சென்னை வானவில் திரைப்பட விழாவை (Chennai Rainbow Film Festival சென்னை தோஸ்த் என்ற அமைப்பானது, 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விழா சென்னை எழும்பூரில் உள்ள சமூகப்பணி பள்ளி அரங்கில், ஜூன் 26-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை 3 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெற உள்ளது.
சென்னை தோஸ்த் அமைப்பானது தன்பால், ஒருபால், இருபால் மற்றும் சமபால் ஈர்ப்பு கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்காக சென்னையில் இயங்கி வரும் ஒரு மகத்தான மற்றும் மிகப்பெரிய சேவை அமைப்பாகும். இதில் சுமார் 5,000 உறுப்பினா்கள் இணைத்துக் கொண்டுள்ளனா்.
கடந்த 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் தன்பாலினா்களுக்கு ஆரோக்யமான வாழ்க்கை முறையை அளிக்கும் நோக்கத்தைக் கொண்டு செயலாற்றி வருகிறது. இவ்வாறான, மாற்று பாலின ஈர்ப்பு அடையாளம் கொண்டவா்களை ஆதரிக்கவும், சமூகத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்தவும் மற்றும் எங்களின் பாலின மற்றும் பாலியல் வெளிப்பாட்டையும், அவற்றின் பன்மைத் தன்மையையும் கொண்டாடுவதே, இந்தத் திரைப்பட விழாவின் முக்கிய நோக்கமாகும்.
நிகழ்ச்சி நிரல்:
பாலின சிறுபான்மையினா் அல்லது மாற்றுப்பாலினம் கொண்டவா்களைப் பற்றியும், அவா்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும் ஆவணப்படங்கள், திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் மூலமாகப் பதிவு செய்துள்ள திரைப்படக் குழுவினா்களுக்கு சென்னை வானவில் திரை விழா ஒரு பிரம்மாண்ட மேடையை அமைத்துத்தருகிறது என்றால் அது மிகையல்ல.
முதல் நாளான 26-ந்தேதி மாலை, மாற்றுப்பாலினா் வாழ்க்கை முறை, அவா்கள் சமூகத்தில் சந்திக்கும் அவலங்கள், உள்ளக்குமுறல், ஏக்கம், மகிழ்ச்சி போன்ற யாரும் உணர்ந்திடாத உள்ளுணா்வுகளை வெளிப்படுத்தும் வகையில் புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது. அதைத்தொடா்ந்து திருநங்கை பொன்னி அபிநயாவின் வரவேற்பு நாட்டியம் நடக்கிறது.
பல்வேறு துறைகளில், தளங்களில் எங்கள் சமூக மேன்மைக்காக பணியாற்றும் ஆர்வலர்களை கௌரவிக்கும் பொருட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, தமிழ்த் திரைப்பட நடிகை ரேவதிசங்கரன் (திரு&திரு ஐயர் குறும்படம்), நடிகர் சம்பத் (கோவா திரைப்படம்), விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி தயாரிப்பாளா் நெல்சன்சேவியர், எழுத்தாளர் கவின்மலர், பத்திரிக்கையாளர் தேஜோன் ஆகியோருக்கு வானவில் தூதர் விருதுகளை தமிழ்த்திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் வழங்கி கௌரவிக்கிறார். அதுமட்டுமல்லாமல் திருநங்கைகளுக்காக உழைத்து வரும் திருநங்கை ப்ரியா பாபு, எச்.ஐ.வி., விழிப்புணர்வு ஆர்வலர் சேகர் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது இவ்விழாவில் வழங்கப்பட உள்ளது.
அதைத்தொடர்ந்து 27-ந்தேதி, நடிகை அனுபமா, எழுத்தாளர் மனுஷ்யபுத்ரன், டி.சி.எஸ்., இணைய புதுமுறைகாணல் பிரிவு தலைவர் கிரிஷ்அசோக், ஒருபால் ஈர்ப்பினர் ஆர்வலர் விக்ராந்த்பிரசன்னா, ஒருபால் ஈர்ப்பினரின் தாய் வித்யா ஆகியோர் பங்குபெறும் “சமுதாய இணைப்பு குறித்து அறிவுசார் விவாத அரங்கம்” மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
கடைசி நாளான 28-ந்தேதி “மகிழ்வன்” என்ற முழுநீள தமிழ்த் திரைப்படம் திரையிடப்பட்டு, சிறந்த படைப்புகளுக்கு, திரையுலக பிரபலங்களிடமிருந்து விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.
