‘சைலண்ட்’ திரைப்பட விமர்சனம்

முழுக்க முழுக்க புதுமுகங்களின் ஆதிக்கத்தில் உருவாகி இருக்கிறது இந்தப் படம்.

இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கியுள்ளார். சமயமுரளி திரைக்கதை வசனம் எழுதி உள்ளார்.எஸ் ஆர் ட்ரீம் ஸ்டுடியோஸ் சார்பில், எஸ்.ராம் பிரகாஷ் தயாரித்துள்ளார்.

வணிக ரீதியிலான ராட்சச படங்கள் மத்தியில் சிறிய பட்ஜெட்டில் உருவாகி  கவனிக்கத்தக்க சில படங்களும் வந்து விடுகின்றன .ஆனால் அவை ஓசை இன்றி சென்று விடுகின்றன.
அந்த சிறு பட்ஜெட் படங்களில் எதிர்பாராத ஒரு ஆச்சர்யம் தரும் படமாக வெளிவந்துள்ளது ‘சைலண்ட்’ .

படத்தின் கதை என்ன?

கொலையும் கொலை சார்ந்த விசாரணைகளும் தான் இந்தப் படம். ஒரு பெண் கொலையுடன் படம் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை போலீஸ் விசாரிக்கிறது.விசாரணை தொடங்கும் போது, மேலும் பல கொலைகள் நடக்க ஆரம்பிக்கின்றன. இதன் பின்னணியில் புவனேஸ்வரி எனும் பெண் இருப்பதாக நம்புகிறது போலீஸ் .ஆனால் அது புவனேஷ் எனும் ஆண் என்பது தெரிய வருகிறது. அவனைப் போலீஸ் பிடித்ததா? அந்த கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன ?உளவியல் என்ன? என்பது தான் சைலண்ட் திரைப்படம்.

ஆண் பெண் என்கிற இரண்டு பாலினங்கள் தவிர மூன்றாம் பாலினத்தைப் பற்றிய கவனமோ அக்கறையோ இருக்கிறதா?
சமூகத்தில் அப்பாலினம் கைவிடப்பட்டிருக்கிறதா? என்ன தான் நவீன சமூகமாக மாறினாலும், திருநங்கைகளை நாம் பார்க்கும் பார்வையில் பெரிதாக மாற்றமில்லை என்பது தானே கசப்பான உண்மை? அதை அழுத்தமாகப் பேசும் படைப்பாக சைலண்ட் படம் வந்திருக்கிறது.

இந்தப் படத்தை இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கி உள்ளதுடன் அவரே கதை நாயகனாக நடித்துள்ளார். ஓர் இயக்குநராக மிக அழுத்தமான களத்தைத் தேர்ந்தெடுத்து சுவாரஸ்யம் குறையாமல் படத்தை தந்துள்ளார்.
ஒரு நடிகராக அவரது பங்கு என்ன?
இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டியே நடித்துள்ளார், இயக்கத்தை விட அவர் நடிப்பு பிரமாதம்.

ஒரு கொலை அதை தொடர்ந்து விசாரணை என அடுத்தடுத்த கொலை, என விரியும் திரைக்கதையை அறிமுகப்படத்திலேயே கவனம் பெறும் வகையில் எழுதியுள்ளார் சமய முரளி.அது மட்டுமில்லாமல் ஒரு நடிகராக போலீஸ் கதாப்பாத்திரத்தில் அவரது நடிப்பும் கவனிக்க வைக்கிறது.

மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து என எல்லோரும் கதாபாத்திரத்திற்கேற்ப நடிப்புத் திறனை வெளிப்படுத்தி உள்ளார்கள்

கன்னி முயற்சி என்பதால் இந்த முதல் படத்தில் காணப்படும் சிறு குறைகளைப் புறந்தள்ளி விடலாம்.அதையும் தாண்டி புதிய முயற்சி எனப் பாராட்டத் தோன்றுகிறது.

குறைந்த படெஜெட் என்றாலும் சேயோன் முரளி ஒளிப்பதிவு படக் குறைகளை சமன் செய்கிறது.எடிட்டிங் ஓகே.சமயமுரளி இசையமைத்துள்ளார்.மூன்று பாடல்களும் பின்னணி இசையும்  ரசிக்கும்படி உள்ளன.

படத்தில் கதையில் திரைக்கதையில் எந்தப்பலவீனமும் தென்படவில்லை. ஆனால் உருவாக்கத்துக்கான செலவில் தான் நிதிப் போதாமை தெரிகிறது.அதுதான் படத்தில் ஆங்காங்கே விழும் தடுமாற்றங்களுக்குக் காரணம் என்று கூறலாம்.

சைலன்ட் திரைப்படம்
தமிழ் சினிமாவில் புதிதான திரில்லர் இல்லை தான். என்றாலும் புதிய ரகத்திலான கதையை பார்த்த திருப்தியைத் தரும்.