எல்லாருக்கும் மனதில் ஒரு கனவு இருக்கும் .நம் ஊர் இப்படி இருக்க வேண்டும் நாம் இப்படி இருக்க வேண்டும் என்று .அப்படி ஒரு கனவுக் கிராமம் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கருவறை கிராமம் .
அந்தக் கிராமத்தில் இருக்கும் மக்கள் நேர்மையாக ராணுவக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகிறார்கள்.வெளியூர் வாசிகளுக்கு அனுமதி இல்லை.உள்ளூர் ஆட்களும் அனுமதி இல்லாமல் ஊரை விட்டு வெளியே செல்லவும் முடியாது. இப்படி உள்ள அந்த ஊருக்கு இந்திய அரசு வழங்கும் சிறந்த கிராமம் விருது தேடி வருகிறது.
அதை ஏற்க மறுப்பதாலேயே அந்தக் கிராமத்துக்குப் பிரச்சினை வருகிறது. அரசியல் நுழைகிறது. அமைச்சர் எதிரியாகிறார்.அந்தப் பட்டத்தை ஊர் மக்கள் வாங்க மறுப்பது ஏன்?ஊர் மக்கள் கட்டுப்பாடுடன் வாழ முடிவதன் பின்னணி என்ன? இதற்குள் நுழைந்த அரசியலின் விளைவு என்ன? என்பதே ‘சான்றிதழ்’ படத்தின் மீதிக்கதை.இயக்குநர் ஜெயச்சந்திரன் (JVR) எழுதி இயக்கியுள்ளார்.
முழு வணிகப்பட முயற்சியில் இதுவரை ஈடுபட்டு வந்த, ஹரிகுமார் இப்படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் வருகிறார்.வெள்ளை வேட்டி சட்டையில் பாந்தமாக வலம் வருகிறார்.ஒரு கிராமத்தையே முற்றிலும் மாற்றக்கூடியவர்தான் என்று அந்தப் பாத்திரத்தை நம்ப வைக்கிறார்.அவருக்கு காதல் காட்சிகள் இல்லை.
அதற்காக, ரோஷன்பஷீர் ஆசிகா அசோகன் ஆகியோரை இளம்ஜோடியாக நடிக்க வைத்துள்ளார் இயக்குநர். அமைச்சராக நடித்திருக்கிறார் ராதாரவி.அசத்தியுள்ளார்.
அருள்தாஸ், கெளசல்யா, ரவிமரியா, மனோபாலா, ஆதித்யா கதிர் ஆகியோரும் தங்களுக்குக் கொடுத்த வேலைகளைச் சரியாகச் செய்துள்ளனர்.
மிகவும் மோசமான நிலையில் இருந்த ஒரு கிராமம் எப்படி திருத்தப்பட்டு நல்ல நிலைக்கு வருகிறது என்பதுதான் கதை.இதை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஜெயச்சந்திரன். தனிமனித மாற்றமே ஊரின் மாற்றம். ஊர்களின் மாற்றமே நாட்டின் மாற்றம் என்பதைச் சொல்லி இருக்கிறார்.இயக்குநரின் கற்பனையும் நோக்கமும் பிழை இல்லை , பழுதில்லை.ஆனால் சொல்லிய விதத்தில் தான் பலவீனப்பட்டு இருக்கிறார். நல்ல கதையாக இருந்தாலும் திரைக்கதை படத்திற்கு பலவீனமாக உணர வைக்கிறது.
ரவிமாறன் சிவன் ஒளிப்பதிவு படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. பைஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்கள் மிதமான ரகம். பின்னணி பரவாயில்லை.
இப்படத்தில் வணிக அம்சங்கள் கலவாமல் கொடுத்திருந்தால் படம் மேலும் சிறப்பாக வந்திருக்கும்.
மொத்தத்தில் ‘சான்றிதழ்’ படத்தை நல்ல முயற்சி என்ற நோக்கத்திற்காகப் பாராட்டலாம்.அந்த நோக்கத்திற்காகவே இயக்குநருக்கு நற்சான்றிதழ் தரலாம்.