‘ஜின்’ திரைப்பட விமர்சனம்

முகின் ராவ் ,பவ்யா ட்ரிகா, வடிவுக்கரசி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, ராதாரவி, நிழல்கள் ரவி, வினோதினி, ரித்விக் நடித்துள்ளனர். டி .ஆர் . பாலா இயக்கித் தயாரித்துள்ளார். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார் .தீபக் படத்தொகுப்பு செய்துள்ளார். தினேஷ் குமார் கலை இயக்கம், பிரதீப் தினேஷ் சண்டை பயிற்சி எனப் பணியாற்றி உள்ளனர்.

திரைப்படங்களில் ஒரு சூத்திரம் ஒன்று உண்டு. எதிர்பாராத இடத்திலிருந்து வரும் ஒரு ஜீவன் குடும்பத்தில் அல்லது அந்த பகுதியில் பிரவேசமாகும். வரும் போது முதலில் அதற்கு வரவேற்பு கிடைக்காது. அனைவராலும் புறக்கணிக்கப்படும். பிறகு மெல்ல அவர்கள் உலகத்தில் ஐக்கியமாகிவிடும். அதன் பின் பழகி ஒட்டிக்கொள்வார்கள். பிறகு எதிர்பாராத நேரத்தில் பிரிந்து சென்றுவிடும். அதனால் கலங்குவார்கள். இது ஈ.டி படம் முதல் அஞ்சலி வரை தொடர்கிற ஒரு சூத்திரம். அந்த வகையில் வந்துள்ளது தான் இந்த ‘ஜின் த பெட்’.

செல்லப்பிராணி பற்றிய கதை என்கிற எதிர்பார்ப்பை எழுப்பி உள்ள இந்த படத்தில் ஜின் என்கிற அபூர்வமான ஓர் உயிரினத்தை ஒரு பாத்திரமாக வைத்து எடுத்துள்ளார்கள்.

மலேசியாவில் தொடங்குற கதையில் முகின் ராவ் ஒரு புராதன பொருட்கள் விற்கும் இடத்திற்கு சென்று ஒரு பெட்டியை வாங்கி வருகிறார். அதற்குள் ஜின் இருக்கும். அது அபூர்வசக்தி கொண்டது. அந்த ஜின் உயிரினம் இந்தோனேசியா போன்ற நாடுகளில் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டு வெற்றிகளைக் குவிக்க உதவியிருக்கிறது என்ற விளக்கமெல்லாம் தருகிறார்கள்.

பெட்டிக்குள் இருக்கும் அந்த உயிரினத்துக்கு வெயில் வெளிச்சம் படக்கூடாது தண்ணீரும் படக்கூடாது என்ற நிபந்தனையுடன் வாங்கி வருகிறார்.அதன் உருவத்தை காட்டாமலேயே மர்ம பெட்டி போல் தமிழ் நாட்டுக்குக் கொண்டு வருகிறார். வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் அது பிடிக்கவில்லை. அது வந்ததற்கு பிறகு வீட்டில் ஒவ்வொருவருக்கும் சிறு சிறு விபத்துக்கள் என நடக்கின்றன. இதனால் அதைத் தூக்கி வீச வேண்டும் என்று கூறுகிறார்கள். அதனை ஒரு அபசகுனமாக குடும்பத்தினர் கருதுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் முகின் பவ்யாவை காதலிக்கிறார். திருமணமும் ஆகிவிடுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் வரிசையில் பவ்யாவும் சேர்கிறார். அவருக்கும் அடிபட்டு விடுகிறது. இதனால் முகின் அந்த ஜின்னை தூக்கி வெளியே வீசி விடுகிறார்.
ஆனால் அந்த பவ்யாவை கொலை செய்ய மர்ம மனிதர்கள் தொடர்கிறார்கள். அப்போது ஜின் வந்து உதவி செய்து காப்பாற்றுகிறது. அவர்கள் யார்? முடிவு என்ன? என்பதுதான் ஜின் திரைப்படத்தின் மீதிக்கதை.

முகின் ராவ்- பவ்யா காதல் ஜோடி நல்ல இளமை பொலிவாக வருகிறார்கள் .அந்த வகையில் பொருத்தமான ஜோடி.
முகின்  தோற்றத்தில் நடிப்பில் ஓகே சொல்ல வைக்கிறார். பவ்யா நல்ல தோற்றம் அவருக்கு நடிப்பு வாய்ப்புகள் இன்னும் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

வில்லனாக நடித்திருக்கும் ராதாரவி தனது அனுபவமான நடிப்பு மூலம்   பயணித்திருக்கிறார். நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் இமான் அண்ணாச்சி, பொருந்தாத வேடத்தில் நடித்திருக்கிறார். பாலசரவணன் வரும் காட்சிகள் சில சிரிக்க வைப்பது ஆறுதல்.வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி, சிறுவன் ரித்விக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்திருக்கிறார்கள்.

அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவில்  காட்சிகள்  கலர்புல்.இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம்.

ஆரம்பத்தில் மலேசியாவின் அழகுக் காட்சிகளை காட்டுகிறார்கள். கதை ஜின்னை மையம் கொண்ட பிறகு சற்றே வேகமெடுக்கிறது. ஆனால் எதிர்பார்ப்புகளுக்கேற்றபடி இந்த ஜின்னை மேலும் சுவாரஸ்யப் படுத்திக் காட்டி இருக்கலாம் .குழந்தைகளுக்குப் பிடிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது .