‘வேட்டையன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஞானவேல் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் டி .ஜே . ஞானவேல் பேசும் போது,
“நன்றி சொல்வதற்காகத் தான் இந்த சந்திப்பு. நம்பிக்கையில் தொடங்கிய இந்தப் பயணம் நன்றியில் நன்றியில் தான் முடிய வேண்டும்.
ஒரு கருத்தைச் சொல்லும் படமாக இந்தப் படம் உருவாக வேண்டும் என்று என்னைக் கொண்டு சென்ற சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு முதலில் நான் நன்றி சொல்கிறேன்.அவர் இல்லை என்றால் இந்தப் பயணம் இல்லை,இவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் சாத்தியமில்லை. ‘ஜெயிலர் ‘போன்ற பெரிய வெற்றி கொடுத்த பிறகு இப்படி கண்டன்ட் ஓரியண்டட் ஆக படங்கள் என்பதற்கு செய்வதற்கு பெரிய தைரியம் வேண்டும் .அந்தத் தைரியம் இருப்பதால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
நான் அவரிடம் கூறினேன் ஜெயிலர் வெற்றி எனக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. நான் நினைத்த கதையை செய்ய விரும்புகிறேன்.புரிந்து கொண்டு அவர் ஒத்துழைப்பு கொடுத்தார்.
இந்தியாவின் பெருமைக்குரிய மரியாதைக்குரிய அமிதாப்பச்சன் சார், மஞ்சு மேடம்,பகத் பாசில், துஷாரா எல்லாருமே இந்தக் கதையை நம்பித் தான் உள்ளே வந்தார்கள்.
படைப்பு சுதந்திரத்தோடு ஒரு படம் வெளிவருவது என்பதை முக்கியமாக நான் நினைக்கிறேன். இதன் நிறைகுறை அனைத்திற்கும் நானே பொறுப்பு .படம் எடுக்கும்போது எனது படைப்பு சுதந்திரம் இதில் எங்குமே கேள்வி கேட்கப்படவில்லை. அப்படிப்பட்ட சுதந்திரத்துடன் தான் எனது அடுத்த படங்களும் இருக்கும்.அப்படிப்பட்ட சுதந்திரத்தை எனக்கு அளித்து இவ்வளவு செலவு செய்து படத்தை தயாரித்த லைகா புரொடக்ஷன்சுக்கு எனது நன்றி .அதற்காக தயாரிப்பாளர் சுபாஸ்கரன், தமிழ் குமரன் ஆகியோருக்கு நன்றி.
இந்தப் படத்தை மழைக்குறுக்கீடுகள் இருந்தாலும் தமிழ்நாடு முழுக்க எல்லா தியேட்டர்களிலும் கொண்டு சேர்த்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் க்கும் எனது நன்றி.குடும்பங்கள் கொண்டாடும் படம் என்றாலே பயம் வரும். ஆனால் இது உண்மையிலேயே அப்படிப்பட்ட படமாக மாறி இருக்கிறது. அதை திரையரங்குகளில் சென்று அறிந்து கொண்டோம்.ஒரு பெரிய நட்சத்திரம் ,ரசிகர்கள் என்பதைத் தாண்டி மக்களிடம் கொண்டு சேர்த்ததில் ஊடகங்களின் பங்கு அதிகம். அதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.