நிரஞ்சன் சுதீந்திரா, ,அர்ஜுன் ,ஐஸ்வர்யா அர்ஜுன், பிரகாஷ்ராஜ், , சத்யராஜ், துருவா சார்ஜா,சுமித்ரா,பிதிரிசாதி நடித்துள்ளனர். அர்ஜுன் திரைக்கதை அமைத்து இயக்கித் தயாரித்துள்ளார். அனுப்ரூபன்ஸ் இசையமைத்துள்ளார் .
ஜி பாலமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அயூப்கான் படத்தொகுப்பு செய்துள்ளார்.
சத்யராஜின் செல்ல மகள் ஐஸ்வர்யா. பெயர் சீதா.தாய் இல்லாத மகளை மிகவும் பாசத்தில் வளர்க்கிறார். ஐஸ்வர்யா சத்யராஜை அம்மா அம்மா என்று அழைக்கிறார். சத்யராஜ் மகளை டாடி என்று அழைக்கிறார் .இப்படிப் பாசத்திற்கு உதாரணமாக இருப்பவர்கள் அவர்கள் . ஒரு நாள் ஐஸ்வர்யா சென்னையில் இருந்து மதுரைக்கு ஒரு சமையல் கலை வல்லுநர்கள் பயிற்சி பட்டறைக்குச் செல்கிறார். மகளைப் பிரிய மனம் இல்லாமல் விடை கொடுக்கிறார் சத்யராஜ். போகும் வழியில் அந்தக் காரில் துரத்தி வந்து லிப்ட் கேட்டு ஏறிக்கொண்டு இடம் பிடிக்கிறார் நிரஞ்சன். வழித்துணை போல வருகிறார்.சீதாபுரம என்கிற அவர் ஊர் அருகே இறங்கிக் கொள்கிறார். ஐஸ்வர்யா ஓட்டலுக்குள், நுழையும் போது அந்த ஓட்டலில் ஒரு தீ விபத்து ஏற்பட்டு பெருத்த சேதமடைகிறது. அனேக உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. ஐஸ்வர்யா மயிரிழையில் தப்பித்துக் கொள்கிறார். 20 வினாடிகள் முன்பு சென்றிருந்தால் ஐஸ்வர்யாவுக்கும் உயிர் இழப்பு நேர்ந்திருக்கும். இதை நின்று யோசித்துப் பார்த்து தனது பயணத்தில் தனக்கு இடையூறு செய்தவர்களைத் தேடிச் சென்று நன்றி சொல்கிறார் .அப்படி நிரஞ்சனைப் பார்க்க அவர் வீடு செல்கிறார். வரும் வழியில் பழம் விற்றபெண், மாடு மேய்த்த சிறுவன் என்று சந்தித்து நன்றி கூறுகிறார். வழியில் ஒரு தாதாவாக இருக்கும் அர்ஜுனுக்கும் அரசியல்வாதி ஒருவருக்கும் தகராறு நடக்கிறது .அதனாலும் பயணம் தாமதப்படுகிறது. எனவே அர்ஜுன் வீட்டுக்கும் சென்று நன்றி கூறுகிறார். இப்படிப்பட்ட நிலையில் பயணம் செய்தபோது ஐஸ்வர்யா மீது நிரஞ்சனுக்கு காதல் வருகிறது. ஐஸ்வர்யாவும் காதலித்தாலும் அது நிரஞ்சனுக்கு சந்தேகமாக இருக்கிறது.இதற்கு இரு வீட்டாரும் சம்மதித்தாலும் நிரஞ்சனுக்கு உள்ளுக்குள் ஓர் உறுத்தல் இருக்கிறது. அது என்ன? அதற்குப் பிறகு காதல் என்ன ஆகிறது? என்பதுதான்152.18 நிமிடங்கள் கொண்ட இந்த ‘சீதா பயணம்’ படத்தின் மீதிக்கதை. 
இது ஒரு பயணக் கதை போல் அழகாக அமைந்திருக்கிறது. ஐஸ்வர்யா சற்று முதிர்ச்சியான பாத்திரத்தில் அறிவுள்ள துடிப்பான பெண்ணாக நடித்திருக்கிறார் .தோற்றத்திலும் நடிப்பிலும் குறை இல்லை.
சீதாவின் பயணத்தில் வழித்துணையாக துறுதுறு வாலிபனாக வரும் நிரஞ்சன் ஒரு டாக்டர் என்று பின்பு தெரிகிறது.அவர் அந்த பாத்திரத்தில் சரியாகப் பொருந்தி உள்ளார்.
சத்யராஜ் அந்த அப்பா பாத்திரத்தில் மிகை நடிப்பு இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார்.இப்படி ஒரு தந்தை அமைய வேண்டும் என்று பல பெண்களும் பொறாமைப்படும் வகையில் அந்தப் பாத்திரம் அமைந்துள்ளது.
பிரகாஷ்ராஜ் நிரஞ்சனின் தாத்தாவாக வருகிறார். பிரகாஷ்ராஜின் குடும்ப கலகலப்பு பார்க்கும்போது அனைவருக்கும் கூட்டுக் குடும்பத்தின் மீது ஏக்கம் வரும் அளவிற்கு இருக்கிறது.
தாதாவாக வரும் அர்ஜுன் சண்டையும் போடுகிறார். ஆக்சன் கிங் அல்லவா?பிறகு திருந்தியும் விடுகிறார்.
ஐஸ்வர்யா செல்லும் காரில் நாமும் செல்வது போல் ஒரு பயண அனுபவத்தைத் தருகிறது படம். அதுமட்டுமல்லாமல் இரண்டாவது பாதியில் குடும்பப் பாசத்தையும் குடும்ப உறவுகளின் மேன்மைகளையும் எடுத்துச் சொல்லும்படி காட்சிகள் உள்ளன .அனைவருமே தனது குடும்பத்தைத் திரும்பி பார்க்கும் வகையில் காட்சிகள் உள்ளன.
இயக்குநரின் கதைக்கேற்ற பாடல்களும் நல்ல வரிகளும் உள்ளன. முதலில் ஒலிக்கும் பாடல் தவிர அனைத்துப் பாடல்களும் நன்றாக உள்ளன.
சீதா செல்லும் அந்தப் பயணத்தில் நம்மையும் அழைத்துச் செல்லும் வகையில் பாலமுருகனின் ஒளிப்பதிவு பயண அனுபவத்தை நமக்குக் கடத்துகிறது.
அனுப்ரூபன்ஸ் இசையில் வழக்கமான கதாநாயகன் கதாநாயகி பாடல் போலல்லாமல் சத்யராஜ், நிரஞ்சன் , ஐஸ்வர்யா என்று அந்தந்தப் பாத்திரங்களும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பாடல்கள் உள்ளன அது சிறப்பு.வரப்போரமா போற புள்ள, அன்பே சரிதானா? பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம்.
அர்ஜுன் இயக்கும்படம் என்றால் அடிதடி சண்டைகள் என்று ஒரு மசாலாவாக இருக்கும் .ஆனால் மனித மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் படம் இயக்கி அர்ஜுன் அனைவருக்கும் ஆச்சரிய அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். குடும்ப உறவுகளின் மேன்மையை மகிமைப்படுத்தும் இந்தப் படத்திற்கு நிச்சயம் விருது கிடைக்கும்.
குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் ’சீதா பயணம்’.


