்த், பாடினிகுமார், அரோல் டி. சங்கர், ரம்யா ராமகிருஷ்ணன், சுந்தரேஸ்வரன், கௌஷிக்,ஹலோ கந்தசாமி நடித்துள்ளனர்.கௌதமன் கணபதி எழுதி இயக்கியுள்ளார். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை மற்றும் ஒரிஜினல் ஸ்கோர் விகாஸ் படிசா, படத்தொகுப்பு ரேணுகோபால், கலை இயக்கம் ஆர் கே மனோஜ் குமார், ஸ்டண்ட் ஆக்சன் சந்தோஷ்.அப்பீட் பிச்சர்ஸ் சார்பில் வி ஆர் வி குமார் தயாரித்துள்ளார்.
திரைப்படத்தின் பெயர் சரண்டர் என்று இருப்பதால் இது குற்றவாளி சரண் அடைவது பற்றியது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.தேர்தல் கா த்தில் காவல் நிலையத்தில் துப்பாக்கிகளை சரண் செய்யும் நடைமுறை சார்ந்த பின்னணியில் நகரும் கதை.
சரி படத்தின் கதை என்ன?.
அது தேர்தல் காலம். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது.தேர்தல் காலங்களில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் போலீசின் நிலையத்தில் அதை சரண் செய்ய வேண்டும்.மன்சூர் அலிகான் தனது பாதுகாப்புக்காக வைத்திருக்கும் துப்பாக்கியை திருமழிசை காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார். அங்கே எழுத்தராகப் பணியாற்றும் லால் அதை வாங்கி லாக்கரில் வைக்க்கிறார். ஆனால் அந்தத் துப்பாக்கி காணாமல் போகிறது.தேர்தல் நடந்ததும் அந்த துப்பாக்கியை ஒப்படைக்க வேண்டும்.அது தேர்தல் காலம் என்பதால் காணாமல் போன துப்பாக்கியால் அசம்பாவிதம் ஏதும் நடக்குமோ என்று பரபரப்பு பற்றிக் கொள்கிறது.
இன்னொரு பக்கம் தாதா சுஜித்திடம் ஒரு அரசியல்வாதி தேர்தல் செலவுக்காக பத்து கோடி ரூபாய் பணத்தைக் கொடுக்கிறார்.காவல்துறை மூலம் அந்தப் பணத்தைக் கொண்டு சென்றால் பயம் இல்லை என்று கருதி இன்ஸ்பெக்டர் வில்லியம்ஸ் மூலம் அந்த பணம் கொண்டு செல்லப்படுகிறது.பணம் எடுத்துச் செல்கிற ஜீப் விபத்துக்குள்ளாகிறது. வில்லியம்ஸ் மருத்துவமனையில் இருக்கிறார். ஆனால் பணம் காணாமல் போய்விட்டது என்கிறார்.தாதா சுஜிதோ இதில் சந்தேகப்படுகிறார்.ரவுடி சுஜித் அந்த போலீஸ் அதிகாரி வில்லியம்சை மிரட்டுகிறார்.காணாமல் போன துப்பாக்கியையும் பணத்தையும் கண்டுபிடித்தார்களா? என்பதை பரபரப்பாகச் சொல்வதே 143-58 நிமிடங்கள் கொண்ட ‘சரண்டர்’ திரைப்படம்.
பயிற்சி எஸ்.ஐ . புகழேந்தியாக பிக் பாஸ் புகழ் தர்ஷன் நடித்திருக்கிறார். காவல்துறை சீருடையில் அவர் கம்பீரமாகவும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் காட்சியளிக்கிறார். நடிப்பிலும் அவர் பல படிகள் முன்னேறி இருக்கிறார். மனசாட்சி உள்ள மனிதராக அவர் ஆங்காங்கே தனது மன உணர்வுகளை வெளிப்படுத்தும் போதும் ஆவேசமாக ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டும் போதும் தன்னை வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.
நல்ல போலீசாக ரைட்டர் பாத்திரத்தில் வருகிற லால், வாழ்க்கை முழுவதும் இழப்புகளையும் அவமானங்களையும் சந்திக்கிறார் .ரவுடி சுஜித்தின் தம்பி மூலம் அவர் ஒரு பிரச்சினையில் சிக்கி அவமானங்களைச் சந்திக்கிறார்.மிகவும் விரக்திக்கு உள்ளான அந்த பாத்திரத்தில் அவர் அற்புதமாக நடித்துள்ளார்.போலீஸ் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது வல்லவனாக இருக்க வேண்டும் என்றும் இங்கே ஆடுகிற ஆட்டத்தில் சூது நிறைந்திருக்க வேண்டும் என்று அவர் புலம்புகிறார்.எந்தத் தவறும் செய்யாமல் இருக்கும்போது அவருக்கு நேரும் நெருக்கடிகளும் வரும் சோதனைகளும் பார்வையாளர்களைப் பரிதாபம் கொள்ள வைக்கின்றன.இதுவரை எதிர்மறை பாத்திரங்களில் பார்த்த லால் இதில் ஒரு மனசாட்சி கொண்ட மனிதராக நடிப்பில் பல்வேறு பரிமாணங்களைக் காட்டி கலங்க வைக்கிறார்.
