தென்னிந்திய திரையுலகின் இசைமகன்களில், ஒருவராக விளங்குபவர் யுவன் சங்கர் ராஜா. தமிழகத்தில் அவருக்கு, வெறித்தனமான பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் இசையில் உலகளவில் சாதனை படைத்த “ரௌடி பேபி” பாடலுக்கு முன்னதாகவே, உலகமெங்கும் மொழியை கடந்து, அவரை பின்பற்றும் ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா, இந்திய இசை பிரபலங்களான பதா மற்றும் உஜானா அமித் ஆகியோருடன் டாப் டக்கர் ( Top Tucker) எனும் ஒரு சுயாதீன இசை பாடலில் இணைந்துள்ளார்.
இப்படாலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பதா மற்றும் உஜானா அமித் பாடலை பாடியுள்ளனர். மூவரும் இணைந்து திரையில் தோன்றி கலக்கியிருக்கும் இப்பாடலில், இவர்களுடன் தற்போதைய இளைஞர்களின் கண்கவர் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார். இப்பாடலின் ஒரு சிறு பகுதியில் தமிழில் வரும் வரிகளை யுவன் சங்கர் ராஜா தானே பாடியுள்ளார். மேலும் ஜொனிடா காந்தி அவர்களும் ஒரு சிறு பகுதிக்கு குரல் தந்துள்ளார்.
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள இப்பாடல் YouTube தளத்தில் வெளியான மிகக்குறுகிய நேரத்தில் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு நொடியும் ரசிகர்களின் பார்வை எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. மொழி எல்லைகளை கடந்து, தற்போது அனைத்து இசை ரசிகர்களையும் கவர்ந்து, சாதனை படைத்து வருகிறது.
யுவன் சங்கர் ராஜாவின் திரை இசையல்லாத சுயாதீன இசை பயணம் ஜூலை 1999ல் “The Blast” ஆல்பத்தில் துவங்கியது. இந்த ஆல்பம் தமிழின் முன்னணி பிரபலங்கள் உன்னிகிருஷ்ணன், கமலஹாசன் உட்பட பலர் பாடியுள்ள 12 பாடல்கள் தொகுப்பினை கொண்டது.
தனது U1 Records இணையதளம் மூலம் பல சுயாதீன இசை முன்னெடுப்புகளையும், பல இசைத்திறமைகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து தனது இசையில் திரை இசை தவிர்த்த சுயாதீன இசை ஆல்பங்களை வளரும் கலைஞர்களுடன் இணைந்து உருவாக்குவதில் வெகு ஆர்வமுடன் இயங்கி வருகிறார்.