சிம்பு படத்தின் பாடல் தலைப்பில் உருவாகியுள்ள ஆல்பம்!
கால மாற்றத்தின் தாக்கம் எல்லாத் துறைகளிலும் காணப்படுகிறது. இதற்குச் சினிமா மட்டும் விதிவிலக்கல்ல. முன்பெல்லாம் படம் இயக்க வாய்ப்பு தேடுபவர்கள் பிரபல இயக்குநர்களிடம் பணிபுரிந்து இருந்தால் எளிதில் வாய்ப்பு கிடைக்கும்.
பின்னர் கதை கவிதை எழுதியதை ஒரு தகுதியாகக் கருதினார்கள்.
திரைப்படக் கல்லூரியில் படித்தது தகுதியாகக் கொண்டது ஒரு காலம்.
இப்போது வாய்ப்பு தேடும் இளைஞர்கள் சினிமாவில் தன்னை விளக்கிச் சொல்ல ,பிறர் விளங்கிக் கொள்ள குறும்படம் இயக்குவது, ஆல்பம் உருவாக்குவது என்பவை புதிய போக்காக மாறியுள்ளன.
இவ்வகையில் தனது ‘பயோடேட்டா’ போல பாடல் ஆல்பம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார் ஓர் உதவி இயக்குநர்.
அவர் பெயர் விஜயமாறன். செந்தில்நாதன் என்கிற இயக்குநரிடம் சினிமா அனுபவம் கற்ற அவர் , தன்னை வெளிப்படுத்த ‘ஏனோ வானிலை மாறியதே ‘ என்கிற ஒற்றைப்பாடல் ஆல்பத்தை இயக்கியுள்ளார். கெளதம் மேனன் இயக்கி சிம்பு நடித்து ‘அச்சம் என்பது மடமையடா ‘ படப்பாடலின் பல்லவி தான் ‘ ஏனோ வானிலை மாறியதே’ என்கிற தலைப்பு.
ஸ்கிரிப்ட் பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவு ஸ்ரீராம் ராகவன். இவர் சந்தோஷ் சிவனின் உதவியாளர் .இசை பிரஷாந்த் ஆர். விஹாரி. இவர் ஏ ஆர். ரகுமான் இசைப் பள்ளியின் மாணவர் .
படத் தொகுப்பு ஆனந்த் ஜெரால்டின். இவர் பிரபல படத்தொகுப்பாளர் கே.எல். பிரவீனின் உதவியாளர் .
பல்துறை திறமைசாலி இளைஞர்களைக் கொண்ட குழுவை உருவாக்கி ஒரு திரைப்படத்தின் முன்னோட்டம் போல இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் விஜய மாறன்.
தன் ஆல்பம் பற்றி அவர் பேசும் போது .
“இது ஒரு திரைப்பட வாய்ப்பு தேடுதலுக்கான முன்னெடுப்பு முயற்சி தான். என் படத்தின் கதைக்கான சூழலின் படி இப்பாடல் உருவாகியுள்ளது. தனியே இந்தப் பாடலை பார்த்தாலும் கேட்டாலும் எல்லாருக்கும் பிடிக்கும்.
திரைப்பட உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில் நுட்பங்கள் இந்த ஒரு பாடலில் பயன்படுத்தப்பட் டுள்ளன. திரைப்படத்துக்கான தரத்தில் உருவாகியுள்ளது.
உதய் , காவ்யா, சுப்ரமணி்யம் நடித்துள்ளனர்.
இவர்களில் நடிகை காவ்யா ‘ராமாயணம் ‘ இந்தித் தொலைக்காட்சி தொடரில் மாந்தவியாக நடித்திருப்பவர்.
பாடலை சினிமா பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். நரேஷ் ஐயர் பாடியுள்ளார்.
அம்மா இல்லாத வீடு. கண்டிப்பான அப்பாவின் அரவணைப்பில் வளரும் நாயகி.தன் காதலனை ஒருநண்பனாக தன் தந்தையிடம் அறிமுகம் செய்து வைக்கிறாள். மெல்ல மெல்ல பழகி அவளது கண்டிப்பான அப்பாவின் உள்ளத்திலும் அவர்கள் இல்லத்திலும் இடம் பிடிக்கும் அவன் இம்முயற்சியில் எப்படி வெற்றி பெறுகிறான் என்கிற கதைச் சூழலில் உருவானதே இப்பாடல் “என்கிறார் விஜயமாறன் .
.