ஜெ.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெ.எஸ்.பி சதீஷ் தயாரித்து, கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘சிங்கப்பெண்ணே’. ட்ரயத்லான் (Triathlon) என்று சொல்லப்படும் நீச்சல், சைக்கிள் மற்றும் ஓட்டம் ஆகிய மூன்று விளையாட்டுகளையும் ஒரே நேரத்தில் விளையாடும் போட்டியை மையமாக கொண்டு உருவாகியுள்ள முதல் திரைப்படமான இதில், நிஜமான தேசிய ட்ரயத்லான் வீராங்கனை ஆர்த்தி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவரது பயிற்சியாளர் வேடத்தில் ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கிறார்.
மறைந்த பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரின் பேரன் தீபக் நம்பியார் இத்திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் பசங்க சிவகுமார், ஏ.வெங்கடேஷ், சென்ராயன், பிரேம், பாய்ஸ் ராஜன், ஜானகி, இந்துமதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரகனி கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். குமரன் சிவமணி இசையமைக்க, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஷில்பா மஞ்சுநாத், “உங்கள் முன்னால் மற்றும் ஒரு தமிழ்ப்படத்திற்காக மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் கதை சொன்னபோது யார் சிங்கப்பெண் ? எனக் கேட்டேன். கதை கேளுங்கள் உங்களுக்கு தெரியும் என்றார். கதை கேட்டு முடித்தவுடன் கதை தான் சிங்கப்பெண் என்பது புரிந்தது. எல்லோர் வீட்டிலும் ஒரு சிங்கப்பெண் இருப்பார்கள் இது அந்த மாதிரியான ஒரு சிங்கப்பெண்ணை பற்றிய படம். முழுக்கதையும் சொல்லி ஆறு மாதம் வேண்டும் என்றார் இயக்குநர். படத்தின் கருத்து பிடித்திருந்ததால் உடனேட் ஒப்புக் கொண்டேன். படத்தின் படப்பிடிப்பில் செட் செய்து, ஷூட் செய்வார்கள் என நினைத்தேன், ஆனால் உண்மையான போட்டிகளை நடத்தி அப்படியே எடுத்தார்கள். ஆர்த்தி எந்த ஒரு சிறு ஓய்வும் இல்லாமல், மிக உற்சாகமாக பணியாற்றினார். அவரைப் பார்த்து பிரமித்து விட்டேன். இந்தப்படத்தில் நிறையக் கற்றுக்கொண்டேன். பெண்களின் விளையாட்டைப் பற்றி நாம் நிறைய பேசுவதில்லை, அதற்கான இடம் இங்கு வேண்டும். எல்லோரும் ஆதரவைத் தர வேண்டும். அதைப்பற்றி இந்தப்படம் பேசும். ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜெ.எஸ்.பி.சதீஷ் பேசுகையில், “மூன்று வருட போராட்டங்களுக்குப் பிறகு, இப்படத்தை எடுத்துள்ளோம். விளையாட்டை மையப்படுத்திய ஒரு அழகான படைப்பு. இப்படம் எடுக்க நிறைய சிரமங்கள் இருந்தது. படத்தில் உண்மையான நேஷனல் அளவிலான போட்டிகள் எல்லாம் வருகிறது. அதை எடுக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு உண்மையான விளையாட்டு நடக்கும் வரை காத்திருந்து படம்பிடித்தோம். உண்மையான விளையாட்டு வீராங்கனை நடித்துள்ளார் அவருக்காக 5 மாதம் காத்திருந்தேன். இப்படத்திற்காக அவரின் பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு தந்தார்கள். படம் முழுக்க லைவ்வாக இருக்கும். ஆர்த்தி உண்மையாகவே அந்த நேஷனல் மேட்ச்சில் கோல்ட் மெடல் வென்றார். அது படத்திலும் வருகிறது, நீங்கள் பார்க்கும் போது, அதை நம்பவே மாட்டீர்கள். அத்தனை உண்மையாக இருக்கும். படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். படத்தைப் பற்றிய நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.” என்றார்.