ஈரம் என்பதே இல்லாத இதயம் கொண்ட வில்லனாக கனகு பாத்திரத்தில் வரும் சுஜித் ,அந்தப் பாத்திரத்தில் கொடூர வில்லத்தனத்தைக் காட்டிப் பார்வையாளர்களின் சாபங்களை அள்ளுகிறார்.அந்த அளவிற்கு அவர் மிரட்டி உள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் இந்தப் படத்தில் அவராகவே வருகிறார். சில காட்சிகளில் அவர் வந்தால் கூட அவரது திரை இருப்பு படத்திற்குப் பலம் சேர்க்கிறது.
ஒரு குட்டி அரசியல் கட்சித் தலைவராகவும் பயந்த சுபாவம் கொண்டவராகவும் வருகிற முனிஷ்காந்த்
துப்பாக்கி வாங்க அலையும் காட்சிகள் சிரிப்பு மூட்டுகின்றன. பரபரப்பான இந்தப் படத்தின் கதையோட்டத்தில் அதையொட்டிய நகைச்சுவையைக் கலந்திருப்பது ரசிக்க வைக்கிறது. 
பாடினிகுமார், அரோல் டி. சங்கர், ரம்யா ராமகிருஷ்ணன், சுந்தரேஸ்வரன், கௌஷிக்,ஹலோ கந்தசாமி போன்றோர் தங்கள் பணியைச் சிறப்பாக செய்துள்ளனர்.
காவல் நிலையத்தில் அதிகார மட்டத்தில் நடக்கும் ஈகோ யுத்தம், ஆணவப் போட்டி, குண சித்திர முரண்பாடுகள், பொறாமை ,வன்மம் அனைத்தையும் அதற்கான பாத்திரங்களின் மூலம் இந்தக் கதையின் உள்ளே கொண்டு வந்து நிரவியிருக்கிறார் இயக்குநர்.
ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் குற்றச் செயல் நடக்கும் இடங்களையும் பெரும்பாலும் இரவு நேரக் காட்சிகளையும் சண்டைக் காட்சிகளையும் மிகச் சிறப்பாகப் படப்பதிவு செய்துள்ளார். இசையைப்பாளர் விகாஸ் படிசா பின்னணி இசையில் படத்தின் விறுவிறுப்பையும் பரபரப்பையும் பல டிகிரி ஏற்றுகிறார்.
தனது நேர்த்தியான படத்தொகுப்பு மூலம் ரேணுகோபால் தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார் .எழுதி இயக்கியிருக்கும் கௌதம் கணபதி ஒரு சிறு இழை கதையை எடுத்துக்கொண்டு, அதை அழகாகத் திரைக்கதை நெய்து முழு ஆக்சன் த்ரில்லராக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
ஒரு சிறுவனுடன் காவல் நிலையம் வரும் பெண்மணி, டீ விற்கும் பாய், தள்ளுவண்டி கடையில் இட்லி சாப்பிடும் பைத்தியக்காரன், மூர்த்தியாக கனகுடன் இருப்பவர் ,தண்ணீர் பிடிக்க வரும் லாரி டிரைவர், காவல் நிலையத்தில் முகம் காட்டும் காவலர்கள் என்று சிற்சில காட்சிகளில் வந்தாலும் அவர்கள் முகம் பார்வையாளர்களிடம் பதிகிற அளவிற்கு அவர்களது குணச்சித்திரத்தைத் தெளிவாகச் சித்தரித்துள்ளார் இயக்குநர்.
கதை சொல்லும் பாதையில் அடுத்தது என்ன ?அடுத்தது என்ன? என்ற பரபரப்போடு படத்தை நகர்த்தி செல்லும் இயக்குநர் முழுப் படத்தையும் தொய்வில்லாத திரைக்கதையால் கொண்டு சென்று பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைத்து விடுகிறார்.
மொத்தத்தில் ’சரண்டர்’ ரசிகர்களைக் கவரும் .


