தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளையின் சார்பில் அதனது முன்னாள் நிர்வாகிகளான திரு.சரத்குமார், திரு.ராதாரவி, திரு.வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. உடனடியாக திரு.சரத்குமார் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்துவிட்டு தொலைக்காட்சி பத்திரிகைகளுக்கு தந்த பேட்டிகளில் “இது தனிப்பட்ட முறையில் தன்னை பழிவாங்கும் நடவடிக்கை” என்று சொல்லியுள்ளார். அது சார்ந்து சில விளக்கங்களை நடிகர் சங்க அறக்கட்டளை தர கடமைப்பட்டுள்ளது. நடிகர் சங்க செயல்பாட்டில் இரண்டு விதமான சட்ட திட்டங்கள் உள்ளன.
ஒன்று – நடிகர் சங்க (அயோஸீயேசன்) சட்டத்துக்கு உட்பட்டது.
இரண்டாவது – அறக்கட்டளை (டிரஸ்ட்) சட்டத்துக்கு உட்பட்டது.
இரண்டும் தனித்தனியாக இருந்தாலும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. 2015 நடிகர் சங்க தேர்தலுக்கு பின் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகம் “அறக்கட்டளைக்கு” நிர்வாக குழுவில் இருந்து தலைவர் திரு. M. நாசர், செயலாளர் திரு.விஷால், பொருளாளர் திரு. SI.கார்த்தி ஆகியோரையும் செயற்குழுவில் இருந்து திரு.பூச்சி முருகன், திருமதி.குட்டி பத்மினி, திரு. ராஜேஷ் ஆகியோரையும் பொதுக்குழுவில் இருந்து திரு. கமல்ஹாசன், திரு. ஐசரி கணேஷ், திரு.எஸ்.வி.சேகர் ஆகியோரையும் நியமித்தது. இந்த 9 பேர் கொண்ட அறங்காவலர்கள் செயற்குழு கூட்டம் மாதா மாதம் நடைபெற்று வருகிறது.
அறக்கட்டளைக்கு வருமானம், இருக்கிறதோ இல்லையோ, அது சார்ந்த கணக்குகளை சட்டப்படி வருடாவருடம் தணிக்கை செய்து பராமரிப்பது ஒரு நிர்வாகத்தின் கடமை.
ஆனால், 10 வருடங்களாக பொறுப்பில் இருந்த கடந்த நிர்வாகிகள், இரண்டரை வருட அறக்கட்டளை கணக்குகளை உடனடியாக ஒப்படைத்திருக்க வேண்டாமா?
ஆனால், புதிய நிர்வாகம் பல கடிதங்கள் எழுதிய பின் தான் கணக்குகள் கொடுக்கப்பட்டன, “அதை அப்படியே ஏற்றுக் கொள்வதா? அல்லது சிறப்பு தணிக்கை செய்து ஏற்றுக் கொள்வதா?” என அறக்கட்டளை மற்றும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முடிவில் “சிறப்பு தணிக்கையாளரை” நியமித்து கணக்குகள், மறு தணிக்கை செய்து ஏற்றுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்காக M/S. SAMBANDAM ASSOCIATES சிறப்பு தணிக்கையாளராக நியமிக்கப்பட்டனர்.
தணிக்கைக்குப் பின் அவர் தாக்கல் செய்த அறிக்கையில் “அறக்கட்டளை சட்டத்தை மீறி பல லட்சங்கள் பணம் கையாளப்பட்டு இருக்கிறது. அதற்கு சரியான விளக்கங்களும் இல்லை, எனவே இதை சட்டப்படி அணுக வேண்டும்” என அவர் ஆதாரங்களுடன் பரிந்துரை செய்தார். அத்தோடு கடந்த 3 வருட கணக்குகளுக்கு விளக்கம் கேட்டு வருமானவரித்துறை – சேவை வரித்துறை போன்றவற்றில் இருந்து அறக்கட்டளைக்கு கடிதம் வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இதற்கான பதிலை சொல்ல வேண்டியது அந்த காலகட்ட நிர்வாகிகளின் கடமை. தொடர்ந்து நடந்த அறக்கட்டளை கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது. முடிவில் “காவல்துறையில் இதுபற்றி புகார் செய்வது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக எங்களது அறக்கட்டளை நிர்வாகி திரு.பூச்சி முருகனும், வழக்கறிஞர் திரு.கிருஷ்ணாவும் சென்று புகாரை பதிவு செய்துள்ளனர்.
இது ஒட்டுமொத்த நிர்வாகிகளின் முடிவு தனிப்பட்ட யாருடைய முடிவும் அல்ல. அதனால் “இது பழிவாங்கும் நடவடிக்கை” என்ற உங்கள் குற்றசாட்டை வன்மையாக மறுக்கிறோம். நாங்கள் பொறுப்பேற்ற மூன்று மாத காலமாக எங்கள் நிர்வாக பொறுப்புகளுடன், உங்களின் கடந்த இரண்டரை வருட கணக்குகளை சரி பார்ப்பதே பெரும் போராட்டமாக உள்ளது. எங்கள் செயல்பாடுகளுக்கு மட்டும்தான் எங்களால் பதில் சொல்ல முடியும். கடந்த கால நிர்வாக செயல்பாட்டிற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
நீங்கள் சொல்கிற பதிலை காவல்துறையின் முன் விளக்கி, இந்த கணக்குகள் விடுவித்துக் கொடுத்தால் நமது சங்க வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்.’ இவ்வாறு கூறப்பட்டுள்ளது.