விளையாட்டு வீராங்கனை நட்சத்திரம் ஆர்த்தி பேசுகையில், “இந்த இடத்தில் பலருக்கு நன்றி சொல்ல வேண்டும். பொதுவாக எல்லா அப்பா அம்மாவும் படிக்க சொல்வார்கள், இல்லை கல்யாணம் செய்து வைப்பார்கள், ஆனால் என் பெற்றோர் என்னை விளையாட போகச் சொன்னார்கள். அவர்கள் தந்த ஆதரவால் தான் நான் இன்று வீராங்கனை ஆக இருக்கிறேன் நன்றி. இந்தப்படத்திற்கு சதீஷ் சார் என்னை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. நான் முதலில் சின்ன ரோலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவர் படம் முழுக்க வரக்கூடிய ஒரு ரோல் பற்றி சொன்னார். எனக்கும் என் பெற்றோருக்கும் அது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. என்னை வைத்து ஒவ்வொரு காட்சியை எடுக்கவும் மிகவும் கஷ்டப்பட்டார்கள். மிக அழகான ஒரு படத்தை எடுத்துள்ளார் இயக்குநர். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை தந்ததற்கு இயக்குநருக்கு நன்றி. படத்தில் எனக்கு அனைவரும் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார்கள். ஷில்பா மேடம் எனக்கு ஒவ்வொன்றையும் சொல்லித் தந்தார். இப்படம் வீராங்கனைகள் பற்றிய உண்மையைப் பேசும் படம். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இயக்குநர் பாக்கியராஜ் பேசுகையில், “இந்த மாதிரி உண்மையான சிங்கப்பெண்களை வைத்து, பெற்றவர்களுக்கும் பெண்களுக்கும் ஊக்கம் தர வேண்டும் என்கிற நோக்கத்தில், ஒரு படத்தை தயாரித்திருக்கும், இயக்கியிருக்கும் இயக்குநர் சதீஷ் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஆர்த்தி மற்றும் அவரது பெற்றோருக்கு என் வாழ்த்துக்கள். இப்படத்தில் உழைத்திருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்துள்ளார்கள் என்பது தெரிகிறது. உண்மையான விளையாட்டை எடுத்து வந்து காட்டியிருக்கிறார்கள். படத்தொகுப்பாளர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று தெரிகிறது. பத்திரிக்கையாளர்கள் இப்படி ஒரு நல்ல படத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். சதீஷ் பார்க்க பயங்கர ஃபிட்டாக இருந்தார், படத்திலும் நடித்திருக்கிறார். அவரிடம் நல்ல ஹீரோவாக வரும் திறமை இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். ஷில்பா பேசியது எனக்குப் பிடித்தது. படத்தின் கஷ்டங்களை உண்மையான ஸ்போர்ட்ஸின் கஷ்டங்களை சொன்னார், அவருக்கு என் வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் குமரன் சிவமணி அவருக்கு அப்பாவிடம் இருந்து இசை வந்திருக்கும், அவரின் அப்பா பெயரை காப்பாற்றியிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி.” என்றார்.
நடிகர் பிரேம் பேசுகையில், “சிங்கப்பெண்னே டைட்டிலே நிறைய சொல்லும். உண்மையான விளையாட்டு வீராங்கனையை வைத்து, ஒரு அருமையான கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர். விளையாட்டுத்துறை இன்றைய நிலையில் எப்படி இருக்கிறது, அதிலிருக்கும் அரசியல் அதைத்தாண்டி எப்படி இந்த சின்னப்பெண் ஜெயிக்கிறார், என்றெல்லாம் இப்படத்தில் பேசியுள்ளார். நாயகி ஷில்பாவும் நல்ல நடிப்பை தந்துள்ளார்.