தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் ஜூலை 15-ல் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’.. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். புஷ்பா மற்றும் விக்ரம் படங்களின் வெற்றிக்கு பிறகு இப்படம் வெளியாகிறது.
ராஜாராணி, நையாண்டி படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் பஹத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நசீம் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
வில்லன்களாக இயக்குநர் கவுதம் மேனனும் அவருடன் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்க, திமிரு படத்தில் நடித்த விநாயகன் இதில் மனதை தொடும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவரும் பிரேமம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குநர் அன்வர் ரஷீத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
மலையாளத்தில் ‘ட்ரான்ஸ்’ என்கிற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் ‘நிலை மறந்தவன்’ என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது.

மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு போலிக் கும்பல்.. படித்து வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன்னை அறியாமலேயே இந்த மோசடிக்கு துணை போகிறான். ஒருகட்டத்தில் உண்மை தெரிய வரும்போது அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது.