வைபவ் ,அதுல்யா ரவி, லிவிங்ஸ்டன், மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ் ,சுனில் ரெட்டி, பிபின்,இளவரசு, ஜான்விஜய், ரெடின் கிங்ஸ்லி, சாம்ஸ் நடித்துள்ளனர் .
எழுதி இயக்கியுள்ளார் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருள் கேசவ் .டி.இமான் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு டிஜோ டோமி,படத்தொகுப்பு சுரேஷ் ஜே பிரசாத், சண்டைப் பயிற்சி டான் அசோக்.பி டி ஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ளார்.
பணத்திற்காக எதையும் செய்து தரும் ரவுடி லிவிங்ஸ்டன். அவரிடம் .வைபவ், மொட்டை ராஜேந்திரன், மணிகண்டன் போன்ற அடியாட்கள் இருக்கிறார்கள்.பெரிய தாதாவான ஷிகான் உசைனி ஒரு போலியான கொள்ளை முயற்சியில் ஈடுபட வைக்கிறார். அதில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.ஆனால் அப்படி கொள்ளை அடித்த பணத்தை தவற விட்டுத் தொலைத்து விடுகிறார்கள். இவர்கள் தொலைத்த பணத்தைக் கொடுக்காவிட்டால் நடப்பதே வேறு என்று உசைனி லிவிங்ஸ்டனை மிரட்டுகிறார்.
லிவிங்ஸ்டனன் மகள் தான் அதுல்யா ரவி.அவரை ஒருதலையாக வைபவ் காதலிக்கிறார். இதனால் அவர் அந்தப் பணத்தை எப்படியாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். பிரச்சனையில் இருந்து எப்படியாவது தப்பிப்பதற்காக இவர் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி ஆகியரோடு கூட்டணி சேர்த்துக்கொள்கிறார். இவர்கள் எல்லோருமே சேர்ந்து ஒரு வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவதாகத் திட்டம் .அதற்காக சுரங்கம் தோண்டுகிறார்கள்.
திட்டமிட்டபடி கொள்ளை அடிக்க முடிந்ததா? பிரச்சினைகளில் இருந்து மீண்டார்களா?வைபவ் தன் காதலில் வெற்றி பெற்றாரா?தவற விட்டு தொலைத்த பணம் கிடைத்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக் கதை.
வங்கிக் கொள்ளையை வைத்து எத்தனையோ திரில்லர் படங்கள் வந்துள்ளன. இதில் அதை காமெடியாக்கி இருக்கிறார்கள்.படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் நகைச்சுவைக் காட்சிகள் அதிகம்.கவலைகளையும் லாஜிக்கையும் மறந்து சிரிக்கும்படியான காட்சிகள் அமைத்து இதை ஒரு பொழுதுபோக்குப் படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.
சுரங்கம் தோண்டும் காட்சிகள் திரையை நிறைத்து பிரமாண்டமாக உள்ளன. தோண்டப்படும் போது ஆங்காங்கே நகைச்சுவைக்கு இடம் உள்ள காட்சிகள் இருக்கின்றன.
குடும்பத்துடன் சென்று ஜாலியாகச் சிரித்து விட்டு வரலாம்.ஒரு மசாலா நகைச்சுவைப் படத்துக்கு தேவையான அனைத்துக் கலவைகளும் கலந்துள்ளன.
திரை முழுக்க நடிகர்கள் பட்டாளம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள். ஒவ்வொருவரின் குணச்சித்திரத்தை ஆழப்படுத்தாமல் உள்ளது ஒரு சிறு குறை.படத்தில் நடித்துள்ள நடிகர்களும் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்து இருக்கிறார்கள். ஒரு சாதாரண வங்கிக் கொள்ளைக் கதையை நகைச்சுவை மூலம் ரசித்து எடுத்துள்ளார்கள்.சிரிக்க வைப்பது ஒன்றே நோக்கமாகக் கொண்டு எடுத்துள்ள அந்த முயற்சியில் திரைப்பட உருவாக்கம் ,ஒளிப்பதிவு ,இசை,படத்தொகுப்பு எல்லாவற்றையும் இணைத்து இந்த நகைச்சுவைக் கச்சேரியைச் செய்துள்ளனர்.
‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ ஒரு பொழுதுபோக்குப் படம் .


