கே.எல். புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் ‘சியான்கள்’. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார்.
முதியவர்களின் நிலைமையை எடுத்துக்கூறும் இந்தப் பாடல்வரிகள் பிரபலமானவை.
“கடந்த காலமோ திரும்புவதில்லை நிகழ்காலமோவிரும்புவதில்லை எதிர்காலமோ அரும்புவதில்லை “என்கிற அந்த வரிகளில் பொதிந்திருக்கும் சோகத்தை அறுபது எழுபதைக் கடந்த அனைத்து முதியவர்களும் அனுபவித்து வருவதை ஆங்காங்கே காண முடியும். இதற்கு நிகழ்கால சாட்சிகளாக முதியோர் இல்லங்களும் வீட்டில் தனியே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் முதியோர்களும் இருப்பதைக் கூறலாம்.
வயது முதிர்ந்த, கிராமத்து முதியவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, கூறும் படமாக உருவாகியுள்ளது ‘சீயான்கள்’.

கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்., நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
குழந்தை மனதுக்காரர்களை வைத்து பிள்ளைகளுக்கு பாடம் நடத்தும் படம்!
பிள்ளைகளே, உங்கள் பெற்றோரை அவர்களின் வயதான காலத்தில் கைவிட்டு விடாதீர்கள்!
பிள்ளைகளே, உங்கள் பெற்றோரும் மனிதர்கள்தான். அவர்கள் மனதிலும் ஆசை இருக்கும். அதை நிறைவேற்றுங்கள்!
இக்கருத்தை வித்தியாசமான கதைக்களத்தில் விதைத்து கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் வைகறை பாலன்.
மண்மணம் மாறாத மனிதர்களால் சூழப்பட்ட அந்த கிராமத்தில் மனசு, தலை முடி, தாடி, மீசை, சட்டை, வேட்டி எல்லாமும் வெள்ளையாய் ஏழு தாத்தாக்கள்; ஒருவருக்குத் தேவையென்றால் தங்கள் உயிரைக் கூட கொடுக்குமளவு அந்த குழந்தை மனதுக்காரர்களுக்குள் இருக்கிறது ஆழமான நட்பு!
ஊர் மக்கள் அந்த தாத்தாக்களை சியான், சியான் என்றழைக்கிறார்கள். அந்த சியான்களில் இரண்டு பேர் இறக்கின்றனர்.
ஒருவருக்கு விமானத்தில் பறக்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. அதை நிறைவேற்ற மற்ற சியான்கள் தங்களால் ஆனதை செய்ய முன்வருகிறார்கள். அந்த நேரமாகப் பார்த்து, வானில் பறக்க ஆசைப்படுகிற சியான் விபத்தில் சிக்குகிறார். அவரைக் காப்பாற்ற லட்சக்கணக்கில் தேவை.பணத்துக்கு தவியாய்த் தவிக்கிற சூழ்நிலை!பணம் கிடைத்ததா? சியான் உயிர் பிழைத்தாரா? வானில் பறந்தாரா?
இந்த கேள்விகளுக்குப் பதிலாய் விரியும் காட்சிகளில் பயணிக்கிறது கதை.
அதற்கான காட்சிகளில் நாம் பதறுவோம்; நெகிழ்வோம்; கண்ணீர் கசிவோம்.
நடிகர், நடிகைகள் தோற்றமும் நடிப்பும் மண்மணம் மாறாமலிருப்பது படத்தின் பலம். சடையனாக வருகிற நளினிகாந்த் கூடுதலாய் ஈர்க்கிறார்.
சியான்கள் தவிர, படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகைகள் தேர்வும் கச்சிதம்.
படத்தின் ஹீரோக்கள் சியான்கள் தான் என்றாலும், கதையோடு இணைந்து பயணிக்கும் கரிகாலன் – நிஷா ஹரிதாஸ் ஜோடியும், அவர்களின் மெல்லிய காதலும் அழகு!
பாடலாசிரியர் முத்தமிழ் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பாடல்களை கதை மாந்தர்களுக்கேற்ப, கதைச் சூழலுக்கேற்ப எழுதியதற்காகவும் அவற்றை மனதைக் கவரும் விதத்தில் இசையமைத்திருப்பதற்காகவும் ஸ்பெஷல் பாராட்டுப் பூங்கொத்து!
ஒளிப்பதிவின் நேர்த்தியையும் குறிப்பிடாமல் விடமுடியாது.
மண்மணம் கொண்ட மனிதர்களை முடிந்தவரை இயல்பாக பதிவு செய்திருப்பது, வயதானவர்கள் தங்கள் வாழ்நாளைக் கடத்துவதற்குள் எப்படிப்பட ரணங்களைச் சந்திக்கிறார்கள் என்பதை – அவர்களுக்குள் இருக்கும் குழந்தைத் தனத்தை துல்லியமாக காட்சிப்படுத்தியிருப்பது, போகிற போக்கில் சமூக வலைதளங்களின் பலத்தை எடுத்துக் காட்டியிருப்பது சபாஷ்.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை அறிவு வளர்ச்சி போல நினைத்துக்கொள்ளும் இந்த சமூக மாற்றத்திற்கு இடையே கொந்தளிக்கும் மனித விழுமியங்களை மறந்துவிடக்கூடாது .அதை உயிர்ப்பிக்க வேண்டும் என்று உணர்த்துகிறது .காலத்திற்கேற்ற கதை .இப்படத்தைக் கொண்டாடலாம் தவறில்லை.