‘ஜீப்ரா ‘திரைப்பட விமர்சனம்

சத்யதேவ், டாலி தனஞ்ஜெயா, சத்யராஜ்,ப்ரியா பவானி சங்கர்,சுனில் வர்மா. சத்யா அக்காலா,ஜெனிபர் பிகினா டா மற்றும் பலர் நடித்துள்ளனர் .எழுதி இயக்கியுள்ளார் ஈஸ்வர் கார்த்திக்.ஒளிப்பதிவு சத்யா பொன்மார், இசை ரவி பஸ்ரூர், எடிட்டிங் அனில் கிருஷ்.தயாரிப்பு எஸ் .என். ரெட்டி, பாலசுந்தரம்.

ஜீப்ரா என்று சொல்லப்படும் வரிக்குதிரையின் உடலில் உள்ள அந்த கறுப்பு வெள்ளைக் கோடுகள் குறி வைத்து எதிரிகள் செய்யும் தாக்குதலிலிருந்து கண்ணாமூச்சி காட்டி அவை தப்பிப்பதற்கான இயற்கை வழங்கி இருக்கும் தகவமைப்பு.அப்படித்தான் இதில் வரும் கதாநாயகன் தனது நெருக்கடிகளைச் சமாளித்து முன்னேறுகிறான் அவன் சிக்கிக் கொள்வானா என்று பார்த்தால் அந்த வரிக்குதிரையின் உடல் வரிகள் போல் எதிரிகளை ஏமாற்றிவிட்டுத் தப்பிக்கிறான்.எப்படித் தப்பிக்கிறான் என்பதுதான் கதை.
வங்கியில் வாடிக்கையாளர் சேவை வேலை பார்க்கும் நாயகன் சூர்யா தனது காதலி செய்து விட்ட ஒரு சிறு தவறை மறைத்துச் சமாளிப்பதற்கு இன்னொரு தவறைச் செய்கிறான். அதாவது காதலி தவறுதலாக இன்னொரு வங்கிக் கணக்குக்கு 4 லட்ச ரூபாய் பணத்தை கிரடிட் செய்து விடுகிறாள். அதைச் சமாளிக்க இவன் ஒரு தவறு செய்கிறான்.அது பெரிய பிரச்சினையில் போய் முடிகிறது .போகப் போக அவன் சம்பந்தப்படாத பல கோடி ரூபாய் மோசடியில் இவன் மாட்டிக்கொள்கிறான்.அதிலிருந்து அவன் வெளியே வந்தானா இல்லையா என்பது தான் இந்தப் படத்தின் கதை.

ஆரம்பத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தனித்தனியே அறிமுகம் செய்து காட்டுவது சற்று சலிப்பூட்டினாலும் கதை போகப்போக முன்னேறி வேகமெடுக்கிறது.

வங்கியின் பணப்புழக்கம், அதை தவறாக பயன்படுத்துவது, வங்கிக் கொள்ளை, ஷேர் மார்க்கெட் போன்ற ஏரியாக்களில் புகுந்து விளையாடுகிறது கதை. கதாநாயகன் எப்படி எல்லாம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறான் சிக்கலில் மாட்டிக் கொள்கிறான், பிறகு வெளியாகிறான் என்ற பாதையில் விறுவிறுப்பான கதையாக மாறிவிடுகிறது.

படத்தில் பாடல் காட்சிகள் தேவையில்லை என்றாலும் இரண்டு பாடல்கள் உள்ளன.அதைக் கடந்து செல்லும் அளவிற்கு விரைவாகக் கதையாக செல்கிறது.

ஒரு கட்டத்தில் நாயகன் சூர்யா நான்கு நாட்களில் ஐந்து கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டியுள்ளது. அதற்காக வங்கியில் லாக்கரை உடைத்துக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறான். அது தவறு தான் என்றாலும் பார்வையாளர்களின் மனம் அவன் வென்றிட வேண்டும் என்று நினைக்கிறது .இதில் தான் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.

நாயகன் சத்யதேவ் பல்வேறு விதமான நெருக்கடிகளைச் சந்திக்கும் தருணங்களை தனது நடிப்பில் வெளிக்காட்டியுள்ளார். நாயகி ப்ரியா பவானி சங்கர் கொடுத்த வேலையைச் சரியாக செய்துள்ளார்.எதிர்மறை நிழல் படிந்த வேடத்தில் ஆதி பாத்திரத்தில் வரும் டாலி தனஞ்ஜெயா வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.இன்னொரு வில்லன் போல் வரும் சுனில் வர்மாவின் பாத்திரம் வில்லத்தனம் செய்து சிரிக்க வைக்க முயற்சி செய்கிறது.

சத்யராஜ் இதில் ஒரு சர்ப்ரைஸ் பாத்திரத்தில் வருகிறார். அவர் கதாநாயகனைச் சுற்றியுள்ள சிக்கல்களிடமிருந்து காப்பாற்ற உதவும் பாத்திரத்தில் வருகிறார்.

கதை சூர்யாவை மட்டும் மையம் கொள்ளாமல் ஆதி பாத்திரத்தையும் பங்கு போட்டுக் கொண்டு சரி பாதி அளவு மையம் கொள்கிறது.

இந்தப் பரபரப்பான படத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் அதன் பின்னணி இசை அமைந்துள்ளது. ஒளிப்பதிவு  இயக்குநர் எதிர்பார்த்த தரத்தில் அமைந்துள்ளது.

வங்கி நடைமுறைகள் பற்றியும் அதன் செயல்முறைகள் நிர்வாக அமைப்புகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் விரிவாகக் காட்டியுள்ளார்கள்.
குறிப்பாக STE எனப்படும் Sorry Typo Error பற்றி அறிபவர்களுக்கு வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும். வங்கி சார்ந்த கதை என்பதற்காக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் நிறைய உழைத்து இருக்கிறார்.
ஒரு முழுமையான நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் கதையை வெளிப்படுத்துகிற படமாக இது இருக்கிறது. இந்த ‘ஜீப்ரா’ பாய்ந்து ஓடும்.