தமன்குமார், காளி வெங்கட், சந்தான பாரதி, முனீஸ் காந்த், மால்வி மல்கோத்ரா, தலைவாசல் விஜய், பேபி சஃபா, மைத்ரேயா, அருண் கார்த்தி நடித்துள்ளனர்.இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் கேஜி,இசை- சஞ்சய் மாணிக்கம் ,கலை இயக்கம் ராம். அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இந்தப் படம் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சினிமாவில் இயக்குநராகும் முயற்சியில் இருக்கிறார் நாயகன் அஜய் என்கிற தமன்.இவர் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்ல கோவை செல்கிறார். அவரது மனைவியான மால்வி மல்ஹோத்ரா வீட்டில் தனியாக இருக்கிறார்.அப்போது அவர் ஜன்னலில் பார்க்கிற காட்சி அச்சமூட்டுகிறது .ரத்தக்கறை படிந்த கைகள் ஜன்னலில் தெரிகின்றன. கதவைத் தட்டுகின்றன.பயந்து போகும் அவர், பக்கத்து அறையில் உள்ள நண்பர்களை அழைத்துக் கொண்டு வெளியே போய் பார்க்கிறார். அங்கே வெட்டப்பட்டுக் கிடக்கும் காளி வெங்கட்டைப் பார்க்கிறார்., தன்னுடைய மகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும், அதற்காக 57 கோடி ரூபாயை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வைத்திருப்பதாகவும், அந்த பணத்தை எடுத்து தன் மகளைக் காப்பாற்றுமாறு கூறிவிட்டு இறந்து போகிறார்.
அந்தப் பணம் இருந்தால் தங்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என நினைக்கிறார்கள்.வெளியூர் சென்ற அஜய்யையும் இணைத்துக் கொண்டு மறுநாள் அனைவரும் தொழிற்சாலை செல்கிறார்கள்.அங்கே எதிர்பாராத எதிர்பாராத திக் திக் திருப்பங்களும் சம்பவங்களும் நடக்கின்றன.அவர்களுக்கு 57 கோடி ரூபாய் கிடைத்ததா? காளி வெங்கட் குழந்தை என்ன ஆனது? அவரை வெட்டியது யார்? என்ற பல்வேறு கேள்விகளுக்கான பதிலைச் சொல்வதே ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் மீதிக் கதை.
இயக்குநராக முயற்சிக்கும் நாயகன், பேய்க் கனவு மட்டுமே காணும் அவரின் மனைவி, குழந்தையைக் காப்பாற்ற எம்.எல்.ஏ. பணத்தைத் திருடும் காளி வெங்கட் என முதல் பாதியின் தொடக்கம் விறுவிறுப்பு.இனி கதையில் பெரிய திருப்பம் வரும் என்று எதிர்பார்த்தால் இடைவேளை வரை சற்று சோர்வூட்டுகிறது.
படத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் பைபிளில் வரும் சாத்தான் என்று சொல்லப்படும் லூசிபர் கதையை கொஞ்சம் கூறியிருக்கிறார்கள்.சாத்தான்களின் அரசனான லூசிபர் உலகை ஆள நினைக்கிறான் என்றெல்லாம் கூறுகிறார்கள். இதனால் படத்தின் மையக்கதை என்ன என்று குழம்பிப் போகிறோம்.
அஜய் இயக்குநராவது முக்கியமா? அல்லது லூசிபர் பூமியை ஆள்வது முக்கியமா? அதன் விளைவுகள் என்ன என்பதை அடுத்த பாகத்தில் எடுப்பார்களா? காத்திருக்க வேண்டும் .
திகில் படத்துக்கென்றே சில சட்டகங்களும் தளவாடப் பொருட்களும் உள்ளன.அந்தக் கச்சாப் பொருட்களை வைத்து தான் பெரும்பாலான திகில் படங்கள் உருவாகின்றன.அப்படித்தான் இதில் வரும் பாழடைந்த தொழிற்சாலை, ஏகாந்தமான இரவு ,பயமுறுத்தும் பேய்க் கனவு மட்டும் காணும் நாயகி என்ற சில விஷயங்கள் வைத்துள்ளார்கள். அதை ரசிக்கும்படியும் எடுத்துள்ளார்கள்.
ஒரே ஒரு இணைப்பு கொடுத்தாலேயே தொழிற்சாலை முழுக்க லைட் எரிகிறது. உடன் வந்த நண்பர்கள் ஒவ்வொருவராக இறந்தாலும் எச்சரிக்கைஅடையாத நாயகன், தொழிற்சாலையில் உள்ள பணத்தை நாய் காவல் காப்பது, கர்ப்பிணிப் பெண்ணை பணம் கொள்ளையடிக்க அழைத்துச் செல்வது என்று நம்பதற்கரிய முரண்பாடான காட்சிகள் வருகின்றன.
நாயகனாக நடித்துள்ள தமனுக்கு இந்தக் கதை அவரது யானைப் பசிக்கு சோளப்பொரி போன்றது.பெரிதாக அவருக்கு நடிப்பு வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அமையவில்லை.அவரின் மனைவியாக நடித்துள்ள மால்வி மல்ஹோத்ரா தூக்கத்தில் திடுக்கிட்டு எழும் எழும்போதும் பயந்து பீதியில் அவறும் போதும் அவரது பயம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.
காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, முனீஷ்காந்த் போன்ற அனுபவசாலிகள் வருகிறார்கள். அவர்களைக் குறைந்த அளவிலேயே பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
காமிரா, கலை இயக்கம் கவனிக்க வைத்தாலும் கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தொகுப்பு, வசனம் ஓகே ரகம்.
பணம், பேய், லூசிபர் என வெவ்வேறு விஷயங்களை ஒரே கதைக்குள் கொண்டு வந்து கதை பின்னி இருக்கிறார்கள்.திரைக்கதை ஒரே நேர்கோட்டில் சென்று அழுத்தமாக சொல்லப்பட்டிருந்தால் இந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் முழுமையாக அச்சமூட்டும் படமாகவே அமைந்திருக்கும்.


