
மிலிந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா ஜெர்மியா, அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மிலிந்த் உடன் இணைந்து எழுதியிருக்கிறார் நாயகன் சித்தார்த். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய நாயகன் சித்தார்த், “நானும், இயக்குநர் மிலிந்தும் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநர்களாக ஒன்றாக வேலை பார்த்தோம். எங்கள் நட்பு 17 வருடங்களை தாண்டியது. ஒரு உண்மைக்கதையை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை எழுதியிருக்கிறோம். நல்ல ஒரு ஹாரர் படத்தை எடுத்து மக்களை பயமுறுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கனவு. அதை இந்த படத்தின் மூலம் செய்திருக்கிறோம். இந்த படத்துக்கு பின் இயக்குநர் மிலிந்த் பேசப்படுவார். படத்தின் நாயகி ஆண்ட்ரியா நன்றாக தமிழ் பேசக்கூடிய நடிகை. அவர் படத்தின் மிகப்பெரிய தூண். ரங்தே பசந்தி படத்துக்கு பிறகு 12 வருடங்கள் கழித்து இந்த படத்தில் அதுல் குல்கர்னியும், நானும் இணைந்து நடித்திருக்கிறோம். ஜில் ஜங் ஜக் படத்தில் வேலை செய்த டீம் இதிலும் பணியாற்றி இருக்கிறது. இப்படி ஒரு பெரிய பட்ஜெட் ஹாரர் படத்தை நாங்கள் எடுத்திருப்பது எங்களுக்கு பெருமையான விஷயம். வரும் நவம்பர் 3ஆம் தேதி உங்களை மிரட்ட வருகிறாள் அவள்” என்றார்.

”எனக்கு மட்டும் எப்படி நல்ல, வித்தியாசமான படங்கள் அமைகிறது என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. என் கேரியரில் தரமணியை தொடர்ந்து அவள் படமும் ஒரு சிறந்த படமாக இருக்கும். இந்த படம் ரொம்பவே பயமுறுத்தும். அதனால் நிச்சயமாக இந்த படத்தை நான் பார்க்க மாட்டேன்” என்றார் நாயகி ஆண்ட்ரியா ஜெர்மியா.

”2012ல் மெரினா, 2014ல் விடியும் முன் படங்களுக்கு இசையமைத்தேன். எனக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்வேன் என்பதால் தான் மிக குறைந்த படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இசையமைத்து வருகிறேன். சித்தார்த், மிலிந்த் இருவரும் என்னை ஹாரர் படத்தில் வேலை செய்ய விருப்பமா? எனக் கேட்டு இந்த படத்துக்குள் என்னை கொண்டு வந்தார்கள். கடந்த ஒரு வருடம் இந்த படத்தில் வேலை செய்தது மிகப்பெரிய அனுபவம்” என்றார் இசையமைப்பாளர் கிரீஷ் கோபாலகிருஷ்ணன்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குநர் சிவஷங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.