வாழ்க்கையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜாலி கில்லாடியாக திருடனாக இருப்பவன் ஜப்பான்.அவன் கொள்ளையன் மட்டும் அல்ல ஒரு பார்ட் டைம் சினிமா நடிகனும் கூட. ஆட்டைய போட்ட பணத்தில் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறான்.கோவையில் பிரபல நகைக்கடை ஒன்றில் கொள்ளை போகவே பழி அவன் மீது விழுகிறது.போலீஸ் துரத்த ஜப்பான் ஓட உண்மைக் கொள்ளைக்காரன் யார் என்பதை நோக்கி கதை செல்கிறது.இந்தப் பயணத்தில் நடக்கும் கலவையான சம்பவங்கள் தான் ‘ஜப்பான்’ படத்தின் மீதிக்கதை.
ஜப்பான் என்கிற பாத்திரத்திற்காக தன்னை ஒப்புக் கொடுத்து அதன் நடை உடை பாவனைகளில் பொருந்தி இருக்கிறார் கார்த்தி. இழுத்துப் பேசுவதும் அந்த உடல் மொழியும் ஜப்பானை வேறு விதமான பாத்திரமாக நம் முன் நிறுத்துகிறது.எந்தச் சூழலையும் மிக அனாயாசமாக எதிர்கொண்டு கடந்து செல்லும் காட்சிகளில் அவரது நடிப்பு சபாஷ் போட வைக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் அனு இம்மானுவேலுக்கு அழுத்தமான பாத்திரம் இல்லையென்றாலும் திரைக்கதை ஓட்டத்திற்கு ஏற்ப பயணிக்கிறார்.காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் மில்டன் மற்றும் சுனில் ஆகியோர் பங்களிப்பு படத்திற்குப் பக்கத் துணையாகி உள்ளது. பல காட்சிகளில்சுனில் தன் உடல்மொழியால் சிரிப்பை வரவைக்கிறார் . அவரின் ரீல்ஸ் வீடியோக்கள் ரகளை ரகம்!வாகை சந்திரசேகருக்குப் படம் முழுக்க கார்த்தியோடு பயணம் செய்யும் கதாபாத்திரம்.
சர்ப்ரைஸ் வரவாக வருகிறார் ஜித்தன் ரமேஷ்.இருந்தாலும் பெரிதாகக் கவரவில்லை.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை. ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் ஒளிப்பதிவு இயக்குநரின் கோணத்தில் அமைந்து படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது. சிறிது வெளிச்சத்தில் மழையின் நடுவே எடுக்கப்பட்ட காட்சிகளிலும், மலை சாலைகளில் எடுக்கப்பட்ட சேஸிங் காட்சிகளிலும் சிறப்பான ஒளிப்பதிவைத் தந்துள்ளார் .
வித்தியாசமான சிந்தனைகள் வசனங்கள் அரசியல் பார்வை என்று படத்தில் வெளிப்படுத்தும் ராஜுமுருகன் இந்தப் படத்தில் பிரபல கதாநாயகன் கார்த்திக்கிற்காகச் சில வெகுஜன ரசிப்புக்கேற்ற வசனங்களைச் சேர்த்துப் பயன் படுத்தியுள்ளார்.குற்றவாளிகள் உருவாவதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்கிற கருத்தை முன்வைத்து அரசியலையும் பேசியிருக்கிறார் இயக்குநர் ராஜுமுருகன்.ஒரு பொழுதுபோக்கு படமாக எடுக்க நினைத்தாலும் உண்மை நிலையை சிரிக்கும்படியும், சிந்திக்கும்படியும் சொல்லி , தனக்கே உரிய வசனங்கள் மூலம் அதிகாரத்தை எதிர்த்தும் சமூக அவலங்களை குறித்தும் கேள்வி கேட்கிறார் இயக்குநர். கழிவு நீரிலிருந்து தங்கம் ,சமூகத்தின் அவலங்கள், போலி என்கவுன்ட்டர்கள் போன்ற அதிகம் கவனிக்கப்படாத,பலவற்றை இந்தப் படத்தில் தொட்டிருக்கிறார் இயக்குநர்.நடப்பு அரசியல் பற்றியும் நாட்டு நடப்பு பற்றியும் அவர் சொல்லத் தவறவில்லை.
கொள்ளையனாக இருக்கும் ஜப்பானின் பின்னணிக் கதையை கண் கலங்க வைக்கும் காட்சிகள் மூலம் கூறியுள்ளார்.
எதிர்மறை நிழல் படிந்த பாத்திரமாக இருந்தாலும் அந்தப் பாத்திரத்தின் தன்மையை மறந்து அவரது நடிப்பை ரசிக்க வைத்த விதத்தில் கார்த்தி வெற்றி பெற்றிருக்கிறார்.
ஜப்பான் புதிய கோணத்தில் ஒரு கமர்சியல் படம் என்று கூறலாம்