சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படத்தைத் தயாரித்து, மைக்கேல் ராயப்பன் தமிழ்த் திரையுலகத்திற்குள் ஒரு தயாரிப்பாளராக நுழைந்தார். அவர் ‘GLOBAL INFOTAINMENT PRIVATE LIMITED’ என்கிற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்
தற்போது ‘கீ’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.
இவர் இந்தாண்டு நடிகர் சிம்புவை வைத்து ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார்.
இந்தப் படம் படு தோல்வியை சந்தித்தோடு இல்லாமல், இந்த ஒரேயொரு திரைப்படத்தினால் மைக்கேல் ராயப்பனுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டமாகிவிட்டதாம்.
பட நஷ்டத்தை விட சிம்பு கொடுத்த தொல்லையைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் மல்க கூறினார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
“ ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ படம் தொடர்பாக தற்போது தமிழ்த் திரையுலகிலும், பத்திரிகையுலகத்திலும் நிலவி வரும் பல தரப்பட்ட செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அதன் உண்மை நிலையை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
சினிமா மீது எனக்கிருந்த ஆசையால்.. லட்சியத்தால்.. வெறியால்தான் கடந்த 9 வருடங்களில் 12 படங்களை தயாரித்தேன். பல படங்கள் சுமாராக ஓடினாலும் வருடத்திற்கு நம்மால் 500 தொழிலாளர்களுக்கு வேலை தர முடிகிறதே என்ற ஆத்ம திருப்தியில்படத் தயாரிப்பை தொடர்ந்து நடத்தி வந்தேன்.
ஆனால் இந்தாண்டு நான் தயாரித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம், அதன் நாயகன் சிம்புவால் என்னை அதல பாதாளத்திற்குக் கொண்டு செல்லும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதியன்று இந்தப் படத்தின் பூஜை எனது அலுவலகத்தில் போடப்பட்டது.
அதே ஆண்டு மே மாத இறுதியில் அந்தப் படத்தின் படப்பிடிப்பை துவக்குவதாக திட்டமிட்டிருந்தோம்.
முதலில் இயக்குநர் ஆதிக்கிடம் முழுக் கதையையும் கேட்ட சிம்பு, கதையில் தனக்கு மூன்று கதாபாத்திரங்கள் என்பதையும் தெரிந்து கொண்ட பின்புதான் என்னிடம் இயக்குநரை அனுப்பி வைத்தார்.
சிம்புவுக்கு இந்தக் கதை திண்டுக்கல்லில் ஆரம்பித்து துபாய், சென்னை என்று போய் கடைசியில் காசியில் முடியும் என்பது நன்றாகவே தெரியும்
அப்போது படத்தின் நாயகியை ஒப்பந்தம் செய்ய நாங்கள் முனைந்தபோது தமிழ்த் திரையுலகில் இருந்த எந்தவொரு கதாநாயகியும் சிம்புவுடன் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. த்ரிஷா வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பித் தந்துவிட்டார். லட்சுமி மேனனை கொச்சிக்கே நேரில் சென்று சந்தித்து கதை சொல்லி கேட்டபோதும் மறுத்துவிட்டார். கடைசியில் ஸ்ரேயா மட்டுமே சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டார்.
நாங்கள் படப்பிடிப்புக்கு வேண்டிய வசதிகளை ஏற்பாடு செய்து கொண்டிருக்கும்போது சிம்பு ஒவ்வொரு லொகேஷனையும் மாற்றிக் கொண்டேயிருந்தார்.
‘மதுரையில் ரொம்ப வெயிலா இருக்கும். மைசூர்ல போய் பாருங்க’ என்றார். அங்கே சென்று பார்த்தோம்.
திரும்பவும் ‘மைசூர் வேண்டாம். கோவா போகலாம்’ என்றார். அங்கேயும் சென்றோம்.
