உதயா தீப், ஆதேஷ் பாலா, ராட்சசன் யாசர் ,மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ்,பிரேம் கே சேஷாத்திரி என இந்தப் படத்தில் நடித்துள்ளவர்கள் ஆங்காங்கே முகம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த உதய் தீப், பேட்டை படத்தில் நடித்த ஆதேஷ்பாலா, ராட்சசன் யாசர் போன்றவர்கள் அதற்கான சில உதாரணங்கள்.
எழுதி இயக்கி இருக்கிறார் ஆண்டனிஅஜித். இசை : சரண் ராகவன் -விஜே ரகுராம் , ஒளிப்பதிவு: பூபதி வெங்கடாசலம்,தயாரிப்பு ஆண்டனி அஜித் புரொடக்ஷன்ஸ்.
‘சாவு வீடு’ என்ற தலைப்பில் உருவான இந்தப் படம் தலைப்பு ஒரு மாதிரியாக எதிர்மறைத் தன்மை கொண்டதாக இருப்பதாகப் பலரும் கூறவே திடீரென்று ‘சாவீ’ என்று மாற்றப்பட்டு வெளியாகி உள்ளது.
‘சாவு வீட்டில் பிணம் காணாமல் போனால் எப்படி இருக்கும்?’ என்கிற கற்பனையில் இது உருவாகி இருக்கிறது.எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்.ஆனால் சாவு ,பிணம், பேய் என்று பயமுறுத்தாமல் நகைச்சுவையாக எடுத்துள்ளார்கள்.
சரி படத்தின் கதை என்ன என்றால் கதாநாயகன் உதயா தீப், தனது மாமன் மகள் கவிதா சுரேஷைக் காதலிக்கிறார். பரஸ்பரம் விரும்புகிறார்கள்.மாமன் மகள் தானே என்ன பிரச்சினை பெரிதாக வரப்போகிறது என்று நினைக்கலாம். ஆனால் , கவிதாவின் தந்தை பிரேம் கே சேஷாத்திரி இந்தக் காதலை ஏற்க மறுத்து முட்டுக்கட்டையாக இருக்கிறார்.இறந்து போன தனது அப்பாவை சேஷாத்ரிதான் கொன்றார் என்று உதயாவுக்குள் ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டே இருக்கிறது . இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள் சேஷாத்திரி ஒரு விபத்தின் மூலம் இறந்து விடுகிறார்.இறுதிச் சடங்கு களுக்காக வீட்டிற்கு உடலைக் கொண்டு வருகின்றனர். இரவு நகர ஆரம்பிக்கிறது. உதயா அருகில் இருந்து உடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பார்த்துக் கொண்டிருக்கும்போது அனைவரும் மிதமிஞ்சிய சோர்வில் தூங்கி விடுகின்றனர். உதயாவும் அசந்து தூங்கி எழுந்து பார்த்தால் உடலைக் காணோம் .இறந்தவர் உடல் இல்லை என்றதும் அங்கே பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.உதயாவை அனைவரும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள். இந்தப் பிரச்சினையை விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஆதேஷ் பாலா வருகிறார். இறந்த உடலை இன்ஸ்பெக்டர் கண்டுபிடித்தாரா இல்லையா? அந்த உடலை எடுத்தது யார்? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா?என்பது தான் 105 நிமிடங்கள் கொண்ட
‘சாவீ ‘ படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக ஜூடு மாரிமுத்து பாத்திரத்தில் வரும் உதயா தனக்கான கதாபாத்திரத்தை விளையாட்டாகப் புரிந்து கொண்டு நடித்துள்ளார். எனவே எப்போதும் அலட்சியமாகவே வருகிறார்.சக்கரவர்த்தி பாத்திரத்தில் இன்ஸ்பெக்டராக வரும் ஆதேஷ் பாலா மிகை நடிப்பில்லாமல் தோன்றுகிறார்.ஸ்டெல்லாவாக வரும் கவிதா சுரேஷ் எளிமையான தோற்றத்தில் வந்து கொடுத்த வேலையைச் செய்து முடித்துள்ளார்.
படத்தில் தோன்றும் பிற கதாபாத்திரங்களும் தங்கள் இருப்பைப் பதிவு செய்து விட்டு சென்றுள்ளன.
படத்தில் சுமார் ஐந்து மரணங்கள் நிகழ்கின்றன.ஆனாலும் இந்த சோகம் இல்லாமல் நகைச்சுவையாகவே
தோன்றச் செய்கிறது. சாவு வீட்டில் பிணத்தைக் காணவில்லை என்கிற மைய முடிச்சை எடுத்துக்கொண்டு அதை இழை பிரித்து நகைச்சுவை முலாம் பூசி திரைக்கதை ஆக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஆங்காங்கே கலந்து கட்டி வரும் நகைச்சுவைக் காட்சிகள் படத்தின் ஓட்டத்திற்கு ஆசுவாசமாக அமைந்துள்ளன.
இந்தக் கருவை வைத்துக்கொண்டு சீரியஸாகவும் காமெடியாகவும் செய்திருக்கலாம்.
இதில் கதை இரண்டும் இல்லாத நிலையில் உள்ளது. பிணத்தை யார் எடுத்துச் சென்று இருப்பார்?அதற்கான சந்தேகங்கள் காட்சிகள், உச்சகட்ட காட்சி இரண்டுமே பெரிய திருப்பங்கள் தான்.சந்தேகம் என்கிற போது ஒவ்வொருவர் மீதும் எழுப்பி, ஏன் அதை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் மீதும் சந்தேகம் வர வைத்திருப்பதும் இதற்கெல்லாம் காரணம் என்ன என்கிற விளக்கமும் சபாஷ் போட வைக்கிறது. 
பிரேம் கே சேஷாத்ரியின் அண்ணன் இறப்பது நகைச்சுவைக் காட்சியாக இருக்கிறது. ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் இயக்குநரோடு பயணித்துள்ளார்கள்.
நகைச்சுவை என்கிற பெயரில் விளையாட்டாக எடுத்தது போல் தோன்றுகிறது.ஆனாலும் சிரிக்க வைக்கிறார்கள்.மொத்தத்தில் ‘சாவீ’ ரசிகர்களின் நகைச்சுவை உணர்வுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சாவி எனலாம்.


