‘சுழல் 2 ‘ -தி வோர்டெக்ஸ் இணைய தொடர் விமர்சனம்

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால் , சரவணன், மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், கௌரி கிஷன். சம்யுக்தா விஸ்வநாதன், மோனிகா பிளெஸ்சி, ஷிரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், சாந்தினி தமிழரசன், அஸ்வினி நம்பியார் நடித்துள்ளனர். எழுதி வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் உருவாக்கி உள்ளார்கள் புஷ்கர் -காயத்ரி.அமேசான் வீடியோ ஒரிஜினல் வெளியிடுகிறது.இந்தத் தொடரை பிரம்மா – சர்ஜுன் கே எம் இயக்கியுள்ளார்கள்.. இசை சாம் சிஎஸ் . ஒளிப்பதிவு ஆபிரகாம் ஜோசப். படத்தொகுப்பு ரிச்சர்ட் கெவின்.

தொலைக்காட்சித் தொடர்கள் இருக்கும் போது வெப் சீரிஸ் என்று இன்னொரு தொடர் வடிவம் எதற்கு என்று பலரும் குழம்பிய நிலையில்,சில இணையத் தொடர்களும் தொலைக்காட்சித் தொடர்கள் போலவே இருந்த நிலையில் வெப்சீரிஸ் என்பது திரைப்படம் போன்ற பார்க்கும் அனுபவத்தையும் காட்சி பிரம்மாண்டத்தையும் கொண்ட இன்னொரு காட்சி வடிவம் என்று சில இணைய தொடர்கள் மட்டும்தான் நிரூபித்தன. அப்படி நிரூபித்த ஒன்றாக ‘சுழல்’ தொடர் அமைந்தது.  இணைய தொடர் உலகில் சுழல் தொடர் பார்வையாளர்களை வசீகரித்து சுழற்றி அடித்தது .திரைப்படத்திற்கு நிகரான அனுபவத்தைக் கொடுத்தது .பெண் குழந்தைகளின் பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து விறுவிறுப்பு பரபரப்பு குறையாமல் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் சுழல் தொடர் அமைந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. இதில் மையம் கொள்ளும் கதை உள்ளூர் தன்மையிலிருந்து உலகப் பார்வை கொண்டதாக விரிந்துள்ளது.

செல்லப்பா என்கிற பெயர் கொண்ட லால் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர்.வழக்கறிஞராகப் புகழ்பெற்று விளங்குகிறார்.சமூக ஆர்வலரும் கூட.அவர் தனது கடற்கரையோர இல்லத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்படுகிறார்.கொலை வழக்கு விசாரணை செய்யப்படுகிறது. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் கதிர் வருகிறார்.உடன் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் இணைந்து கொள்கிறார்.விசாரணை தொடங்குகிறது.குற்றத்தின் துப்பு துலக்கிய போது
லால் கொலையான வீட்டில்  கௌரி கிஷன் சிக்குகிறார். அவரோ அந்த வீட்டில் வெளியே தாழிடப்பட்ட மர அலமாரிக்குள் கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார்.அவரைப் பிடித்து விசாரித்தாலும் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.வெளியே தாழிடப்பட்டது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.விசாரணைக் குழு குழப்பம் அடைகிறது.

இந்தச் சூழ்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் இந்தக் கொலை சார்ந்து இதைத் தாங்கள் செய்ததாக ஏழு பேர் சரணடைகிறார்கள்.அவர்கள் கூறும் காரணம் ஒரே மாதிரி உள்ளதால் போலீஸ் மீண்டும் சந்தேகப்படுகிறது.ஆக கௌரி கிஷனுடன் சேர்த்து எட்டு பேர் வருகிறார்கள்.அவர்களுக்குள் எந்த தொடர்பும் இல்லாதது இன்னொரு கேள்விக்குறி.போலீசின் குழப்பம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.விசாரணை பயணம் உண்மையான குற்றவாளிகளை நோக்கிச் செல்கிறது அதன் முடிவு என்ன என்பதுதான் விறுவிறுப்பும் பரபரப்பும் கொண்டு பயணிக்கும் ‘சுழல் 2’ ன் கதை செல்லும் பாதை,

பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை மையப்படுத்தி முதல் பாகத்தை உருவாக்கிய புஷ்கர்-காயத்ரி குழு, ‘சுழல் 2’- ஐ  வேறொரு விரிந்த பார்வையோடு உருவாக்கி உள்ளனர்.
முதல் பாகத்தைப் போலவே எட்டு எபிசோட்களும் கொஞ்சம் கூட தொய்வில்லாத திரைக்கதையால் சுவாரஸ்ய திருப்பங்களோடு செல்கின்றன.

