இளைய தலைமுறையை இயக்குநர்களிடம் நம்பிக்கை தரும் ஒருவராக வந்துள்ளவர் தான் கார்த்திக் சுப்பராஜ் .நமக்குத் தெரிந்த கதையை தனது கூறுமுறையில் வித்தியாசப்படுத்திக் காட்டி கவர்ந்து விடுபவர் அவர்.அப்படிப்பட்டவர் இயக்கியுள்ள படம் தான் ஜிகர்தண்டா’
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஜிகர்தண்டாவில் சென்னைப் பின்புல ரெளடியை வைத்து படம் எடுக்கும் கதை இருந்தது. இதில் அதே பின்புலம் மதுரையாக மாறியிருக்கிறது.அது தான் ‘ஜிகர்தண்டா டபுள் X’.
ஹாலிவுட் பெயர் பெற்ற காட்பாதர் மற்றும் கௌபாய் திரைப்படங்கள் பின்புலங்களுக்காகப் பேசப்பட்டவை.அதே நிறத்தில் காடு, மலை என்ற சில மசாலா சேர்த்து ஜிகர்தண்டா டபுள் X படத்தை கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.
படத்தின் கதையைப் பொறுத்தவரையில், என்ன சொல்லலாம் என்றால்,போலீஸ் வேலைக்கு சேர ஆசைப்படுகிறார் ரேசராக இருக்கும் எஸ் ஜே சூர்யா.
சந்தர்ப்ப வசத்தால் ஒரு கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டு சிறை செல்கிறார்.மதுரையில் இருக்கும் ராகவா லாரான்ஸ் அதாவது
ஆயிஸ் சீசர் என்கிற ரெளடியைக் கொன்றால் ரேசருக்கு விடுதலை கிடைக்கும். விடுதலை வாங்கித் தந்து போலீஸ் வேலையும் வாங்கி தருவதாகச் சொல்கிறார் காவல் உயர் அதிகாரி. மதுரை சென்று ரௌடியிடம் ‘உன்னைக் கதாநாயனாக வைத்து சினிமா படம் எடுக்கிறேன்’ என்று சொல்லி போட்டுத் தள்ள முயற்சி செய்கிறார் ரேசர். ரேசரின் கனவு பலித்ததா என்பதுதான் மீதிக்கதை.
இது ஒரு ரெளடி -போலீஸ், நீயா நானா கதைதான். ஆனால் சொன்ன விதத்தில் வித்தியாசம் காட்டியுள்ளார் இயக்குநர். முதல் பாதிக்கதை மதுரையைச் சுற்றி நடக்கிறது.இரண்டாவது பாதி சற்று இடம் பெயர்ந்து தேனி மலைப்பகுதியில் நடக்கிறது. இரண்டாவது பாதிதான் படத்தில் உயிரோட்டமாக இருக்கிறது. எழுபதுகளின் பழைய மதுரை தெருக்களை அசலாகத் திரையில் காட்டிஇருக்கிறார் கலை இயக்குநர்.பாடல்களிலும், பின்னணி இசையிலும் மலைவாழ் பழங்குடி மக்களின் பாரம்பரிய இசையைச் சரியாகப் பயன் படுத்தி உள்ளார் சந்தோஷ் நாராயணன்.
ஜிகர்தண்டா டபுள் X ராகவா லாரன்ஸ்க்கு பேய்ப் படத்திலிருந்து விடுதலை பெற்றுத் தந்துள்ளது. அது மட்டுமல்ல அவர் தனது மிகை நடிப்பிலிருந்தும் வெளியே வந்துள்ளார்.வர வைத்துள்ளார் இயக்குநர்.இதுவரை லாரன்ஸ் நடித்த படங்களில் இது மாறுபட்ட பாத்திரம் என்று உறுதியாகச் சொல்லாம். ஒரு காட்டு வாசியாக, ரெளடியாக மாறுபட்ட நடிப்பைக் காட்டியுள்ளார். எஸ்.ஜே. சூரியா தன் பாணியில் இருந்து விலகி அளவாக நடித்துள்ளார்.
லாரன்ஸின் மனைவியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன், பழங்குடிப் பெண் வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். அவருக்கான காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நவீன்சந்திரா, அமைச்சராக நடித்திருக்கும் இளவரசு, சத்யன், ஆகியோரின் கதாபாத்திரமும், அதில் அவர்கள் வெளிப்படுத்திய நடிப்பும் கவனம் பெற வைக்கிறது..
திருநாவுகரசின் ஒளிப்பதிவில் 1970 களின் மதுரை நகர வீதிகளின் ஒளியமைப்பு சிறப்பாகப் பதிவாகியுள்ளது.
எல்லோருக்கும் சினிமா கனவு சினிமா பற்றிய காதல் மோகம் வேட்கை இருக்கும்.வாய்ப்பு வரும்போது சினிமாவினை நல்ல நோக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லமுயன்று இருக்கிறார்.அதை அழுத்தமாகச் சொல்லத் தவறி இருக்கிறார்.
படத்தின் மாறுபட்ட உச்சக்கட்ட காட்சி படத்தில் தோன்றும் சின்னச் சின்ன குறைகளை மறக்க வைக்கிறது.
சினிமா என்பது கதை சொல்வதை விட கதை சொல்கிற விதத்தில் தான் கவனிக்கப் படுகிறது. அந்த வகையில் ஜிகர்தண்டா டபுள் X நம்மைக் கவனிக்க வைக்கிறது.