
வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் பொன்னான வாய்ப்பு தனக்கு கிடைத்ததில்
கல்யாணி ப்ரியதர்ஷன் மிக மிக மகிழ்ச்சியாக உள்ளார். அவரது தமிழ் சினிமா அறிமுகம் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் “ஹீரோ” திரைப்படம் மூலம் இந்த வாரம் அரங்கேறுகிறது. “ஹீரோ” டிசம்பர் 20, 2019 அன்று வெளியாகிறது.

டிரெய்லரில் மிகச் சிறு காட்சிகளிலே அவர் காட்டப்பட்டிருந்தாலும் அவரது அழகும், துள்ளல் உடல்மொழியும் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. “ஹீரோ” படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்து கூறும்போது…
நான் ‘மீரா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ‘மீரா’ மிகவும் முதிர்ச்சியான மனநிலை கொண்ட பெண். எதையும் பேசவும், செய்யவும் முன் பலமுறை யோசித்து செய்யும் பெண். நிஜ வாழ்வில் அதற்கு நேரெதிரானவள் நான். துடுக்குத்தனத்துடன் நினைத்ததை அப்படியே உளறி விடுவேன் எனக் கூறிச் சிரிக்கிறார்.
மேலும் படத்தின் மையம் கல்வி நிலையை பற்றி பேசுவதை குறித்து கூறும்போது…
நான் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் படித்தவள் இரண்டு இடங்களிலும் கல்வி சொல்லித்தரப்படும் முறையை அறிந்தவள். அந்த வகையில் “ஹீரோ” இன்றைய இந்தியாவின் கல்வி நிலையை அழுத்தமாக அலசும் படைப்பாக, எது சரியானதென்பதை வலியுறுத்தும் படைப்பாக இருக்கும். மேலும் ரசிகர்களை நம் நாட்டின் கல்வி நிலை குறித்த நீண்ட சிந்தனைக்கு இப்படம் இட்டு செல்லும் என்றார்.
“ஹீரோ” படக்குழுவினருடன் பணியாற்றியது குறித்து கூறும்போது….
இயக்குநர் PS மித்ரன் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்துவதில் பெரும் திறமைக்காரராக இருக்கிறார். ஒவ்வொரு சிறு காதாப்பாத்திரத்தையும் கச்சிதமாக படைத்திருக்கிறார். நான் சொல்வதை விட படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் அவரை பெரிய அளவில் கொண்டாடுவார்கள். சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனம் கொண்ட மனிதர் படப்பிடிப்பில் உள்ள ஒவ்வொருவரையும் அன்பாக பார்த்து கொள்வார். ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் அவரிடம் ஒரு திறமையான இயக்குநர் மறைந்திருக்கிறார். ஒரு நாள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். “ஹீரோ” படத்தின் பின்னால் மறைந்திருக்கும் “சூப்பர் ஹீரோக்கள்” பற்றி இசை விழாவிலேயே பேசியிருக்கிறேன். உணர்வை சில்லிடவைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் இசை, ஜார்ஜ் C வில்லியம்சின் கண்ணைக் கவரும் ஒளிப்பதிவு என, இத்தனை சரித்திர நாயகர்கள் ஒன்றிணைந்திருக்கும் படத்தில், நான் நடித்திருப்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. என் மேல் நம்பிக்கை வைத்து என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு தயாரிப்பாளர் ராஜேஷ் சாருக்கு நன்றி. இப்படத்தின் மீதான அவரது நம்பிக்கை அசாதாரணமானது. படத்தை இத்தனை பிரமாண்டமாக உருவாக்கியதாகட்டும், இப்போது மிகப்பெரிய அளவில் வெளியிடுவதாகட்டும் அவருக்கு நிகர் அவரே என்றார்.
2019 டிசம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் “ஹீரோ” திரைப்படத்தை கோட்டப்பாடி J ராஜேஸ், KJR Studios சார்பில் தயாரித்துள்ளார். PS மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.