பிறகு ‘கொச்சின்’ என்றார். அங்கேயும் அலைந்து, திரிந்து லொகேஷன் பார்த்துவிட்டு வந்தோம். அவரிடமிருந்து பதில் வரவில்லை. நாட்கள் கடந்தன. கடைசியில் எதுவுமே செட்டாகாமல் ‘திண்டுக்கல்’தான் என்று நாங்களே முடிவு செய்தோம்.
படப்பிடிப்பு திண்டுக்கல்லில் என்றவுடன் சிம்பு அங்கே வர மறுத்தார். ‘திண்டுக்கல்லில் ஸ்டார் ஓட்டல்களே இல்லை’ என்றார். ‘பொதுவிடத்தில் நடிக்க வரமாட்டேன்’ என்றார். ‘கூட்டம் அதிகமாக இருந்தால் படப்பிடிப்பை நிறுத்திவிடுவேன்’ என்றார். ‘ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங்குக்கு வர மாட்டேன்’ என்றார்.
இத்தனைக்கும் பின்பு மூன்று மாதங்கள் கழித்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படப்பிடிப்பு திண்டுக்கல்லில் துவங்கியது.
படப்பிடிப்பு தேதியை சிம்புதான் தெர்வு செய்வார். அவரேதான் கால்ஷீட் நேரத்தையும் முடிவு செய்வார். ஆனால் அவர் மட்டும் சொன்ன கால்ஷீட் நேரத்தில் ஒரு நாளும் வந்ததில்லை. வரவும் மாட்டார். அப்படியும் வந்து நடித்தால் அன்றைய இரவிலேயே காலையில் எடுத்தக் காட்சிகளை ரஷ் போட்டு பார்த்துவிடுவார்.
இடையில் ‘கபாலி’ படம் பார்க்கவும் ஒரு நாள் ஷூட்டிங்கையே நிறுத்திவிட்டார்.
முதல் ஷெட்யூல் முடிந்த பிறகு சிம்பு நடித்த அதே கெட்டப்பில் ஒரு பாடல் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் ‘ஸ்ரேயா சரியில்லை. அதனால் அவரை நீக்கிவிட்டு திரும்பவும் படப்பிடிப்பு நடத்தலாம்’ என்றார்.
அதே கெட்டப்பில் எடுக்கப்பட வேண்டிய இரண்டாவது ஷெட்யூலுக்காக துபாய் செல்லத் திட்டமிட்டோம். கிளம்பும்போது ‘துபாயில் வெயில் அதிகமாக இருக்குமே?’ என்றார். பின்பு ‘லண்டனுக்கு போகலாம்’ என்றார். அதற்கும் நாங்கள் ‘சரி’ என்று சொன்ன பிறகும், வேண்டுமென்றே கால தாமதம் செய்தார்.
இரண்டு மாத போராட்டத்திற்கு பிறகு ‘சரி. வருகிறேன்’ என்றார். பிறகு, ‘நான் இப்போது 90 கிலோ எடையில் இருக்கிறேன். இதைக் குறைத்துவிட்டு படப்பிடிப்பை நடத்தலாம்’ என்றார். ஆனால் அவர் எதையும் செய்யவில்லை. நாங்கள் வேறு வழியின்றி அதே உடம்புடன் அஸ்வின் தாத்தா லுக்கில் மூன்றாவது கதாபாத்திரத்தை சென்னையில் எடுக்கத் திட்டமிட்டோம்.
இந்தக் கேரக்டருக்கு மேக்கப் போட மூன்று மணி நேரமாகும் என்பதைத் தெரிந்து கொண்டு ‘மேக்கப்பெல்லாம் போட மாட்டேன். வேண்டுமானால் முகத்தை மட்டும் சி.ஜி.யில் மாற்றிக் கொள்ளுங்கள்’ என்றார்.
இப்படி பல வழிகளில் படத்தின் நாயகனான சிம்பு கொடுத்த தொல்லைகளைத் தாங்கிக் கொண்டு படப்பிடிப்பினை தொடங்கினோம். இப்போதும் அவர் கொடுத்த தேதிகளில் அவர் வரவில்லை. பல நாட்கள் அவரால் படப்பிடிப்பு நின்றது. எப்படியாவது படத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம்.
