
சமந்தா , தேவ் மோகன் , சச்சின் கெதகெர், மோகன் பாபு, அதிதி பாலன், அனான்யா நாகெல்லா, பிரகாஷ்ராஜ், கவுதமி,மதுபாலா, கபீர்பேடி நடித்த படம் ‘குணசேகர் இயக்கியுள்ளார் .நீலிமா குணா மற்றும் தில் ராஜு தயாரித்துள்ளனர்.
துஷ்யந்தன் சகுந்தலை சம்பந்தப்பட்ட புராண இதிகாசக் காதல் கதை தான் சாகுந்தலம்.
வனத்தில் கைவிடப்பட்டுக் கிடந்த குழந்தையை எடுத்து வளர்க்கிறார் கண்வ மகரிஷி.அதற்குச் சகுந்தலை என்ற பெயரிட்டு வளர்க்கிறார். சகுந்தலை வளர்ந்து பருவமடைகிறாள். அவளை வனாந்தரத்தில் கண்ட அரசன் துஷ்யந்தன்அவளது அழகில் மயங்கி காதல் கொள்கிறான். இருவருக்கும் காதல் நிகழ்கிறது .ஐம்பூதங்களைச் சாட்சியாக வைத்து மாலை மாற்றிக் கொண்டு காந்தர்வ மனம் செய்கிறான்.நாடு சென்று திரும்பி வந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறான் .அவனது நினைவாக ஒரு கணையாழியையும் அவளுக்குக் கொடுக்கிறான்.அவனது நினைவில் இருக்கும் சகுந்தலை தன்னை மறந்து நிற்கிறாள்.அந்தத் தருணத்தில் அந்த கண்வமகரிஷி ஆசிரமத்திற்கு துர்வாசர் வருகிறார்.அவர் அழைப்பு அவளது காதில் விழவில்லை. இதனால் தான் அவமானப்பட்டதாக எண்ணி துர்வாசர் ஒரு சாபம் விடுகிறார். காதலன் இவளை மறந்து விடுமாறு அந்த சாபம் விடப்படுகிறது.நீண்ட கால காத்திருப்பதற்குப் பிறகு மணம் செய்யும் நோக்கத்தோடு கண்வ மகரிஷியின் ஏற்பாட்டில் சகுந்தலை துஷ்யந்தனின் அரண்மனைக்குச் செல்கிறாள். ஆனால் அவனுக்கு இவளைத் தெரியவில்லை.தான் அரசனின் காதலி என்பதைக் கூறுகிறாள் .யாரும் நம்ப மறுக்கிறார்கள்.அடையாள மோதிரத்தைக் காட்ட நினைக்கிறாள். ஆனால் அந்த மோதிரம் காணாமல் போகிறது.அரண்மனையில் இருந்து அவமானப்படுத்தப்பட்டு வெளியேறுகிறாள் .ஊரார் தூற்றுகிறார்கள் ;கல்லால் அடிக்கிறார்கள்.இந்நிலையில் அவள் சாப விமோசனம் பெற்று எப்படி மீண்டும் காதலனை அடைந்தாள் என்பது தான் கதை.

உலகத்துக்கே தெரிந்த ஒரு காதல் கதையை ரசமான நயமான திரை கதையாக மாற்றி கண்களைக் கவரும் காட்சிகளாக உருவாக்கி வடிவமாக்கி நவீன தொழில்நுட்பங்கள் கலந்து பிரமாண்டமான காட்சிகள் மூலம் அற்புதமான திரை அனுபவத்தைத் தந்துள்ளனர்.
இதில் சகுந்தலையாக சமந்தாவும் ,துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடிக்கவில்லை, வாழ்ந்துள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்.
பாத்திரங்களுக்கான தோற்ற சித்தரிப்புகளும் நடை உடைகளும் உணர்ச்சி தருணங்களுக்கு ஏற்ற முகபாவனைகளும் காட்சிகளை அடையாளப்படுத்தும் பின்புலப் பிரம்மாண்டங்களும் இப்படத்தை ஒரு திரையரங்க அனுபவமாக தூக்கி நிறுத்தி ரசிகர்களைக் கவர்கின்றன.
அந்த வனாந்தர பின்புலக் காட்சிகளும் அங்கே தென்படும் விலங்குகளும் பிரம்மாண்டமான அரண்மனை அரங்கமைப்புகளும் போர்க்களக் காட்சிகளும் அரச உடை துல்லியங்களும் கண்டு ரசிக்க ஏற்றவை.இதைப் பெரிய திரையில் கண்டு ரசிப்பதுதான் இந்த திரை முயற்சிக்குக் கொடுக்கும் மரியாதை .சிறிய திரையில், ஓடிடியிலோ இதைக் காண்பது அந்தக் காட்சி அனுபவத்தை ரசிக்கத் தடையாக இருக்கும்.
ஊர் அறிந்த ஓர் காதல் கதை உலகறிந்த தொழில்நுட்பங்களைக் கொடுத்து ஒரு மாபெரும் திரைக்காவியமாக மாற்றியுள்ளார்கள். திரையில் ஒரு பிரம்மாண்ட காட்சி அனுபவம் சாகுந்தலம்.