‘ஜமா’ திரைப்பட விமர்சனம்

சினிமாத்தனம் கலவாமல் வாழ்வியலைப் பேசும் படங்கள் எப்போதாவதுதான் அத்தி பூத்தாற்போல் வரும். அப்படி ஒரு படமாக ஜமாவைக் கூறலாம்.
ஜமா படத்தின் கதை என்ன?

கதை திருவண்ணாமலை மண்ணில் நடக்கிறது.தெருக்கூத்துக் கலையில் ஸ்திரீ பார்ட் அதாவது பெண் வேடம் போடுபவர் பாரி இளவழகன் .மகாபாரத பாத்திரங்களில் அர்ஜுனன் வேடமும் போடுவார்.அவருக்கு தெருக்கூத்து மாஸ்டராக வரவேண்டும் அதாவது பிறருக்குச் சொல்லிக் கொடுத்து ஆசிரியராக வரவேண்டும் என்பது கனவு.
ஆனால் அந்த ஜமாவின் வாத்தியாரான சேத்தன், அவரது வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார் ,அதற்கான செயல்களிலும் இறங்குகிறார்.
தனது கலை வாழ்வின் அனைத்து தடைகளையும் இடையூறுகளையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு கடந்து முன்னே செல்கிறார் பாரி
தனது திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.அவர் எதிர்பார்த்த அந்த வாய்ப்பு கிடைக்கிறதா அவர் ஏன் ஒரு வாத்தியாராக நினைக்கிறார்?என்பதை ஒரு இயல்பான கதை மூலம் இந்தப் படத்தில் கூறி இருக்கிறார் இயக்குநர்.தெருக்கூத்து என்பதை ஒரு மலிவான கலையாக நினைக்காமல் அனைவரும் அதை விரும்பும்படியாக உருவாகி உள்ள படம்தான் ‘ஜமா’.

தெருக்கூத்துக் கலை இன்று நலிவடைந்து வந்தாலும் அதைப்பற்றிய சோக ராகம் பாடாமல் இயல்பாக நகைச்சுவை கலந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாரி இளவழகன்.அவர் இயக்குநர் மட்டுமல்ல கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை ஒரு வெகுஜன படமாக மாற்றிக் கொடுத்துள்ளார்.

நாயகனாக கல்யாணம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாரி இளவழகன், தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் அழுத்தமாகப் பதிகிறார்.
தெருக்கூத்தில் பெண் வேடம் போட்டு ஆடும் போது அவர் வெளிப்படுத்தும் உடல்மொழிகள், அபாரம்.தெருக்கூத்து ஜமாவின் வாத்தியாராக தாண்டவம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேத்தன், நாயகனுக்கு இணையாக நடிப்பில் கவனம் பெறுகிறார்.இந்தப் படம் அவருக்கு ஒரு மைல் கல் தான்.நாயகி அம்மு அபிராமி அதிரடியான கதாபாத்திரத்தில் தைரியமான பெண்ணாக வந்து கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.பாரியின் தந்தையாக ஸ்ரீகிருஷ்ண தயாள், பாரியின் அம்மாவாக மணிமேகலை, பூனையாக வசந்த் மாரிமுத்து உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் அளவான நடிப்பு மூலம் ரசிகர்கள் நினைவில் தங்கிவிடுகிறார்கள்.

இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதம்.அவரது இசையே தெருக்கூத்து கலை மீது ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டுகிறது.

ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணாவின் கேமரா கிராமத்து எளிமையை அழகாகவும் தெருக்கூத்து நாடகங்கள் மற்றும் அதில் நடிப்பவர்களின் உணர்வுகளை மிக நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறது.

தெருக்கூத்து கலை மற்றும் கலைஞர்கள் பற்றிப் பேசி அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் பாரி இளவழகன்,பாராட்டுக்குரியவர் மட்டுமல்ல நம்பிக்கை தரும் திரை இயக்குநராகவும் வெளிப்பட்டுள்ளார்.