மாயாஜாலில் படப்பிடிப்பு நடந்தபோதுகூட ஈ.சி.ஆரில் ரூம் எடுத்துத் தங்கினார். அதன் கணக்கு விவரங்களை எங்களது நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரான இராம.நாராயணன் கேட்டார். இந்த ஒரே காரணத்திற்காக ‘அவரை படத்திலிருந்து நீக்கினால்தான் நான் ஷூட்டிங்கிற்கு வருவேன்’ என்று அடம் பிடித்தார் சிம்பு. அதனால் வேறு வழியில்லாமல் இராம.நாராயணனை நாங்கள் மாற்றினோம்.
இவரால் தமன்னா, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் ஏன் 80 வயது நடிகரான நீலு வரையிலும் பாதிக்கப்பட்டவர்களே அதிகம். கிழக்குக் கடற்கரை சாலை என்றாலோ ஈ.வி.பி. பூங்கா என்றாலோ ‘ரொம்ப தூரமாச்சே..?’ என்பார். ஆனால் ஒரு சமயம் இவரது வீட்டிலேயே நடத்தப்பட்ட ஷூட்டிங்கிற்கே அதிகாலை 3 மணிக்குத்தான் வந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு வழியாக சென்னை ஷெட்யூலை முடித்த பின்னர், மூன்றாவது ஷெட்யூலுக்கு தயார் என்கிற நிலையில் ‘மூன்று மாதம் உடம்பை குறைத்துவிட்டு வருகிறேன்’ என்றார். ‘சரி.. ஒரு பாடலாவது எடுக்கலாம்’ என்று முடிவு செய்து மும்பையில் அதனைப் படமாக்க இடம் பிடித்து அட்வான்ஸ் கொடுத்து செட் வேலைகளை ஆரம்பிக்கும்போது இடையில் நுழைந்து அதையும் தடுத்து நிறுத்தினார்.
மூன்றாவது ஷெட்யூல் படப்பிடிப்புக்கு எப்படியோ சம்மதிக்க வைத்த பின்னர் ‘துபாய் வேண்டாம்’ என்றார். மலேசியாவை சொன்னோம். அதுவும் ‘வேண்டாம்’ என்றவர் கடைசியாக சிங்கப்பூரை கை காட்டினார். இறுதியில் அதுவும் வேண்டாம் என்று சொல்லி தாய்லாந்து இறுதியானது.
சிம்பு செய்த குளறுபடியினால் தாய்லாந்தை சிங்கப்பூராக காட்ட முடிவு செய்து, லொக்கேஷன் பார்த்த பிறகு அவருக்குக் கதாநாயகியாக பூஜா குமார், நீத்து சந்திரா, சானாகான் என்று ஆட்களை மாற்றி, மாற்றிச் சொல்வார்.
படப்பிடிப்புக் குழுவினர் தாய்லாந்து செல்வதற்கு முன்னர் சிம்புவின் உதவியாளர்கள் பத்து நாட்களுக்கு முன்பேயே தாய்லாந்து சென்று ஜாலியாக இருந்தனர். படப்பிடிப்புக் குழுவினர் தாய்லாந்து சென்ற பின்பும் சிம்பு இன்னும் கிளம்பாமல் இருக்கிறாரே என்று பதற்றத்துடன் அவரது வீட்டுக்குச் சென்று கேட்டபோது அவர் என்னிடம், ‘ஸார்.. படம் நன்றாக வந்திருக்கிறது. இதை இரண்டு பாகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். நானே சம்பளம் வாங்காமல் இரண்டாம் பாகத்தில் நடித்துத் தருகிறேன். இதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்தப் படத்தை முடிக்க இன்னும் ஒன்றரை வருடங்களாகும்…’ என்று மிரட்டினார்.
