இது க்ரைம் திரில்லர் படங்களின் காலம்.குற்றம் பரபரப்பு மர்மங்கள் கொலை புலனாய்வு என்று அதற்கான அம்சங்களை கலவையாக்கி விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் உருவாகியுள்ள படம் சில நொடிகளில் .
நாயகன் லண்டனில் மனைவியுடன் வாழும் இளைஞன் .சொந்தமாக மருத்துவமனை வைத்துள்ளான்.அறுவை சிகிச்சைகளில் நிபுணன்.அவனுக்கு ஒரு சட்டம் மீறிய காதலி உண்டு.அதாவது கள்ளக்காதலி. சில நொடிகளில் மனிதர்கள் வாழ்க்கையே மாறி விடுகிறது அல்லவா? சந்தர்ப்ப சூழ்நிலையால் அவளது எதிர்பாராத மரணத்திற்கு அவன் காரணமாகி விடுகிறான்.குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது.பிறர் அறியாமல் அவளது இறந்த உடலை அப்புறப்படுத்துகிறான்.எந்தக் குற்றம் செய்பவனும் தடயத்தை அவனை அறியாமல் விட்டு விட்டுச் செல்வான் என்பார்கள். இவனுடைய குற்றச்செயல் பெண் ஒருத்திக்கு தெரிந்து விடுகிறது.அப்புறம் என்ன? பணம் கேட்டு பிளாக்மெயில் செய்கிறாள்.
இந்த பிரச்சினை அவன் மனைவிக்குத் தெரிய வருகிறது.
யாருக்குமே தெரியாது என்று நினைத்தவனது குற்றத்தை அந்தப் பெண் எப்படிக் கண்டுபிடித்தாள்? இந்தப் பிரச்சினை குடும்ப வாழ்க்கையில் ஊடுருவும் போது அவனது மனைவி அவனை எப்படிப் பார்க்கிறாள்? அவனை எதிர்கொள்கிறாள்? அவனது எதிர் வினை என்ன? அதன் பிறகு என்ன நிகழ்கிறது?அவன் தன்னைச் சுற்றி இருக்கும் சிக்கல் வலையிலிருந்து வெளி வந்தானா இல்லையா? என்பதுதான் சில நொடிகளில் படத்தின் மீதிக் கதை.கதையில் எழும் புதிர்களுக்கும் கேள்விகளுக்கும் பரபரப்பான திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை மூலம் பதில் சொல்கிறார்
இயக்குநர் வினய் பரத்வாஜ். இது மனித வாழ்க்கையில் சில நொடிகளில் நிகழும் விபரீத விளைவுகள் பற்றிய கதை எனலாம்.
முந்தைய படங்களில் ஒரு சாதாரண நிலை நாயகனாக நடித்து வந்த ரிச்சர்ட்
ரிஷிக்கு இந்தப் படத்தில் பலவித நடிப்புத் தருணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
படம் முழுக்க நடிப்பில் அடித்து விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. பயம், பதற்றம், குற்ற உணர்ச்சி, புழுங்கும் மன இறுக்கம் என்று தனது பன்முக நடிப்பை வெளிக்காட்டி உள்ளார். இடையே யாஷிகா ஆனந்துடன் நெருக்க இறுக்க சிருங்காரக் காட்சிகளில் ரசிகர்களுக்கு உற்சாக உஷ்ணம் ஏற்றுகிறார். அந்த வகையில் அந்தப் பாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.
அவரது தோற்றம் சிகையழகு அலங்காரம் போன்றவை அவருக்குப் புதிய முகத்தை படத்தில் வெளிப்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் இப்படத்தில் நடித்துள்ளார் என்பதை விட ரிஷியுடனான நெருக்கமான காட்சிகளில் கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் என்றே கூறலாம்.உடல் அழகுத் தோற்றத்தைக் காட்டுவதில் ஏராள தாராளம் காட்டியுள்ளார்.
தயாரிப்பாளர் புன்னகைப் பூ கீதா இதில் ரிச்சர்ட்டின் மனைவியாக வருகிறார். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மை, குழந்தைப் பேறின்மை போன்ற எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து தவிப்போடும் கசப்போடும் வாழும் அந்தக் கதாபாத்திர உணர்வைத் தனது முக பாவங்களில் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.தோற்றத்தில் சற்று முதிர்வு காணப்பட்டாலும் அந்தப் பாத்திரத்தை ரசிக்க முடிகிறது.அவர் ஒரு தயாரிப்பாளர் மட்டுமல்ல நடனக் கலைஞர் என்றும் நிரூபித்திருக்கிறார்.
நாயகனைப் பணம் கேட்டு மிரட்டும் அந்த இளம்பெண்ணின் இரக்கமற்ற எதிர்மறைத் தன்மை ,அதை வெளிப்படுத்தி உள்ள விதம் கதையின் பயணத்திற்கு வலுவூட்டுகிறது.படத்தில் வில்லங்கள் தான் இருக்க வேண்டுமா என்ன? வில்லி கள் இருக்கக் கூடாதா?என்று சொல்ல வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன் செய்துள்ள ஒளிப்பதிவு படத்திற்குப் பெரிய பலமாக உள்ளது. லண்டனின் அழகையும் அதன் பிரம்மாண்டத்தையும் பாஸ்போர்ட் விசா இல்லாமல் நம்மை அழைத்துச் சென்று காட்டுகிறார்.
பாடல்கள் புதியவர்களின் இசைப் பங்களிப்பில் வந்துள்ளன.பாடல்களில் இளமை இழைந்தோடுகிறது.
பாரதியாரின் ஆசை முகம் ‘மறந்துபோச்சே’ பாடல் கூட மறு உருவாக்கத்தில் ஈர்க்கிறது.
பாலிவுட் பின்னணி கொண்ட இசையமைப்பாளர் ரோஹித் குல்கர்னி உயர்தரத்திலான பின்னணி இசையை வழங்கி உள்ளார்.
கள்ளக் காதல், துரோகம் , மிரட்டல் என வழக்கமான கதைக் கற்பனையில் படம் நகர்வதாகத் தோன்றுகிறது.ஆனாலும் மர்மங்களை உடைத்த விதமும் புதிர்களை அவிழ்த்த விதமும் பார்வையாளனுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது.
பின்புலக் காட்சி அழகுக்குக் கவனம் செலுத்திய அளவிற்கு முன்புலமாக உள்ள கதை திரைக்கதையில் மேலும் கவனம் செலுத்தி கூர்படுத்தி இருந்தால் இந்தப் படத்தின் உயரம் மேலும் கூடி இருக்கும். சில நொடிகளில் படம் பல காலம் நினைக்கும் படியாக அமைந்திருக்கும்.
வணிகப் படங்களுக்கான எல்லா அம்சங்களும் நிறைந்துள்ள இந்தப் படம் ,த்ரில்லர் பட ரசிகர்களை ஏமாற்றாது.