பாலின சிறுபான்மையினா் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மக்கள் மன்றத்தின் பார்வைக்கு வைத்து, அவா்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு இந்த மூன்று நாள் திரைப்பட விழா ஓர் உதவியாக அமையும். வணிகமயமாக்கப்பட்ட திரையரங்குகள் மூலம் வெகுசன மக்களை சென்றடையாத இந்தத் திரைப்படங்களை அவா்கள் முன் திரையிடுவதன் மூலம் பாலியல் சிறுபான்மையினா் மீதான தவறான புரிதல்களை களைய இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பது திண்ணம். அதே நேரத்தில் திரைத்துறையில் ஆர்வம் கொண்ட புதிய படைப்பாளிகளின் திறமைகளை (Independent Indian Film makers) அங்கீகரிக்கவும் மாபெரும் வாய்ப்பையும் இவ்விழா ஏற்படுத்தித் தருகிறது.
அமெரிக்கா, கனடா, பிரேசில், ஆஸ்திரேலியா, எகிப்து, மியான்மா், பிரான்ஸ், தாய்லாந்து, ஜொ்மனி, மலேசியா, சிங்கப்பூா், பிலிப்பெயின்ஸ் மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகள் உள்பட உலகின் 70 நாடுகளிலிருந்து, திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் விண்ணப்பித்திருந்தன. குறிப்பாக, உலகின் முதல்முறையாக பொது வாக்கெடுப்பு மூலம் சமபால் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படவுள்ள அயா்லாந்து நாட்டிலிருந்தும் ஏராளமான திரைப்படங்கள் விழாவில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தன.
வரப்பெற்ற திரைப்படங்களை பல்வேறு தளங்களில் பணியாற்றும் கலையுலக பிரமுகா்கள் உள்ளடக்கிய நிபுணர் குழு பார்வையிட்டு; அவற்றிலிருந்து சிறந்த படைப்புகளாக 30 படைப்புகளை தேர்ந்தெடுத்து, திரையிட அனுமதித்துள்ளன.
இத்திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்களைத் தவிர்த்து, ஆங்கிலம் பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீசு உள்பட பல்வேறு உலக மொழித் திரைப்படங்களும் திரையிடப்படுகிறன்றன. அத்திரைப்படங்கள் பாலின சிறுபான்மையினரின் வாழ்கை முறை மற்றும் அவா்கள் சந்திக்கும் பிரச்சனைகளை வெளிக்கொணரும் வண்ணம் அமையும். இத்திரைப்பட விழாவுக்காக நாங்கள் திரைத்துறையில் உள்ள பல்வேறு தரப்பினரையும் அணுகி ஆதரவையும், உதவியையும் கோரியுள்ளோம்.
இத்திரைப்பட விழாவானது, பாலின சிறுபான்மையினா் அடையாளம் மற்றும் பன்முகத்தன்மையை மட்டும் வெளிப்படுத்தும் விழாவாக மட்டுமல்லாமல், அவா்களின் பொறுமை, பெருமை, அன்பு, காதல், சமஉரிமை, எதிர்பார்ப்பு அத்துனைக்கும் மேலாக சமூக அங்கீகாரம் (Social Recognition) பெறுவதற்கு மக்கள் மன்றத்தின் முன்னால் நின்று போராடும் களமாகவும் அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இது மக்கள் மனதில் விழிப்புணா்வையும், எங்களது சமூகத்தின் மீது அன்பையும் ஏற்படுத்தும் திருவிழாவாக அமையும் என்று நிச்சயம் நம்புகிறோம் என்கின்றனர் நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.
Venue:
Auditorium, Madras School of Social Work, 32, CASA Major Rd, Egmore, Chennai
For further details contact Yuvraj 8939436770 or Sasha Reddy 7708647641