படம் வெளியாக வேண்டுமே என்பதற்காக நானும் வேறு வழியில்லாமல் இதற்கு சம்மதித்தேன். ரம்ஜான் விடுமுறையில் எப்படியாவது படத்தை வெளியிடலாம் என்று போராடி பார்த்தேன். முடியவில்லை. சிம்புவோ படத்தில் இனிமேல் நடிக்கக் கூடாது என்கிற மனநிலையில் இருந்தார். இயக்குநரிடம் பேசி, தாய்லாந்தில் இருந்த படப்பிடிப்புக் குழுவினரை செலவோடு செலவாக ஆகட்டும் என்று சொல்லி சென்னைக்கு திரும்பி அழைத்து வந்தேன்.
நாங்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்ட நாட்கள் 76.
இதில் படப்பிடிப்பு நடந்த நாட்கள் 48.
இதில் சிம்பு நடித்த நாட்கள் 38.
பாடல்கள், சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட நாட்கள் 13.
சிம்பு வசனம் பேசி நடித்த நாட்கள் 25.
தமன்னாவிடம் 30 நாட்கள் கால்ஷீட் வாங்கி அதில் வெறும் 13 நாட்களை மட்டுமே பயன்படுத்த முடிந்தது.
அதேபோல் ஸ்ரேயாவிடம் 15 நாட்கள் கால்ஷீட் பெற்று, வெறும் 7 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடிந்தது.
இத்தனையும் சிம்பு செய்த கால்ஷீட் குளறுபடியினால்தான்..!
எப்படியாவது படத்தை இந்த ஆண்டு 2017 ஜூன் 23-ம் தேதி திரையிட முடிவு செய்து இயக்குநரை ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஒரு பாடலுடன் படத்தை வெளியிட முடியாது என்று நினைத்து, இன்னொரு பாடலை சேர்க்க முடிவு செய்தோம். பாடல் தயாராகவில்லை.
படத்திற்கு 5 பாடல்கள் வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், ஒன்றரை வருடங்களாக யுவன் சங்கர் ராஜா ஒரேயொரு பாடலை மட்டுமே கொடுத்திருந்தார். இதற்கு யார் காரணம் என்பது யுவன் மற்றும் சிம்பு இருவருக்கும் மட்டுமே தெரியும். சிம்புவே பாடல் எழுதுவது, பாடுவது என்று அனைத்தும் ரிக்கார்டிங் முடிந்த பின்புதான் எனக்குத் தெரியும். இயக்குநருக்குக்கூட பாடல் பதிவு நடப்பதை அவர்கள் இருவரும் தெரிவிக்கவில்லை.
கடைசியாக மூன்றாவது கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு விரும்பவில்லை. வரவும் மறுத்துவிட்டார். கடைசியாக இயக்குநர் சிம்புவிடம் நேரில் சென்று கதறி அழுது ‘ஒரு மணி நேரம் மட்டும் தாருங்கள்.. எட்டே, எட்டு ஷாட்டுகள்’ என்று கேட்ட பின்னர் ‘என் வீட்டிலேயே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். அதன்படி எடுத்தோம். இந்த ஷூட்டிங்கிற்கே அவர் அதிகாலை மூன்று மணிக்குத்தான் வந்தார் என்றார் பார்த்துக் கொள்ளுங்கள்.
சரி.. ஷூட்டிங்கிற்குதான் சரியாக வரவில்லை. டப்பிங்கையாவது ஒழுங்காக செய்து கொடுப்பார் என்று நினைத்தோம். ஆனால் அதிலும் மண் விழுந்தது. வீட்டில் இருந்து கொண்டே வெளியில் வர மாட்டேன் என்றார். ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டபடியால் அவர் வீட்டு பாத்ரூமிலேயே டப்பிங் பேசினார். அவர் பேசிய சம்பளத்தை வாங்கவில்லையென்றால் எப்படி டப்பிங் பேசியிருக்க முடியும்..?
