‘சாலா திரைப்பட விமர்சனம்

தீரன், ரேஷ்மா வெங்கடேஷ், சார்லஸ் , ஸ்ரீநாத், அருள்தாஸ், சம்பத் ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியுள்ளார் எஸ். டி. மணிபால். பீப்பிள் மீடியா பேக்டரி சார்பில் டிஜி விஸ்வ பிரசாத், தீரன் தயாரித்துள்ளார்கள்..

வாரந்தோறும் ஏராளமான படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் உட்கார்ந்தால் ‘சாலா’ என்கிற படம் நம்மை நிமிர உக்கார வைத்தது மட்டுமல்லாமல் நெஞ்சில் அறைந்தது போல் சமகாலப் பிரச்சினை சார்ந்து ஒரு கருத்தைக் கூறுகிறது. வணிக நோக்கைப் புறந்தள்ளிவிட்டு மக்கள் மீது கரிசனத்துடன் அந்தக்கருத்தைக் கூறுகிறது.

நாட்டில் மதுப் பிரியர்களும் புகைப்பிரியர்களும் அதிகரித்துவிட்டனர். எந்த திரைப்படத்தைப் பார்த்தாலும் அது அருந்தும் காட்சிகளும் புகைபிடிக்கும் காட்சிகளும் அரசின் சட்டபூர்வ எச்சரிக்கை வாசகங்களுடன் இடம்பெறும். இந்தக் காட்சிகள் இடம் பெறாத படங்களே இல்லை என்கிற அளவுக்கு திரைப்படங்களில் மது ,புகை காட்சிகள்.
இந்தச் சூழ்நிலையில் மதுவுக்கு எதிராக ஒரு முழு நீள வணிக ரீதியான சுவாரசியமான திரைப்படம் உருவாகி வெளிவந்திருக்கிறது என்றால் அதுதான் சாலா.

நாட்டில் நடக்கும் அனைத்து குற்ற செயல்களுக்கும் பின்னணியில் மது, அல்லது போதை பிரயோகம் இருக்கிறது என்பதை சுவாரஸ்ய திரைக்கதையோடு ஒரு முழுநீளத் திரைப்படமாக எடுத்து மக்கள் முன் வெளியிட்டுள்ளது மூவிஸ் பிலிம் திரைப்பட நிறுவனம் இப்படத்தை மணிபால் இயக்கியுள்ளார்.

ராயபுரம் பகுதியில் இந்தக் கதை நடக்கிறது .மதுபானக் கடையின் பார் எடுப்பதில் உள்ள போட்டி ,அது சார்ந்த பகை, தொடரும் பழிவாங்கல்,மோதல்கள் என்று கதை செல்கிறது. இதனிடையே மது சார்ந்த பிரச்சினைகள் அதன் தாக்கங்கள் அதன் விளைவுகள் பற்றி காட்சிகளாக நகர்கின்றன.

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் தீரன் சாலா பாத்திரத்தில் தீரன்  நடித்துள்ளார். ஒரு தயாரிப்பாளர் படத்தில் நடிக்கும் போது ,அவரை நடிக்க வைக்கும் போது இயக்குநர்கள் சமரசம் செய்து கொள்வது உண்டு. எனவே அவர்களது பாத்திரம் பொருத்தம் இல்லாத திணிப்பாகவே இருக்கும்.ஆனால் இந்த தயாரிப்பாளரின் தோற்றத்திற்கும் உடல் மொழிக்கும் ஏற்றபடியான பாத்திரத்தை கொடுத்து அந்த சாலா பாத்திரத்தை அழுத்தமாக பதிய வைத்துள்ளார் இயக்குநர்.

மது ஒழிப்புப் போராளி புனிதாவாக  ரேஷ்மா வெங்கடேஷ் வருகிறார்.சமரசமற்ற அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற தோற்றமும் நடிப்பும் கச்சிதம்.

வில்லன் தங்கதுரையாக சார்லஸ் வினோத் மிரட்டுகிறார். தாஸ்பாத்திரத்தில் ஸ்ரீநாத் நடித்துள்ளார்.குணாவாக அருள் தாஸ், இன்ஸ்பெக்டர் நாகுவாக சம்பத் ராம் நடித்துள்ளனர்.

இசை அமைப்பாளர் தீசனும் ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவும் குறை ஒன்றும் இல்லாத பணியாற்றி உள்ளனர்.

கருத்து சொல்லும் படமாக இல்லாமல் கதையும் திரைக்கதையும் சம்பவங்களும் ரசிக்கும் படி உள்ளன. பள்ளி மாணவர்கள் குடிப்பது சார்ந்து வரும் காட்சிகள் பதற வைக்கும் ரகம்.மதுவிற்கு எதிரான காத்திரமான வசனங்களும் அழுத்தமான காட்சிகளும் உண்டு .உச்சகட்ட காட்சி கலங்க வைக்கும் வகையில் உள்ளது.
மொத்தத்தில் இந்த ‘சாலா’ படம் இயக்கிய இயக்குநரை மட்டுமல்ல இந்தப் படத்தைத் துணிந்து தயாரித்த தயாரிப்பாளரையும் முதுகு வலிக்கும் வரை தட்டிக் கொடுக்கலாம்.