‘சீசா’ திரைப்பட விமர்சனம்

நட்டி நடராஜ் ,நிஷாந்த் ரூசோ, பாடினிகுமார் ,மூர்த்தி, ராஜநாயகம், நிழல்கள் ரவி, அதிஷா பாலா, நடித்துள்ளனர். குணா சுப்பிரமணியம் எழுதி இயக்கியிருக்கிறார். இசை சரண்குமார் .தயாரிப்பு விடியல் ஸ்டுடியோஸ் டாக்டர் கே. செந்தில் வேலன்.

ஒரு மாளிகை போல இருக்கும் பங்களாவில், அதில் பணியாற்றும் வேலைக்காரர் கொலையாகிறார்.இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் பிஸ்னஸ் மேக்னட் ஆக விளங்கும் நிஷாந்த் ரூசோ.அந்தக் கொலைக்குப்பின் அவரும் அவரது மனைவி பாடினி குமாரும் மாயமாகி விடுகிறார்கள்.ஆதாரங்கள் தேடலாம் ,ஏதாவது துப்பு கிடைக்கும் என்றால் வீட்டில் இருக்கும் சிசிடிவி கண்காணிப்புக் கேமராவின் ஹார்ட் டிஸ்க்கையும் காணவில்லை.

கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க காவல் ஆய்வாளர் நட்டி நடராஜ் களத்தில் இறங்குகிறார்.மர்மமாக காணாமல் போன தம்பதியைத் தேடுகிறார்.எதிர்பாராத வகையில ஒருநாள் மாயமான நிஷாந்த் ரூசோ மட்டும் வீட்டுக்கு வருகிறார்.ஆனால் அவருடன் இருந்த மனைவி பற்றி தெரியாத மனநிலையில் இருக்கிறார். பாடினிக்கு என்ன ஆயிற்று என்கிற மர்மம் நிலவுகிறது.நட்டி நடராஜ் புதுவிதமான விசாரணையைத் தொடங்குகிறார்.
அப்போது அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியே வருகின்றன.அந்த உண்மைகளால் யார் வெளிச்சத்துக்கு வந்தார்கள்? பாடினிக்கு என்ன ஆனது? கொலைக்கான காரணம் என்ன? போன்ற மர்மங்களுக்கு விடை கூறும் திருப்பங்களுடன் கூடிய திரில்லர் படம் தான்  ‘சீசா’.

நடிகர் நட்டியின் முகத்தோற்றம் இவர் நல்லவரா கெட்டவரா என்று யூகிக்க முடியாத அளவிற்கு இருக்கும். நேர்நிலை எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தும் .பல படங்களில் போலீஸ் பாத்திரத்தில் நடித்தவர்,இதிலும் அந்த போலீஸ் பாத்திரத்தில் பொருத்தமாக நடித்துள்ளார்.

இன்னொரு நாயகனாக வரும் நிஷாந்த் ரூசோ, தனது பாத்திரத்தில் பல்வேறு நடிப்புத் தருணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை அழகாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் பாடினி, பாந்தமான குடும்பப் பாங்கான முகம் அளவான அழகு ,நடிப்பு ,பாடல் காட்சிகளில் தாராள மயம் எனக் கவனிக்க வைக்கிறார்.நிஷாந்த் ரூசோவின் நண்பராக வரும் மூர்த்தி, காவல் துணை ஆய்வாளராக வரும் ஆதேஷ் பாலா, வீட்டு வேலைக்காரராக மாஸ்டர் ராஜநாயகன், பாடினியின் தந்தையாக இயக்குநர் அரவிந்தராஜ் எனப் பிற துணைக் கதாபாத்திரங்களில் வருபவர்களும் தங்கள் பங்கை முடிந்தவரை செய்துள்ளனர்.படத்தில் தயாரிப்பாளர் டாக்டர்.கே.செந்தில் குமார், சிறிய வேடம் ஒன்றில் அனுபவசாலி போல் நடித்திருக்கிறார்.

இசை அமைப்பாளர் சரண்குமார் தனது இசையில் காதல், ஆன்மீகம் என்று கலந்து கட்டி இசை அமைத்துள்ளார்.பின்னணி இசையும் ஓகே ரகம். ஒளிப்பதிவாளர்கள் பெருமாள் , மணிவண்ணன் இருவரும் இயக்குநரின் பாதையில் பயணித்துள்ளார்கள்.

மொபைல் போன், இன்டர்நெட்,வீடியோ கேம், ஆன்லைன் சூதாட்டம் என்று உலகளாவிய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படும் விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு கதை அமைத்துள்ளார் இயக்குநர் குணா சுப்பிரமணியம்.மனக்கோளாறு, மனப்பிறழ்வு என்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விட சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை இதில் வெளிப்பட்டுள்ளது.அது எவ்வளவு அபாயம் நிறைந்தது என்றும் காட்டியுள்ளார்கள்.

அந்த வகையில் ,பொதுவாக க்ரைம் த்ரில்லர் ரகத்தில் வரும் படங்கள் பொழுதுபோக்கு நிலையில் தான் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அதையும் தாண்டி மக்களுக்கான ஒரு செய்தியும் சொல்லப்பட்டுள்ளது.

குழப்பங்களுக்கு இடமின்றி திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை அமைத்து யார் கொலை செய்தது ? ஏன் செய்யப்பட்டது? என்கிற பரபரப்பைக் கடைசி வரை தக்க வைத்துள்ள இயக்குநர் குணா சுப்பிரமணியம்,பட்ஜெட்டுக்குள் நிறைவு தரும் ஓர் இயக்குநராக கவனிக்க வைக்கிறார்.

மொத்தத்தில், ’சீசா’ பொழுதுபோக்குடன் இணைந்த கருத்தைக் கூறியுள்ள படம்.