அண்மைக்காலத்தில் பெரிய வெற்றி பெற்ற ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ‘ பட வெற்றிக்குப்பின் அதே நகைச்சுவைத் துணுக்குகளின் தோரணம் கொண்ட மசாலாவை நம்பி எழில் இயக்கியுள்ள படம்தான் ‘சரவணன் இருக்க பயமேன்’. காமெடி இருக்கப்பயமேன் என்று நம்பி இறங்கியுள்ளார்.ஆனால் அதில் ஜெயித்தாரா? இல்லையா? பார்ப்போம்.
உதயநிதி தமிழ்ச் சினாமாவின் வழக்கம் போல நாயகன்,அதாவது வெட்டியாக சுற்றுகிறவர். அப்படிப்பட்டவர் ,சூரி மூலம் தொடர்பு கிடைத்து புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தேசியக் கட்சியின் தமிழக தலைவராகிவிடுகிறார். அவரது சிறு வயது தோழியான ரெஜினா கெசண்ட்ராவுக்கும் அவருக்கும் எப்போதும் மோதல் இருந்தாலும், உதய்க்கு மட்டும் ஒரு பக்கம் ரெஜினா மீது ஒரு கண்ணும் காதலும் உண்டு. ஆனால், ரெஜினாவோ அந்த காதலை வெட்டி விட முயல்கிறார். வாழ்வே போனாலும் பரவாயில்லை என்று மன்சூர் அலிகானின் மகனான சாம்ஸை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்.
உதயநிதியைப் பார்த்தாலே வெறுக்கும் ரெஜினா, சில சமயங்களில் அவருடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறார்., அவரைதிருமணம் செய்து கொள்வதாகவும் கூறுகிறார். இது என்ன குழப்பம்? அவரது இந்த மாற்றத்திற்கான காரணம் தெரியாமல் பலரும் குழம்ப, அங்கே ஒரு ஆவியின் ஆட்டம் ஆரம்பமாகிறது. குழப்பத்துக்குக் காரணமான அந்த ஆவி யார்? அது ஏன் உதயநிதியின் காதலுக்கு உதவி செய்கிறது, ? என்பதற்கான பதில் பிளாஷ்பேக் முடியும் போது தெரியும். பிறகு நடப்பவை என்ன கதை முடிவில் புரியும்.
உதயநிதி தனக்கு கதை வேண்டாம் காமெடியே போதும் என்று நம்பிவருகிறார்.அதனால்தான் இதில் கோட்டை விட்டுள்ளார்.காரணம் செயற்கையான நாடகம் போன்ற காட்சிகள் நம் பொறுமையைச் சோதிக்கின்றன.
வெறும் வாயை மட்டும் நம்பி வண்டி ஓட்டுகிறார் சூரி. இப்படியே போனால் அவரைக் கோடம்பாக்கம் டிக்கெட் கொடுத்து வழி அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிடும்.
சில படங்களில் ரசிகர்களைச் சிரிக்க வைத்த யோகி பாபுவின்வசனங்கள் இதில் எடுபடவில்லை. அந்தப் பஞ்சாயத்து காட்சியில் நடக்கும் பாட்டு கச்சேரியில் நடனம் ஆடும் ரோபோ சங்கரும், ரவி மரியாவும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்கள். அவர்களுடன் அவ்வப்போது கூட்டணி அமைக்கும் சாம்ஸும் நமக்கு வயிறு வலியை ஏற்படுத்தி விடுகிறார். இருந்தாலும் அக்காட்சிகளில் ஆபாசமல்லவா கொடிகட்டிப்பறக்கிறது?
இதுவரை நாம் ரெஜினாவை இப்படி பார்த்திருக்கவே முடியாது. பளிச்சென வருகிறார்.
டி.இமானின் இசையில் பாடல்களில் பழைய வாசனை .எனவே மனதில் நிற்கவில்லை .என்றாலும், க்ளைமாக்ஸின் போது வரும் குத்து கமர்ஷியல் ரகளை ! நடுவே ஆவி, அதற்கு ஒரு பிளாஷ்பேக், என்று திரைக்கதையை நகர்த்தியுள்ளார்.
இதுவரை கதையை நம்பிவந்தார் எழில். ரசிகர்களின் நம்பிக்கையும் அதுவே.ஆனால் அது இந்த படத்தில் உடைந்து விட்டது. மொத்தத்தில் செயற்கையான ஒரு மசாலாபடம்.