பீட்சா, சூதுகவ்வும், அட்டகத்தி, இன்று நேற்று நாளை, தெகிடி உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட மக்கள் மனதில் இடம்பிடித்த படங்களை தயாரித்து வருபவர் சி வி குமார்.
தனது திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்புகளில் பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை அறிமுகப்படுத்திய இவர், ‘மாயவன்’, ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
தற்போது இவர் இயக்கி வரும் படமான கொற்றவை பிரமாண்ட பொருட்செலவில் மூன்று பாகங்களாக தயாராகி வருகிறது.
ஓம் ஃபிலிம்சின் எஸ் ஜே குரு மற்றும் மயில் பிலிம்சின் டாக்டர் கே பிரபு தயாரிக்கும் இப்படம், இது வரை யாரும் முயற்சிக்காத உண்மை-புனைவு கதைக்களத்தில் உருவாகி வருகிறது.

எழுத்தாளர் தமிழ்மகன் இந்த திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.
சி வி குமார் படத்தை பற்றிய தகவல்களை பகிர்ந்த போது, “ஏற்கனவே வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு இப்போதும் தொடர்வது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன்பும் பின்புமான காலத்துக்கு ரசிகர்களை இப்படம் அழைத்து சென்று பரவசத்தில் ஆழ்த்தும்.
முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ‘கொற்றவை: தி லெகசி’ என்று முதல் பாகத்துக்கு பெயரிட்டுள்ளோம். சீரான இடைவெளியில் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி, மூன்றாவது பாகத்தில் பரப்பரப்பான கிளைமேக்சுடன் கொற்றவை நிறைவடையும்,” என்று கூறினார்.
புதையல் வேட்டை தொடர்பான கதையாக அமைந்துள்ள கொற்றவையில், 2000 வருடங்களுக்கு முன் மறைக்கப்பட்ட புதையலை கண்டறிய நாயகன் எடுக்கும் சாகச முயற்சிகள் மெய்சிலிர்க்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன. ஏன் அந்த புதையல் மறைக்கப்பட்டதென்பதும் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரையில் நடிகை குஷ்பு நடுவராக பங்குபெற்ற அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சியில் சாகச தமிழ் மகன் விருது பெற்ற ராஜேஷ் கனகசபை கொற்றவை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். சந்தனா ராஜ் மற்றும் சுபிக்ஷா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
எழுத்து & இயக்கம்: சி வி குமார்
வசனம்: தமிழ்மகன்
இசை: ஜிப்ரான்
ஒளிப்பதிவு: பிரகாஷ்
படத்தொகுப்பு: இக்னேஷியஸ் அஷ்வின்
கலை: எஸ் கே
நடிகர்கள்: ராஜேஷ் கனகசபை, சந்தனா ராஜ், சுபிக்ஷா, அனுபமா குமார், கவுரவ் நாராயணன், பவன், வேல ராமமூர்த்தி, அபிஷேக், வேலு பிரபாகரன்
தயாரிப்பு நிறுவனம்: ஓம் ஃபிலிம்ஸ் மற்றும் மயில் ஃபிலிம்ஸ்
தயாரிப்பாளர்கள்: எஸ் ஜே குரு, டாக்டர் கே பிரபு
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்