அதைக் கொண்டு வந்து 4 பிரேம்ஸ் ராஜா கிருஷ்ணனிடம் காட்டினால்.. அவரோ, ‘இவ்வளவு மோசமான குரல் பதிவை என்னால் மிக்ஸ் செய்ய இயலாது. தயவு செய்து வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றார். இன்னும் ஐந்து நாட்களில் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டாக வேண்டும் என்ற அவசர நிலையில் 75,000 ரூபாய் செலவில் VOICE MODULATION SOFTWARE வாங்கிக் கொடுத்து ஓரளவிற்கு அதனைச் சரி செய்து டப்பிங் வேலைகளை முடித்தோம்.
இப்படி பல வழிகளில் சிம்புவினால் ஏற்பட்ட இடைஞ்சல்கள், தொல்லைகள் ஆகியவற்றால் படம் இப்படி குளறுபடியாகத்தான் வெளிவந்தது. சிம்புவின் போட்டியாளர்கள், எதிரிகள், பத்திரிகை ஊடகங்களில் அவர் அளித்த பேட்டிகள், அவரை பிடிக்காத ரசிகர்கள், அவர்களின் விமர்சனங்கள் என்று பலவித தாக்குதல்களினால் இந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்து எனக்குத் தாங்க முடியாத அளவுக்கு பெரும் இழப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
படத்தின் துவக்கத்தில் சம்பளம் பற்றிப் பேச போனபோது சிம்பு தனது தந்தையைக் கை காட்டி, ‘அவரிடமே எல்லாவற்றையும் பேசிக் கொள்ளுங்கள்’ என்றார். அவர் சொன்னதுபோலவே சம்பளத்தை அவரது அப்பா டி.ஆரிடம் கொடுத்தோம். அப்போது டி.ஆர். ‘பையன் நான் சொன்னால் கேட்பான். உங்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் என்னிடம் சொல்லுங்கள். நான் தீர்த்து வைக்கிறேன்’ என்றார்.
ஆனால் சிம்பு படப்பிடிப்புக்கு நடிக்க வராமல் இருந்தபோது அவரைக் கூப்பிட அவரது வீட்டுக்கே போனேன். அப்போது எனது மகளுக்குத் திருமணமாகியிருந்த சமயம், அவள் தனது கணவருடன் எனது வீட்டிற்கு முதல் முறையாக விருந்து சாப்பிட வந்திருந்தாள்.
அந்த நேரம் பார்த்து நான் சிம்பு வீட்டிற்குப் போய் மாட்டிக் கொண்டேன். மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் அந்த வீட்டில் உட்கார்ந்திருந்தேன். சிம்பு மாடியிலிருந்து வரவேயில்லை.
அவரது அப்பா வந்து ‘சிம்பு இப்போ வர மாட்டான். எப்போ வருவான்னு அவனுக்கே தெரியாது. எனக்கும் தெரியாது. நீங்க போங்க’ என்றார். நானோ ‘அவரை கீழ வரச் சொல்லுங்க. ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு போயிடறேன்’ என்று கெஞ்சினேன். டி.ஆர். அதற்கும் ‘முடியாது’ என்று மறுத்துவிட்டு அவரும் மாடியேறி போய்விட்டார்.
கொஞ்ச நேரத்தில் தி.நகர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து காவலர்கள் வீட்டுக்குள் வந்து என்னிடம் விசாரித்தார்கள். மாடியேறிப் போன டி.ஆர். நான் அவர்களது வீட்டில் அமர்ந்து கலாட்டா செய்வதாக போனில் புகார் சொல்லியிருக்கிறார். எப்படியிருக்கிறது பாருங்கள்..?
மிகுந்த மனக்கஷ்டத்துடன் வெளியே வந்தபோது சிம்புவின் ரசிகர்கள் ஒரு கூட்டமாக வாசலில் நின்று என்னை மிரட்டுவது போல பார்த்தனர். இந்த அவமானத்தையெல்லாம் தாங்கிக் கொண்டுதான் இந்தப் படத்தை முடித்திருக்கிறேன்.
எனக்கு ஏற்பட்ட இந்தக் கதி, வேறு எந்தத் தயாரிப்பாளருக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதனையெல்லாம் இப்போது வெளியில் சொல்கிறேன்..” என்று பேசி முடித்தார் பரிதாப தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.