‘சிறுவன் சாமுவேல்’ விமர்சனம்

அஜிதன் தவசிமுத்து , கே.ஜி. விஷ்ணு ,எஸ்.செல்லப்பன் ,எஸ்.பி.அபர்பணா ஜெபா மற்றும் பலர் நடித்துள்ள படம்.

கண்ட்ரிசைடு பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சாது ஃபெர்லிங்டன் இயக்கி உள்ளார்.ஒளிப்பதிவு V.சிவானந் காந்தி ,இசை S.சாம் எட்வின் மனோகர், J.ஸ்டான்ட்லி ஜான் .

எழுத்தாளர் சுந்தர ராமசாமி ‘ஸ்டாம்பு ஆல்பம் ‘என்று ஒரு சிறுகதை எழுதி இருப்பார்.அது சிறுவர்களின் மனவுலகத்தைப் படம் பிடித்துக் காட்டும் அந்தக் கதையின் தூண்டுதலில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். அந்தச் சிறுகதையில் ராஜப்பா,நாகராஜன் என்கிற இரு சிறுவர்களின் மனஓட்டத்தைப் பதிவு செய்திருப்பார்.அந்தச் சிறுகதையில் இரண்டே பாத்திரங்களின் மூலம் அவர்களுக்குள் வெளிப்படும் பெருமை, போட்டி, பொறாமை, பகைமை, குற்ற உணர்ச்சி அனைத்தையும் பதிவு செய்து இருப்பார்.

சிறுவன் சாமுவேல் படத்தில் சாமுவேல், ராஜேஷ் என்கிற இரு சிறுவர்களின் மனவோட்டம் பிரதானமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 10 வயதுச் சிறுவன் சிறுவன் சாமுவேலுக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் இஷ்டம். எங்கே சிறுவர்கள் விளையாடினாலும் ஓடிப்போய் வேடிக்கை பார்ப்பான். தானும் கலந்து கொள்ள வேண்டும் என்று துடிப்பான். ஆனால் அவன் வயதில் சிறுவனாக இருப்பதால் அவனைப் புறக்கணித்து விடுவார்கள். இப்படி இருக்கும் போது ராஜேஷ் என்பவன் நண்பனாகக் கிடைக்கிறான். அவனது சிபாரிசில் இளைஞர்கள் விளையாடும் கிரிக்கெட் அணியில் சாமுவேல் சேர விரும்புவான்.அந்தச் சிறுவர்கள் அணி கிரிக்கெட் விளையாடுவது ஊருக்குள் பெரியவர்களுக்குப் பிடிக்காது. எங்கே பார்த்தாலும் துரத்தி அடிப்பார்கள். விளையாடும்போது எங்கேயாவது அடித்த பந்துபோய் விழுந்தால் அவர்களை நீண்ட தூரம் அடிக்கத் துரத்துவார்கள்.

ராஜேஷ் அப்பாவியாக இருந்தாலும் அவனது தோற்றத்தை வைத்து அவன் மீது பலரும் விலக்கம் கொள்வார்கள். அவனுக்குச் சரியாகப் படிப்பு வரவில்லை.

அந்தச் சிறுவர்கள் மத்தியில் கிரிக்கெட் ட்ரம்ப் கார்டு சேர்ப்பது பெரிய போட்டியாக நடக்கும். யார் யார் எத்தனை கார்டு சேர்ப்பது என்பதில் அவர்களுக்குள் நிலவும் போட்டி பொறாமையையும் விதைக்கிறது.

இதற்கிடையில் அவர்களில் ஒருவனின் வீடியோ கேம் காட்டி அனைவரது பொறாமையும் சம்பாதிக்கிறான்.அந்த வீடியோ கேம் ஒரு நாள் தொலைந்து போய் விடுகிறது.பழி ராஜேஷ் மேல் விழுகிறது. வீட்டுக்குச் சென்று கேட்டபோது அவனை அவனது அப்பா மோசமாக அடிக்கிறார்.
ஒரு திருமண வீட்டில் மோதிரம் ஒன்று காணாமல் போக அந்தப் பழியும் இவன் மேல் வருகிறது. அதற்காகவும் அவன் அடிபடுகிறான் . பிறகுதான் இவன் திருடவில்லை என்று தெரிகிறது.
அது மட்டுமல்ல அவன் படிப்பு தடைப்பட்டு அவனது அப்பா அவனைத் தன்னுடன் வேலைக்கு அழைத்துச் செல்கிறார்.
ஆனால் அந்த வீடியோ கேம், கிரிக்கெட் கார்டு எல்லாம் சாமுவேல் தான் எடுத்திருப்பான். ஒரு கட்டத்தில் சாமுவேல் மனம் மாறி வருந்துகிறான்.ராஜேஷைச் சந்திக்க அவனது வீட்டுக்குச் செல்கிறான் .அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்.

கன்னியாகுமரி மண்ணின் மணத்தையும் மக்கள் பேசும் மொழியின் வாசனையையும் கலந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சாது.

ஆரம்பத்தில் கன்னியாகுமரி மொழி புரியாமல் சற்று விலக்கம் ஏற்பட்டாலும் போகப்போக அவர்களின் உணர்வுகளின் மூலம் பேசும் அந்த வார்த்தைகளை நாமே யூகித்துக் கொள்கிறோம்.

திரைமுகங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதால் கதை மாந்தர்கள் அனைவரையும் நிஜ பாத்திரங்களாகவே உணர வைக்கிறது படம்.

பிரமாண்ட செலவுகள் மூலம், மிரட்டல் காட்சிகள் மூலம் நம்மை வியக்க வைக்கும் படங்கள் மத்தியில் உணர்வுகளை மட்டும் படம் பிடித்து இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாகச் சிறுவர்களின் உணர்வுகளைப் பேசுகிறது படம்.குமரிப் பகுதியில் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் என இரு வேறு மதங்களின் பழக்க வழக்கங்கள் மரபுகள் பற்றியும் காட்சிகள் வைத்து , அவர்கள் இடையே நிலவும் விலகலையும் போகிற போக்கில் தொட்டுக்காட்டிப் பதிவு செய்கிறது படம்.

பாத்திரங்கள் பேசும் வசனங்களும் நடை உடை பாவனைகள் என அனைத்தும் மிகவும் எதார்த்தமாக உள்ளன. குறிப்பாகப் பிரதான பாத்திரங்களான சாமுவேலாக வரும் அஜிதன் தவசிமுத்து , ராஜேஷாக வரும் கே.ஜி.விஷ்ணு இருவரும் நடிப்பில் ஸ்கோர்களை அள்ளுகிறார்கள்.
கதைக்கேற்ற ஒளிப்பதிவும் இசையும் ஓர் அசல் தன்மையை நமக்குள் கடத்துகின்றன.

படம் பார்க்கும் ரசிகர்களைத் தங்கள் பால்யத்துக்குள் அழைத்துச் செல்லும் சிறுவன் சாமுவேல்.

எளிமையான பட்ஜெட்டில் சிறுவர்களின் உணர்வுகளின் இயல்பான பதிவு இப்படம்.