இன்றைக்கு தமிழ் சினிமாவில் வாரத்துக்கு நான்கு புதிய இசையமைப்பாளர்கள் அறிமுகமாகிறார்கள். ஆனால் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. கோடம்பாக்கம், சாலிகிராமம், வளசரவாக்கம் பகுதிகளில் புதுப் புது இசைக் கூடங்கள்.. புதுப்புது இசையமைப்பாளர்கள்.
இவர்களில் இப்போது பளிச்சென்று வெளிவந்திருப்பவர் சாம் டி ராஜ். வந்தா மல படத்தின் இசையமைப்பாளர். அந்தப் படத்துக்காக இவர் போட்ட ஐந்து பாடல்களும் வெரைட்டியானவை. குறிப்பாக ‘உன்னான்ட காதல நா சொன்னபோது…’ என்ற வட சென்னைப் பாட்டு இன்ஸ்டன்ட் ஹிட்.
அதே போல தேவா பாடியிருக்கும் ‘அனா ஆவன்னா அம்பேத்காரப் பாருண்ணா..’ பாட்டும் செம ஹிட். பராசக்தி படத்தில் கலைஞர் எழுதிய தேசம் ஞானம் கல்வி.. பாட்டை ரொம்ப அழகாக இந்தப் படத்தில் கையாண்டிருப்பார் சாம் டி ராஜ்.
இந்தப் பாடல்களைக் கேட்ட பிறகு, அவரைப் பார்த்துவிடலாம் என பிரசாத் லேப் எதிரிலிருக்கும் அவரது விகோஷ் இசைக் கூடத்துக்குச் சென்றோம்.
மிக நவீன இசைப் பதிவுக் கூடம். ஆஜானுபாகுவாக நிற்கிறார் சாம் டி ராஜ்.
பார்த்தால் இசையமைப்பாளர் மாதிரியே தெரியவில்லை.. பெரிய ஐடி கம்பெனி அதிபர் மாதிரி இருக்கிறார்!
எப்படி இசைத் துறைக்கு வந்தீர்கள்?
நான் திருச்சியில் பிறந்து வளர்ந்தவன். சென்னையில் தாஜ் ஹோட்டலில் ‘ஜாஸ் பேன்ட் (Jazz Band)’ வைத்து வாசித்துக் கொண்டிருந்தேன். பின்னர் துபாய் போய்விட்டேன். அங்கு எலெக்ட்ரானிக் இசைக் கருவிகளுக்கான அரேஞ்சராக சில ஆண்டுகள் பணியாற்றினேன். பின்னர் சென்னை திரும்பிய பிறகு, விதார்த் நடிக்கும் காட்டுமல்லி படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்தது. “காட்டுமல்லி” இன்னும் ரிலீஸ் ஆகவில்லை..பின்னர் “தனுஷ் 5-ம் வகுப்பு” என்ற படத்திற்கு இசையமைத்தேன்.. அந்தப் படம் நன்றாகப் போயிருந்தால், முன்பே பெரிய பிரேக் கிடைத்திருக்கும். கொஞ்சம் லேட்டாக “வந்தா மல”யில் கிடைத்திருக்கிறது.
வந்தா மல பாடல்கள் குறித்து..?
இந்தப் படத்தின் இயக்குநர் ரொம்ப வித்தியாசமாக பாடல்கள் கேட்டார். அதைப் படமாக்கும் விதம் குறித்து அவர் சொன்னபோது, எனக்கும் ரொம்ப ஆர்வமாகிவிட்டது. 5 பாடல்களுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ரகத்திலிருக்கும். இவற்றில் “உன்னான்ட காதல நா சொன்னபோது…..” பாடல் வெளியானதுமே பெரிய வரவேற்பைப் பெற்றுவிட்டது. அனா ஆவண்ணாவுக்கு தேவா சாரைப் பாட வச்சேன். கானா பாட்டுக்கு அவர்தான் அத்தாரிட்டி. சைபராகலாம், வாயில வட சுடு..-ன்னு இன்னும் ரெண்டு பாடல்கள். “தேசம் ஞானம் கல்வி” பாடலை பராசக்தி படத்துலருந்து எடுத்து ரீமிக்ஸ் மாதிரி கொடுத்திருக்கிறோம். முகேஷ் இந்தப் பாடலைப் பாடியிருக்கார்.
இசையில் உங்க இன்ஸ்பிரேஷன் யாரு…?
நான் இளையராஜா சார், ஏ ஆர் ரஹ்மான் பாடல்களை ரசித்துக் கேட்பவன். ஆனா எனக்கு இன்ஸ்பிரேஷன்னா அது ஹன்ஸ் ஜிம்மர்தான். அவருடைய இசைக் கோர்வைகள் பிரமிக்க வைப்பவை. இசையில் சில சந்தேகங்களை இமெயில் மூலம் அவரிடம் கேட்டிருக்கிறேன்.
மெலடி, குத்து… எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?
கதைக்கு எது அவசியமோ, இயக்குநருக்கு எது தேவையோ அப்படித் தருவதுதான் முக்கியம்.
இன்றைக்கு நிறைய இசையமைப்பாளர்கள் வருகிறார்கள். ஆனால் அடையாளமில்லாமல் உள்ளனர். இந்த சூழலில் நீங்கள் வந்திருக்கிறீர்கள்…
உண்மைதான். இந்த சூழலைப் புரிந்து, ரசிகர்கள் ரசிக்கும்படியான பாடல்களைத் தருவேன். வந்தா மல பட பாடல்கள் ரசிகர்களைத் திருப்தி செய்திருக்கும் என நம்புகிறேன். வரும் படங்களில் தொடர்ந்து வித்தியாசமான பாடல்களைத் தருவேன்.