முதல் பாகத்தில் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்த தனது சித்தப்பாவைக் கொன்றுவிட்டு சிறை செல்கிற ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தப் பாகத்தில் சிறையில்தான் இருக்கிறார், தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார், இருந்தாலும் அந்த பாத்திரம் கதையில் பயணம் செய்வது நல்லதொரு முயற்சி.காவல் ஆய்வாளராக வரும் சரவணன் கதாபாத்திரம் எதிர்பாராத வரவு,அது தரும் திருப்பமும் அப்படியே.

வழக்கறிஞர் லால் பற்றிய பல்வேறு கோணங்களையும் லாலின் மகன், மனைவி, கார் ஓட்டுநர் என்ற குடும்பத்தினர்,கொலை என்று சரணடைந்தவர்கள் என்று மற்றவர்களது பார்வையும் கோணமும் சொல்லப்பட்டுள்ளது.அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்கள் தங்களது சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்கள்.

புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரது கதை மற்றும் திரைக்கதை பல திருப்பங்களுடன் பயணிக்கிறது.அதன் மூலம் இந்த இணையத் தொடரில் பேசப்பட்டிருக்கும் சமூகச் சிக்கல் தொடரைப் பார்க்கும் பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாக பதிவாகியுள்ளது.

குறிப்பாக கதாபாத்திர வடிவமைப்புகள்,அந்தக் குணச்சித்திர வார்ப்புகள் தொடரின் மிகப்பெரிய பலமாக உள்ளன. மஞ்சிமா மோகன் ,அவரது காதல் கணவர் கயல் சந்திரன் ஆகியோரது கதாபாத்திர வடிவமைப்பு ஒரு சிறு சாம்பிள்.நாட்டில் நடக்கும் தவறுகளின் பின்னணியில் சாதாரணர்களும் இருப்பார்கள், என்பது நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் ஜோசப் ஒரு திரைப்படத்தைப் போன்று பெரிய பட்ஜெட்டில்  காட்சிகள் ஆக்கி காட்டியுள்ளார். திருவிழா கூட்டம், மயான கொள்ளை திருவிழா போன்ற முதல் பாகத்தைப் போலவே இதிலும் நிறைய காட்சிகளில் கூட்டம் உள்ளது.அந்தத் திரை நிறைவுக்காகவே கதைப் பின்புலத்தைத் திருவிழா என்று வைத்துள்ளது சிறப்பான உத்தி.நிஜமான திருவிழாவா? படத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டதா என்று நம்ப முடியாத அளவிற்கு ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.

பாடல்களை இதமாக இசையமைத்த சாம் சி எஸ் பின்னணி இசையில் ஒலி அளவைக் குறைத்திருக்கலாம்.

ஒரு தொடரின் இரண்டாம் பாகம் எடுப்பது என்பது ஒரு சவால்தான். அந்தச் சவாலை எளிதாகக் கடந்து இதை ஒரு முழு நிறைவான திரை அனுபவமாக மாற்றி இருக்கிறார்கள்.

ஏராளமான பாத்திரங்கள் பின்புலங்கள் என்று வந்தாலும் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாகச் செல்கிறது கதை. அதை படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ள விதம் இதம் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின் பாராட்டுக்குரியவர்.

புஷ்கர் மற்றும் காயத்ரி கதை, திரைக்கதைக்கு காட்சிகளை வடிவமைத்து பிரம்மா மற்றும் சர்ஜுன்.கே.எம் பிரமாதமாக இயக்கியிருக்கிறார்கள்.

அனைவரும் பார்க்ககூடிய விதத்தில் சுவரசியமான தரமான நேர்மையான படைப்பாகக் கொடுத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில், ‘சுழல் 2’ பார்ப்பவர்களை ஈர்த்து வசப்படுத்தும். திருப்தியான அனுபவமாக உணர வைக்கும்.