
கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முதன்முறையாக இயக்குநராக மாறியுள்ள சுரேஷ் காமாட்சி, காவலர்களின் வலியை அறிந்து இந்த ‘மிக மிக அவசரம் ‘படத்தின் கதையை செதுக்கியுள்ளார். காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண் மீதான பற்று, மக்கள் போராட்டம் இவைகளில் அக்கறை உண்டு என்பதை படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் அழகாக பேசியிருக்கிறது.
அதிலும் பெண்காவலர்கள் ’மிக மிக அவசரம்’ படத்தைப் பார்த்தால் ஒருசொட்டு கண்ணீருடன், இந்த படம் உண்மையைத்தான் பேசியிருக்கிறது என அங்கீகரிப்பார்கள். அதற்கேற்றபடி காவல்துறை உயர் அதிகாரிகளே இப்படத்தை பெண் காவலர்களுக்கு திரையிட்டுக் காட்டச் செய்தார்கள்.. அந்த விதமாக காவல்துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்ய உள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. 

திரையுலகில் உள்ள சில பிரபலங்களும் விநியோகஸ்தர்களும் படம் பார்த்துவிட்டு, இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை மட்டுமல்ல, பெண்களின் வலியை அப்படியே ஒவ்வொருவரின் மனதிற்கும் கடத்துகின்ற படமாகவும் இது உருவாகி இருக்கின்றது.. நிச்சயமாக தாய்க்குலங்களை தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வரவழைக்கப் போகும் படமாக இது இருக்கும் என பாராட்டியுள்ளார்கள்..